Wednesday, December 18, 2019

மக்கள் பேச வேண்டும், தேசமும் கூட . . .



*ஜனவரி 8, 2020*-
*நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஏன்?*

உரையாடல் 4

*கார்ப்பரேட் விருந்து கணக்கு: விடுபட்ட பில்லே இவ்வளவா?*
**********************************

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இறுதி இடர் மதிப்பீட்டு அறிக்கை 2019 ( Risk Assessment Report 2019) ஓர் பெரிய அதிர்ச்சியை ஸ்டேட் வங்கிக்கு மட்டுமின்றி மக்களுக்கும், வங்கியின் சேமிப்புதாரர்களுக்கும் தந்திருக்கிறது. 

மார்ச் 2019  முடிவடைந்த காலத்திற்கான கணக்கில் ஸ்டேட் வங்கி காட்டியுள்ள மொத்த செயல்படா சொத்துக்கள், நிகர செயல்படா சொத்துக்கள் ரூ 11932 கோடிகள் குறைவாக காட்டப்பட்டுள்ளன என்பதே அவ்வறிக்கையில் இருந்த குண்டு. அதாவது கணக்கில் காண்பித்த மொத்த செயல்படா சொத்துக்கள் ரூ 184682 கோடிகளும், நிகர செயல்படா சொத்துக்கள் ரூ 77827 கோடிகளும் தலா ரூ 11932 கோடிகள் அதிகரிப்பிற்கு ஆளாகும் என்று அர்த்தம். 

செயல்படா சொத்துக்கள் என்றால் வராக்கடனின் குழந்தைப் பருவம் என்று சொல்லலாம். ஏற்கெனவே வராக்கடன் மிகுந்ததால் வங்கிகள் தத்தளிப்பதும், அந்த சுழலுக்குள் வங்கிகளை தள்ளி விட்டது இந்திய கார்ப்பரேட்டுகளும், பெரும் பணக்காரர்களுமே  என்பதும் ஊரறிந்த ரகசியம். 

இந்த ஆண்டு (2018-19) ஸ்டேட் வங்கி ரூ 862 கோடிகளை நிகர லாபமாக காட்டியிருந்தது. அண்மைக் காலங்களில் வங்கிகள் லாபம் காண்பிக்கிறது என்றால் வயிற்றில் பால் வார்த்தது போல இருக்கிறது. ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கையால் இப்போது கணக்கு தலை கீழாக மாறிவிட்டது. லாபக் கணக்கில் இருந்து நட்டக் கணக்கிற்கு சரிந்துள்ளது. 862 கோடி லாபம் என்பது ரூ 6968 கோடிகள் நட்டமாக மாறியுள்ளது. 

ஸ்டேட் வங்கி மட்டுமல்ல. இன்னும் சில வங்கிகளின் கணக்குகளும் மாறுகின்றன. பேங்க் ஆப் இந்தியா அறிவித்திருந்த ரூ 5547 கோடி நட்டம் என்பது இப்போது ரூ 6993 கோடி நட்டம் ஆக உயர்ந்துள்ளது. தனியார் வங்கிகளும் சரிவை சந்தித்துள்ளன. யெஸ் பேங்க் லாபம் ரூ 1720 கோடிகளில் இருந்து ரூ 1084 கோடிகளாக வீழ்ந்துள்ளது. 
 
கார்ப்பரேட்டுகளின் கடன்களை வசூலிக்கிற அரசியல் உறுதி இல்லாதவரை இப்படிப் பட்ட அதிர்ச்சிகள் வந்து கொண்டேதான் இருக்கும். 

விருந்து கணக்கில் ஏதோ பருப்பு பில், வத்தல் பில் விடுபட்டு போன மாதிரி அல்ல இது. கார்ப்பரேட் விருந்தல்லவா. அதுதான் ரூ 11932 கோடிகள். விடுபட்ட பில்லே இவ்வளவு. 

இதை யார் கேட்பது? கல்விக் கடன் ரத்து ஆகாது என்று நிதியமைச்சர் அறிவிக்கிறார். கார்ப்பரேட் கடன்கள் ஸ்வாஹா ஆவது பற்றிப் பேச வேண்டாமா!
************************************
*இதை மக்கள் பேச வேண்டும், தேசம் பேச வேண்டும். இதற்கே ஜனவரி 8 வேலை நிறுத்தம்.*

************************************

தோழர் கே.சுவாமிநாதன்,
துணைத் தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment