பொன்னியின் செல்வன்
நாவலை குறைந்த பட்சம் பத்து முறையாவது படித்தவன் நான். என் வாசிப்புக்கு ஊக்கம் கொடுத்த
முக்கிய நூலாக பொன்னியின் செல்வனையும் முக்கிய எழுத்தாளராக சுஜாதாவையும் சொல்வேன்.
அந்த அடித்தளத்தில்தான் தொடங்கியது என் வாசிப்பு. பிறகு சீரியஸான விஷயங்கள் தொடர்பாக
கவனத்தை திருப்பியது ராகுல சாங்குருத்தியாயனின் “வோல்கா முதல் கங்கை வரை” யும் ஃபிடல்
கேஸ்ட்ரோவின் “வரலாறு என்னை விடுவிக்கும்” நூல்களும்.
பொன்னியின் செல்வன்
நாவலை பல முறை படித்தவனாக இருந்தும் திரைப்படமாகப் போகிறது என்ற செய்தி அப்படி ஒன்றும்
உற்சாகத்தைத் தரவில்லை.
அதற்கு முக்கியமான
காரணம் இரண்டு.
ரோஜா தொடங்கி, பம்பாய்,
உயிரே என்று எடுத்துக் கொண்ட பிரச்சினைகளில் ஆதிக்கம் செலுத்தும் ஆட்சியாளர்களுக்காக
சமரசம் செய்து கொண்டு உண்மைகளை திரித்துக் கூறிய மணிரத்னம்.
கட்சி ஆபீஸில் சுந்தர்
ராமசாமியை கொலை செய்ய லீகல் ஒப்பினியன் வாங்கிக் கொண்ட, கள்ள ஓட்டு போட 60 லட்ச ரூபாய்
கொடுப்பது போல வஜனம் எழுதிய பு.மா ஆஜான்.
அதனால் படம் சூப்பராக
இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்லை. அதனால் எந்த ஏமாற்றமும் இல்லை.
பூமணியின் “வெக்கை”
நாவலை “அசுரன்” என்று செழுமைப்படுத்திய வெற்றிமாறன் அல்ல, மணிரத்னம். சிதைக்காமல் இருந்தாலே
போதும் என்ற உணர்வுதான் இருந்தது.
சரி, இப்போது படத்துக்கு
வருவோம்.
நல்ல அம்சங்கள்.
பெரும்பாலான பாத்திரங்களுக்கு
நடிகர், நடிகையர் பொருந்தி இருந்தனர். ஆதித்த கரிகாலனுக்கு விக்ரம், வந்தியத் தேவனுக்கு
கார்த்தி, அருண்மொழி வர்மனுக்கு ஜெயம் ரவி, குந்தவைக்கு த்ரிஷா, நந்தினிக்கு ஐஸ்வர்யா
ராய், சின்ன பழுவேட்டரையருக்கு பார்த்திபன், மதுராந்தகனுக்கு ரஹ்மான், ஆழ்வார்க்கடியானுக்கு
ஜெயராம், திருக்கோயிலூர் மலையமானாக லால், கடம்பூர் சம்புவரையராக நிழல்கள் ரவி ஆகியோர்
கச்சிதம். இவர்கள் அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்கள். சுந்தர சோழன் பிரகாஷ்ராஜின்
தாடியை சவரம் செய்திருக்கலாம். அதே போல பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்திற்கு சத்யராஜ்
அல்லது நெப்போலியன் பொருந்தியிருப்பார்கள். ஒட்டு மொத்த சோழ நாட்டின் நிகழ்வுகளையும்
தன் விரல் நுனியில் வைத்திருக்கும் அமைச்சர் அநிருத்த பிரம்மராயர் ஏனோ இங்கே பஞ்சத்தில்
அடிபட்ட தோற்றத்தில் உள்ளார். பூங்குழலி பாத்திரத்திற்கு நயன்தாரா பொருத்தமாக இருந்திருப்பார்.
பொன்னி நதி பார்க்கனுமே
என்ற முதல் பாடலைத் தவிர மற்ற பாடல்களும் பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு பொருத்தமாகவே
இருந்தது. அந்த முதல் பாடலின் “ ஈமாரி, எச மாரி” வரிகள் “குச்சி குச்சி ராக்கம்மா”
பாடலை ஏனோ நினைவுபடுத்தியது. மற்ற பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு.
கொஞ்சம் பாகுபலி தாக்கம்
இருப்பினும் கலை இயக்கம் சிறப்பு.
ஒளிப்பதிவு அற்புதம்,
ஒலிப்பதிவும் கூட, ,மணிரத்னம் படங்களில் வசனம் காதில் விழுவதே ஒரு அதிசயமல்லவோ!
இப்போது பலவீனங்களை
பார்ப்போம்.
நாவலை மாற்றுவதற்கு
இயக்குனருக்கு படைப்புச் சுதந்திரம் உண்டு என்பது உண்மையே. ஆனால் அந்த படைப்புச்சுதந்திரம்
இங்கே திரைப்படத்திற்கு நியாயம் செய்துள்ளதா?
தஞ்சை செல்லும் வழியில்
கடம்பூரில் தங்கும் வந்தியத்தேவன் யதேச்சையாகத்தான் சிற்றரசர்களின் சதியை அறிவான்.
ஆனால் இங்கோ ஆதித்த கரிகாலனுக்கே அந்த சதி தெரிந்து விபரங்களை அறிந்து வருமாறு வந்தியத்
தேவனிடம் சொல்கிறான். அதனால் அந்த மாளிகைச் சதி உருவாக்க வேண்டிய சஸ்பென்ஸ் அடிபட்டு
விட்டது.
தஞ்சையில் சிற்றரசர்கள்
கூட்டம் நடக்கையில் குந்தவை உள்ளே புகுந்து என் சகோதரர்களுக்கு உங்கள் மகள்களை திருமணம்
செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளேன் என்று சொல்லி விட்டு ஏதோ குழப்பத்தை உருவாக்கிய பெருமிதத்தோடு
வானதியிடம் பேசியபடி நடந்து போகும் காட்சி,
இறுதிப் போட்டியின் இடைவேளையில் அணியின் வீராங்கனைகளை கண்டபடி திட்டி விட்டு
“கொளுத்திப் போட்டிருக்கேன். இன்னும் நாப்பது நிமிஷத்துக்கு புள்ளிங்க தீயா விளையாடும்”
என்று விஜய் நயன்தாராவிடம் சொல்லும் பிகில் படக் காட்சியைத்தான் நினைவு படுத்தியது.
இரண்டும் மொக்கைக் காட்சிகள்தான். அட்லி சுட்ட ரொட்டியை மணியும் சுட்டு விட்டார்.
படத்தின் மிகப் பெரிய
குறையாக நான் கருதுவது துண்டு துண்டாக தொடர்ச்சியில்லாமல் வரும் காட்சிகள்தான். பூங்குழலி
போன்ற பாத்திரங்களுக்கு சரியான அறிமுகம் இல்லை. படத்தின் நீளம் காரணமாக இருக்கலாம்.
இலங்கையில் நடக்கும் சண்டைக்காட்சியையும் இறுதியாக கப்பலில் நடக்கும் சண்டைக் காட்சியை
சுருக்கியிருந்தால் முக்கியமான செய்திகளை சொல்லி இடைவெளிகளை தவிர்த்திருக்கலாம். கருத்திருமன்
நாவலில் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் கதாபாத்திரம். இங்கே அந்த பெயர் மட்டும்
படகோட்டிக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது.
அதே போல மணிரத்தினம்
பெரும்பாலான காட்சிகளை அவரது வழக்கமான பாணியில் இருட்டிலேயே எடுத்துள்ளார், அவை அவசியமற்றது
என்ற போதிலும். ஆஜான் வசனம்- பாராட்டவும் ஏதுமில்லை, திட்டவும் ஏதுமில்லை.
ஒரு முறை பார்க்கலாம்
என்ற அளவிலான படம்தான். அதுவும் நடிக நடிகையர்களுக்காக.
தமிழனின் பெருமையா?
இந்து மன்னனின் பெருமையா என்றெல்லாம் சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த அளவு சர்ச்சைக்கான
விஷயம் எதுவுமே படத்தில் இல்லை என்பதுதான் யதார்த்தம். நாவலும் அன்றைய மக்களின் வாழ்க்கையைப்
பற்றிப் பேசவில்லை. திரைப்படமும் பேசவில்லை.
அது மட்டுமல்ல
ராஜராஜசோழனின் சிவப்பற்றை
வெளிப்படுத்தும் அளவிற்கு காட்சிகள் இல்லை என்ற விமர்சனம் வேறு ஓடிக் கொண்டிருக்கிறது.
அவர்கள் நாவலைப் படிக்காதவர்கள் என்றே சொல்வேன். அரியணையை கைப்பற்றுவதற்கான சூழ்ச்சி
மட்டுமே நாவலின் கருப்பொருளே தவிர பக்தியின் மேன்மையை சொல்வது அல்ல. செம்பியன்மாதேவி
மற்றுமே சிவ பக்தராக காண்பிக்கப்படுவார். மதுராந்தகனின் பக்தி கூட அன்னையால் திணிக்கப்பட்ட
ஒன்றுதான்.
கதாபாத்திரங்கள் விபூதி
அணியவில்லை என்று ஒரு விமர்சனம் வந்தது. அப்படியெல்லாம் இல்லை. அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும்
மதச் சின்னங்களோடுதான் இருக்கிறார்கள். பிறகு புதிய சர்ச்சை வந்தது. விக்ரம், ஜெயம்
ரவி பிரகாஷ்ராஜ் போன்ற அரச குடும்பத்தினர் சிறிய அளவில் திருநூறு அணிந்திருக்கையில்
அவர்களுக்கு எதிராக சதி செய்யும் வில்லன் கதாபாத்திரங்களான சிற்றரசர்கள் பெரிய அளவில்
விபூதி பூசியிருப்பது போல வைத்திருப்பதும் உள் நோக்கமுடையது என்ற குற்றச்சாட்டும் வந்தது.
இந்திய ஜனநாயகத்திற்கு,
மக்கள் ஒற்றுமைக்கு, மத நல்லிணக்கத்திற்கு, சாமானிய மக்களின் மேம்பாட்டிற்கு எதிரான
வில்லன்களான பாஜக கட்சியினரும் தங்களை பக்தர்களாகத்தானே காண்பித்துக் கொள்கிறார்கள்.
இந்த உண்மை அவர்களை சுடுகிறது போல!
No comments:
Post a Comment