Friday, December 13, 2019

மக்கள் மொழியும் தேவ பாஷையும்





"இந்த மசோதாவை முன்மொழிகிறபோது அமைச்சர் முன்வைத்த கருத்து கடும் அதிர்ச்சியை உருவாக்கியது, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக சமஸ்கிருதத்தையும் உலக அறிவினுடைய ஆதாரமாக சமஸ்கிருதத்தையும் அவர் முன்வைத்தார். இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்ற கேள்வியை நான் இங்க எழுப்ப விரும்புகிறேன்.

நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிவியல் பூர்வமான ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும் என்பதை மக்கள் விரும்புவார்கள். இது அடிப்படையில் ஆதாரமற்ற கருத்து, மட்டுமல்ல நான் இங்கே சில புள்ளிவிவரங்களையும் எடுத்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சமஸ்கிருதத்தினுடைய முதல் கல்வெட்டு ராஜஸ்தானத்தினுடைய அத்திப்பாராவிலும் குஜராத்தில் இருக்கிற ஜுனாகத்திலும் கிடைத்து இருக்கிறது. அந்த கல்வெட்டின் காலம் கிபி ஒன்றாம் நூற்றாண்டு, ஆனால் தமிழ் மொழியில் கிடைத்திருக்கிற முதல் கல்வெட்டு மதுரையில் மாங்குளத்திலும் தேனியில் புள்ளிமான்கோம்பையிலும் கிடைத்திருக்கிறது.‌ இந்தக் கல்வெட்டின் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டு. சமஸ்கிருத கல்வெட்டு கிடைத்ததற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. சொல்லுங்கள் எது மூத்த மொழி.

உங்களை விட 700 ஆண்டு வயதானவர்கள் நாங்கள், தமிழ் மொழி மூத்ததா? சமஸ்கிருத மொழி மூத்ததா? என்ற கேள்வியை எழுத்துப்பூர்வமாக அறிவியல் கண்டுபிடிப்புகள் இருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

அதே போல இங்கே மிக முக்கியமாக குறிப்பிட்டுள்ளார்கள் இதுவரை இந்தியாவிலே கிமு 6-ம் நூற்றாண்டில் துவங்கி 18-ம் நூற்றாண்டு வரை 60,000 தமிழ் கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கிறது ஆனால் சமஸ்கிருத கல்வெட்டுக்களின் எண்ணிக்கை வெறும் 4000 மட்டும் தான் என்பதை இந்த அவையிலே எடுத்துச்செல்ல கடமைப்பட்டுருக்கிறேன்.

இங்கே மீண்டும் மீண்டும் பலர் சொல்லுகிறார்கள் சமஸ்கிருதம் தேவ பாஷை என்று அது அவர்களின் நம்பிக்கை நான் அதை குறுக்கிடவில்லை, ஆனால் மிக முக்கியமாக இங்கே நாங்கள் சொல்லுவது தமிழ் தேவ பாஷை அல்ல இது மக்களின் மொழி என்பது தான் எங்களின் பெருமை.

ஏன் தெரியுமா இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு சமஸ்கிருதத்திலே இவ்வளவு இலக்கியங்கள் இருக்கின்றது ஒரு பெண்ணாவது சமஸ்கிருத எழுத்தாளராக உதயமாகி இருக்கிறாரா? ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் இலக்கியத்தில் ஒருவரல்ல இருவரல்ல நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே உலக மொழி தமிழ் எனவே தான் அது மக்களின் மொழி என்று இங்கே சொல்லுகிறோம்.


அதே போல மிக முக்கியமாக மீண்டும் மீண்டும் சமஸ்கிருதம் எந்தக் காலத்திலும் மக்களின் புலங்கு மொழியாக இருந்ததில்லை அது சடங்கியல் மொழி. ஆனால் தமிழ் அப்படியல்ல எல்லாக் காலத்திலும் மூவாயிரம் ஆண்டுகளாக மக்களின் மொழியாக இருக்கிறது. இன்றைக்கும் இலங்கையில், சிங்கப்பூரில், மலேசியாவில், மொரீசியஸில், கனடாவில் அரசினுடைய அரசு மொழியாக இருக்கிறது. இது தேவ பாஷை என்று நாங்கள் சொல்லவில்லை, பூவுலகம் முழுக்கு இருக்கிற பல நாடுகளில் இருக்கிற 10 கோடி தமிழர்களுடைய பாஷை என்று நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

அதே போல தமிழினுடைய பெருமை அது ஒரு சமயச் சார்பற்ற மொழி. இன்றைக்கு கீழடியினுடைய ஆய்வு முடிவுகள் இந்திய தொல்லியல் வரலாற்றில் புதிய மைல்கல்லை உருவாக்கியிருக்கிறது. கீழடியில் 16,000 பொருட்கள் கிடைத்திருக்கிறது அதில் ஒரு பொருள் கூட பெரும் மதங்களும் மத நிறுவனம் சார்ந்த பொருள் கிடையாது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துக்கள் கிடைத்திருக்கிறது. கிமு ஆறாம் நூற்றாண்டில் பெரும் மதங்களும் பெரும் மதங்களுடைய கடவுள்களும் உருவாவதற்கு முன்பே செழித்தோங்கிய மொழியாக தமிழ் இருந்தது என்பதை இந்த அவையிலே நான் குறிப்பிட்டு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

அதே போல நம்முடைய நாடாளுமன்ற அமைச்சர் அவர்கள் தலையிட்டு ‌இந்த விவாதத்தை சமஸ்கிருதத்திற்கும் தமிழிற்கும் நடக்கின்ற ஒரு போட்டியாக, யுத்தமாக மாற்றாதீர்கள் என்று சொன்னார். நிச்சயம் நாங்கள் அப்படி மாற்ற விரும்பவில்லை, எங்களை விட 700 வருடம் இளைய ஒரு மொழிக்கு எதிராக நாங்கள் ஏன் சண்டை போடப்போகிறோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சமஸ்கிருதம் தான் இந்திய பண்பாட்டின் அடையாளமாக, இந்திய அறிவின் அடையாளமாக நீங்கள் மீண்டும் மீண்டும் முன்வைத்தால் அதை எதிர்க்கிற முதல் குரல் தமிழகத்தின் குரலாக இருக்கும் என்பதை இந்த அவையிலே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த மசோதாவை முன்வைத்திருக்கிற மரியாதைக்குரிய அமைச்சர் அவர்கள் இன்றைக்கு மத்திய அரசின் நிதி நிலையின் கீழ் டீம்ட் யுனிவர்சிட்டி ஆக நான்கு பல்கலைக்கழகங்கள் இருக்கிறது. இந்த நான்கையும் மத்திய அரசினுடைய பல்கலைக்கழகங்களாக மாற்றுவோம் என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால் இன்றைக்கு என்ன செய்திருக்கிறீர்கள் மூன்று சமஸ்கிருத பல்கலைக்கழகங்களை மட்டும் மாற்றிவிட்டு தமிழகத்திலே இருக்கிற காந்திகிராம பல்கலைக்கழகத்தை கைவிட்டு விட்டீர்கள். உங்களின் பிரச்சினை காந்தியா அல்லது தமிழா என்பதை இந்த அவையிலே நாங்கள் கேட்க விரும்புகிறோம். காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தை உடனடியாக மத்திய பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும்.

அதே போல இன்றைக்கு உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலக செம்மொழி நிறுவனம் பல ஆண்டுகளாக இயக்குநர் போடவில்லை, 150 இடங்கள் காலியாக இருக்கிறது. மொழி சார்ந்த பல பல்கலைக்கழகங்களுக்கு நீங்கள் நிதி கொடுக்க மறுக்கிறீர்கள். அமைச்சர் அவர்களை நான் கேட்டுக்கொள்வது மிக முக்கியமாக இன்றைக்கு மைசூரிலே இயங்கிக் கொண்டிருக்கிற இந்திய மொழிகளினுடைய ஆய்வு நிறுவனம் அது மத்திய பல்கலைக்கழகம் அதைப் போன்று அனைத்து இந்திய மொழிகளினுடைய ஆய்வுக்கு, வளர்ச்சிக்குத்தான் ஒரு முக்கியத்துவம் தரவேண்டுமே ஒழிய, ஒரு மொழியை மட்டும் தூக்கிப் பிடிப்பதும் அந்த மொழியையே இந்தியாவினுடைய அடையாளமாக மாற்றுவதும் அது மனிதனுக்கு அப்பாற்பட்ட தேவபாஷை என்ற ஒரு புனித தன்மையை கொடுப்பதும் ஒரு மதச்சார்பற்ற அரசுக்கு நல்லதல்ல.

இந்திய அடையாளம் அனைத்து மொழிகளிலும் இருக்கிறது அதை உயரத்திப் பிடிப்போம் என்று சொல்லிக்கொள்கின்றேன்."
*
- சு.வெங்கடேசன் எம்.பி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

1 comment: