வாரம் ஒரு நூல் அறிமுகம்.
இந்த வாரம் 19.09.2022
நூல் : மார்க்ஸ் – சில தெறிப்புக்கள்
ஆசிரியர் : தோழர் இரா.இரமணன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
சென்னை -18
விலை : ரூபாய் 35.00
அறிமுகம் செய்பவர் : எஸ்.ராமன், வேலூர்
பேராசான் காரல் மார்க்ஸின் பன்முகப் பரிமாணங்களை பதிவு
செய்துள்ள சிறு நூல் இது. மார்க்ஸ் எழுதிய கவிதைகள், அவர் ரசித்த கவிதைகள், அவர்
மேற்கோள் காட்டிய புராண சம்பவங்கள், மார்க்ஸின் இறுதிக் கால தருணங்கள் என நான்கு
பகுதிகளாக இந்நூல் அமைந்துள்ளது.
ஜெர்மானிய மக்களைப் பற்றி அவர் எழுதிய
புயலுக்குப் பின்னே
இங்கும் அங்கும் இடிக்கும் புயலுடன்
கறுத்த சோகம் கப்பிய மேகங்கள்
வானத்தில் திரளும்.
முட்டாள்களாய் வாய் மூடி
நாற்காலியில் அமர்ந்து
அவதானிக்கும் ஜெர்மானிய மக்கள்,
சாரைப் பாம்பென சீறிச் செல்லும்
மின்னல் வெட்டுக்கள்,
ஆயினும் அடங்கிக் கிடக்கும்
அவர்கள் உணர்ச்சிகள்,
வாழ்த்துமுகமாய் சூரியனும்
தென்றலாய் காற்றும்
அடங்கும் புயலும்
கண்டு சற்றே உயிர்ப்புற்று
“முடிந்தது குழப்பம்” என்று
முடிவுரை எழுதுவர்.
என்ற கவிதை இன்றைய இந்திய மக்களின் நிலைக்கும் கச்சிதமாக
பொருந்துகிறது என்று நூலாசிரியர் கச்சிதமாகவே குறிப்பிட்டுள்ளார்.
தன் மனைவி ஜென்னிக்கு அவர் எழுதிய
காதல் உன் காலடியில் சமர்ப்பிக்கும்
இந்த ஏழையின் பாடல்கள்
அனைத்தையும் எடுத்துக் கொள்.
அதில்
யாழின் முழு இனிமையுடன்
ஒளிரும் கதிர்களுடன்
தளையேதுமின்றி என் ஆத்மா
உன்னை நெருங்கிடும்.
என்ற கவிதை அவர் கவித்திறனுக்கோர் சான்று.
இலக்கிய புராண மேற்கோல்களை மார்கஸ் எவ்வாறு பயன்படுத்தினார்
என்பதை இரண்டாவது அத்தியாயம் எடுத்துரைக்கிறது.
“மத்தியக் காலத்தில் ஜெர்மனியின் ஆளும் வர்க்கத்தின்
கொடுமைகளுக்கு பழி வாங்குவதற்காக “Vehngericht” என்ற பெயரிலொரு ரகசிய நீதிமன்றம்
இருந்தது. ஒரு வீட்டுச்சுவரில் சிகப்பு நிறத்தில் சிலுவைக்குறி போடப்பட்டிருந்தால்
அதன் உடைமையாளரை Vehm ஒழிக்கப்போகிற்து என்பதை மக்கள் அறிந்து கொண்டார்கள்.
ஐரோப்பாவில் இன்று எல்லா வீடுகளிலும் சிகப்புச் சிலுவைக்குறி
போடப்பட்டிருக்கிறது.வரலாறுதான் நீதிபதி. தண்டனையை நிறைவேற்றுபவர் பாட்டாளி
வர்க்கம்” என்று மார்க்ஸ் எழுதியுள்ளார்.
அதே போல
தாந்தேயின் “டிவைன் காமெடி” காப்பியத்தில் நரகத்தின்
நுழைவாயிலில்
“இங்கே அவநம்பிக்கைகள் அனைத்தையும் விட்டொழியுங்கள்!
கோழைத்தனம் அனைத்தையும் இங்கே மாய்த்தொழியுங்கள்!
என்று எழுதப்பட்டிருந்ததாம். அதைப் போல விஞ்ஞானத்தில் நுழைவாயிலிலும்
எழுதப்பட வேண்டும் என்கிறார் மார்க்ஸ்.
மேலே சொன்னது போல சுவாரஸ்யமான மேற்கோள்களை ஆசிரியர் நூலில்
தொகுத்துள்ளார்.
மார்க்ஸின் சமகாலத்திய இலக்கியவாதியும் சமூக சிந்தனையாளருமான
ஹைன்ரிக் ஹைனாவிற்கும் மார்க்சிற்குமான நட்பு மற்றும் முரண்பாட்டை மூன்றாவது அத்தியாயம்
விவரிக்கிறது. ஹைனாவின் நீண்ட கவிதையையும் மார்க்ஸ் பயன்படுத்தியுள்ளார். அந்த
நீண்ட கவிதையை நூலைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
டேவிட் ரியாசினோவ் எழுதிய நூலில் மார்க்ஸின் கடைசி காலத்தைப்
பற்றி எழுதப்பட்டதன் தமிழாக்கம் நான்காவது அத்தியாயமாக அமைந்துள்ளது. மூலதனத்தின்
இரண்டாவது பாகத்தின் வேலைகள் மார்க்ஸின் உடல் நலன் காரணமாக பாதிக்கப்பட்ட போது “
விலங்குகளைப் போல இருக்க விரும்பாத எந்த மனிதனுக்கும் வேலை செய்ய முடியாமல்
முடக்கப்பட்ட நிலை ஒரு மரண தண்டனைதான்” என்று மார்க்ஸ் சொன்னாராம். எப்பேற்பட்ட
மகத்தான மனிதர் மார்க்ஸ் என்பதற்கு
இதைக்காட்டிலும் வேறு உதாரணம் வேண்டுமோ!
செவ்வானம்
No comments:
Post a Comment