Saturday, October 29, 2022

கோவை சம்பவம்- வினாக்களும் விடைகளும்

 கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக பாஜக கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறது, அவர்களின் உட்கட்சி மோதல் வேறு ஏதாவது செய்தே ஆக வேண்டிய சூழலில் பந்த் நாடகம் நடத்த வேண்டியுள்ளது. 

இச்சர்ச்சை தொடர்பாக எங்கள் சேலம் கோட்டத் தலைவர்,  தோழர் ஆர்.நரசிம்மன் எழுதிய பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அவசியம் முழுமையாக படியுங்கள். முக்கியமான ஒன்று. 



இன்று ஒரு சிலரால் திட்டம் மிட்டு பரப்பப்பட்டும் பிரச்சாரம்....அதை ஒட்டி மக்கள் மத்தியில் சாதாரணமாக வரும் கேள்விகள்? அதற்கான உண்மைகள்!

கேள்வி: கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பை தடுத்திருக்க முடியாதா ?
உண்மை : நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் உளவுத்துறை சில நேரங்களில் விஷயங்களை கணிப்பதில் ஏற்படும் கால தாமதம் கூட இது போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தும். 90% முன்கூட்டியே தடுக்கப்படுவது தான் உண்மை. 10% மிஸ் ஆவதை யாரும் தவிர்க்க முடியாத ஒன்று. இருப்பினும் அதன் பாதிப்பு பெரியது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

கேள்வி:காவல் துறை தோல்வி என்று எடுத்து கொள்ளலாமா?
உண்மை: நிச்சயமாக இல்லை. கார் குண்டு வெடித்த இடத்தில் இந்த நிகழ்ச்சியில் நடக்க காரணமே காவல் துறை செக்போஸ்ட் அங்கு இருந்ததால் தான். செக்போஸ்ட் ஒரு வேலை அங்கு இல்லாமல் இருந்திருந்தால் இந்த கார் குண்டு வேறு எங்காவது மக்கள் கூட்டம் மத்தியில் வெடித்திருக்கும். செக் போஸ்டை பார்த்து பீதியில் தான் கார் சிக்கிக் கொண்டது. ஆகவே காவல்துறை எச்சரிக்கையாக இருந்திருக்கிறது. ஆனால் இந்த சம்பவத்தை சரியாக கணிக்க முடியவில்லை என்று பார்ப்பது தான் சரி.

கேள்வி: மாநில அரசு பிரச்சினையை மூடி மறைக்க பார்கிறதா ?
உண்மை: எப்படி சாத்தியம். எந்த ஒரு அரசும் அப்படியே மூடி மறைக்க முடியாது. மீடியா வெளிச்சம் எதிர் கட்சிகள் என இந்த விவகாரம் வெளியே வந்துவிடும் என்று கூடவா மாநில அரசுக்கு தெரியாது. ஆகவே அரசு இதை மென்மையாக சொல்ல வருவதாக சித்தரிக்கும் போக்கு கற்பனை. எந்த மாநில அரசும் டவுன் பிலே செய்ய முடியாது.

கேள்வி: திமுக அரசு முஸ்லிம் வாக்கு வங்கியை மனதில் கொண்டு இதை மென்மையாக கையாள்கிறது என்ற விமர்சனம்?
உண்மை: இது கற்பனை. எந்த ஒரு அரசும் அப்படி செய்ய முடியாது. காரணம் இது தீவிரவாத செயல். இதை மென்மையாக கையாண்டால் இது தொடரும். அதுவே மாநில அரசிற்கு தலைவலி ஆகும். ஏன் அரசே கூட கலைக்கப்பட்டு விடும் என்று மாநில அரசுக்கு தெரியாதா. 

மேலும் ஒரு வாதத்திற்கு அப்படியே வைத்துக் கொள்ளலாம்...காவல்துறை உளவுத்துறை எல்லாம் சம்மதிக்குமா. அப்படி அவை சம்மதிக்க முன்வந்தாலும் மத்திய அரசின் உளவுத்துறை விட்டு விடுமா. இதைத் தாண்டி பத்திரிகை எதிர் கட்சி என எல்லாம் இருக்கும் போது இது அபத்தமான சிந்தனை. மேலும் மாநில அரசு மென்மையாக இருந்தால் டிஜிபியே நேரில் போவாறா ? 12 மணி நேரத்தில் காவல்துறை குற்றவளாகிளை கைது செய்ய முடியுமா ? 

கேள்வி: முதலில் என்.ஐ.ஏ விசாரணை பற்றி சொல்லாத தமிழக அரசு திரு அண்ணாமலை கூறிய உடன் என்.ஐ.ஏ விசாரணைக்கு இறங்கி வந்தது ஏன்?
உண்மை: இது கிராமத்தில் சொல்லும் பழமொழி மாதிரி... காக்காய் உட்கார பணம் பழம் விழுந்த மாதிரி. மாநில அரசு முதல் கட்ட அடிப்படையான விசாரணையை செய்து அதில் தேவை இருந்தால் என்.ஐ.ஏ விடம் தருவது தான் நியாயம். எதுவுமே செய்யாமல் கேசை என்.ஐ.ஏ விடம் கொடுத்தால் அப்போது இதே அண்ணாமலை என்ன சொல்வார் பூர்வாங்க விசாரணை கூட செய்ய தவறிய மாநில அரசு என்று சொல்வார். 

தமிழக அரசு முதல் கட்ட விசாரணையில் இதில் தமிழகத்தை தாண்டிய தொடர்புகள் இருக்கும் என்று கணித்தவுடன் என்.ஐ.ஏ விடம் கேசை வழங்க முடிவு செய்துள்ளது. இது தான் சரி. ஒரு வேலை வெறும் தமிழக தீவிரவாத குழு என்றால் மாநில போலீஸே இதை கையாண்டு இருக்கும். ஆக தேவைக்கு ஏற்ப தான் முடிவு. 

இந்த தொடர்புகளை உறுதிப் படுத்த பத்து நாள் ஆகி இருந்தால் பத்து நாள் கழித்து இந்த முடிவு வந்திருக்கும். இரண்டு மூன்று நாளில் தெரிந்ததால் தற்போது வந்துள்ளது அவ்வளவே. இது தான் யதார்த்தம். சொல்லப் போனால் தமிழக காவைல்துறை ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு நிகரானது என்று பல்வேறு வழக்குகள் விசாரணையில் நிரூபித்துள்ளது. இந்த வழக்கில் கூட மிகவிரைவில் குற்றவாளிகள் பற்றி பல்வேறு தகவல்களை ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளது. என்.ஐ.ஏ. வசம் வழக்கு போனால் கூட தமிழக காவல்துறை உதவி தேவைப்படும் என்பது உறுதி.

கேள்வி: குண்டு வெடிப்பை ஒரு சிலர் எதிர் வினை என்று சொல்கிறார்களே ?
உண்மை: இது அபத்தமான சிந்தனை. ஆனால் இந்த கூற்றில் ஒரு பகுதி உண்மை. வேலை இல்லாத முஸ்லிம் இளைஞர்கள் சில மதவாத சக்திகளால் மூளைச்சலவை செய்து பணத்திற்காக...மதவெறி போர்வையில் தவறாக வழிநடத்தப்பட்ட தால் தான் இவை நிகழ்கிறது. இதற்கு அவர்கள் கைகாட்டும் காரணம் பெரும்பான்மை மதவாதத்தினால் அவர்கள் அடைந்த பாதிப்பு என்று.

ஆனால் ஒரு கொலைக்கு மற்றொரு கொலை தீர்வாகாது. எவ்வளவு தான் நியாயம் இருந்தாலும் தீவிரவாத செயல் தீர்வு அல்ல. ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பான்மை மதவெறி தீவிரவாதம் சிறுபான்மை மத வெறி தீவிரவாதம் இரண்டும் ஒடுக்கப்பட்ட வேண்டியதே. 

மக்கள் உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அப்படி வன்முறை மூலமாக அப்பாவிகளை கொன்று குவிக்கும் கூட்டம் எதுவானாலும் ஒடுக்கப்பட வேண்டியதே. தண்டிக்கப் பட வேண்டியதே.

எளிமையாக சொல்லப் போனால் இவர்கள் மதச் சாயம் பூசிய தீவிரவாதிகள். அவ்வளவே. 

கேள்வி: இது போன்ற தீவிரவாத செயல்களை ஆதரித்து பேசுவோர்?
உண்மை: சந்தேகம் இன்றி அவர்கள் தீவிரவாதிகளே. எந்த மதத் தீவிரவாதத்தை யார் ஆதரித்தாலும் அவர்கள் தீவிரவாதிகளே.  அவர்கள் இந்து முஸ்லிம் என்று சொல்லக்கூடாது தீவிரவாதிகள் என்றே சொல்ல வேண்டும். தீவிரவாதிகளுக்கு மதம் ஏது. அவர்கள் வன்முறையாளர்கள். மக்கள் உயிரை பறிக்கும் எமன்கள். இந்த எமன் எந்த மதமாக இருந்தாலும் எமன் எமன் தானே .

கேள்வி: இது போன்ற தீவிரவாத செயல்களை தடுக்கு சட்டம் கடுமையாக வேண்டும்?
உண்மை: சட்டத்தை  கொண்டு தவறு நடந்தவுடன் தண்டிக்க முடியும். ஆனால் தவறே நடக்காமல் தடுக்க முடியாது. தற்போது கூட தூக்கு தண்டனை வரை தீவிரவாத செயல்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் குற்றம் குறையவில்லையே ? தடுக்க இருக்கும் ஒரே வழி நல்ல மனிதர்கள் கையில் உள்ளது. மதங்களை தாண்டி மனித நேயம் காக்க வேண்டும். அடிப்படையில் அன்பு தான் இணைக்க முடியும். ஆகவே இரு தரப்பிலும் உள்ள நல்ல மனிதர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். சில நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறர் நம்பிக்கையை மதித்து நடக்க வேண்டும். ஒருவர் பண்டிகையில் மற்றோரு பகுதி கலந்து கொள்ள வேண்டும். இது போன்ற இணக்கமான செயல்பாடு தான் நீண்ட கால பலனை தரும். 

அரசு தரப்பில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதின் மூலமாக தீவிரவாதத்தை நோக்கி வேலை இல்லாத இளைஞர் பட்டாளம் செல்லாமல் தடுக்க முடியும்.

இல்லை என்றால் இளைஞர்கள் தவறாக வழிநடத்தும் நிலை தொடரும். இதனால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. ஒரு சில அரசியல் இயக்கங்களுக்கும் அதன் தலைவர்களும் தவிர...

கேள்வி: தீவிரவாத செயல்களே இல்லாத தேசம் சாத்தியமா ?
உண்மை: சாத்தியம். எல்லோருக்கும் வேலை கிடைத்தால் அவர் நல்ல முறையில் வாழ குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கவே விரும்புவார்கள். அது இல்லாத போது தான் சில குள்ளநரி கூட்டங்களிடம் சிக்கி கொள்கிறார்கள்.

இந்த குள்ளநரி கூட்டம் இந்த சாமானிய இந்தியனை தனது தேவைக்காக பலிகடா ஆக்கி விடும். 

 இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.‌ஆகவே வேலை வாய்ப்பு அவசியம். அடுத்த சமூகத்தில் இணக்கமான முறையில் வாழ அரசு வழிவகை செய்ய வேண்டும். எந்த மதவெறி தலைதூக்கினாலும் கடுமை காட்ட வேண்டும். அரசுகள் பாரபட்சம் இன்றி செயல்படுகின்றன என்ற நம்பிக்கை சாமானிய மக்களுக்கு வரவேண்டும். 
ஜனநாயக நாட்டில் அனைத்து மதநம்பிக்கைகளுக்கு ஏன் மதநம்பிக்கையே இல்லாத வர்களுக்கு ம் சம வாய்ப்பு தருவதும் அவர் அவர் நம்பிக்கைக்கு சட்டத்தின் படி  மதிப்பு அளிப்பதும் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதும் அரசின் கடமை.

இந்த முயற்சி ஒரளவு  வெற்றி பெற்றாலே தீவிரவாத அமைப்புகள் தங்கள் கூடாரத்தை மாற்றிக் கொள்ளும்.

மேலே உள்ள கேள்விகள் தவிர ஒரு முக்கிய கேள்வி இருக்கிறது...

வாதத்திற்கு மாநில உளவுத்துறை தோல்வி கண்டது என்று வைத்துக் கொள்வோம் !  சில நாட்கள் முன்பு பிஎப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதன் எதிரொலி கோவையில் இருந்தது. இந்த பின்புலத்தில்  அறிந்த மத்திய உளவுத்துறை எப்படி கோட்டை விட்டது. தமிழக அரசு முஸ்லிம் தீவிரவாதிகள் மீது மென்மையான அணுகுமுறை கொண்டுள்ளது என்ற வாதத்தை வைப்போர் மத்திய அரசை பற்றி மத்திய உளவுத்துறை தோல்வி பற்றி ஏன் பேசவில்லை?  ஆக யதார்த்தமான உண்மை என்னவென்றால் இது போன்ற தீவிரவாத செயல்களை கணிப்பது எளிதல்ல. ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதை காட்டிலும் ஒரே அணியில் நின்று தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும். இதில் அரசியல் ஆதாயம் காண நினைப்பது எந்த வகையிலும் பயன் அளிக்காது.

 

1 comment: