Monday, December 9, 2019

போலி எண்கவுண்டர் - கோழைகளின் ஆயுதம்


மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவு இது. யதேச்சையாக இன்று கண்ணில் பட்டது.

இன்றைய சூழலுக்கும் பொருந்தும் என்பதால் அதனை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன். 

தலைப்பில் மட்டும் "போலி"யை சேர்த்து "துப்பில்லாத" நீக்கியுள்ளேன்.

படத்தில் உள்ளது செம்மரக்கட்டைகளை வெட்டச் சென்ற தமிழகத் தொழிலாளர்களை ஆந்திர போலீஸ் சுட்டுக் கொன்ற படம். 

அப்போதும் தோட்டாக்கள் தொழிலாளர்கள் மீது மட்டும் பாய்ந்ததே தவிர, அவர்களை மரத்தை வெட்டச் செய்து கோடிக்கணக்கில் கல்லா கட்டிய பெரிய மனிதர்கள் மீதல்ல என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்

என்கவுன்டர் – துப்பில்லாத கோழைகளின் ஆயுதம்.





என்கவுன்டர் கலாச்சாரத்தைப் போற்றி ஒரு அறிவார்ந்த பெருமகனார் சில நாட்கள் முன்பு எழுதியிருந்தார். அப்போதே எதிர்வினையாற்ற நினைத்தேன். இப்போதுதான் அதற்கான அவகாசம் கிடைத்தது.

என்கவுன்டர் என்பதைப்பற்றி ஒரு தவறான புரிதல் இருக்கிறது. எது என்கவுன்டர் என்று தெரியாமலேயே அதை துதிக்கும் மனநிலையும் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

என்கவுன்டர் என்றால் என்ன பொருள் என்று அகராதி சொல்கிறது?

A minor short-term fight
A hostile disagreement face-to-face
A casual meeting with a person of thing
A casual or unexpected convergence

மேலே கொடுக்கப்பட்ட நான்கு பொருட்களில் கடைசி இரண்டு ரத்தம் சம்பந்தப்படாதது. ஆகவே அவற்றை நாம் கண்டு கொள்ள வேண்டாம்.

குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் சண்டை, நேருக்கு நேராக ஒரு பகைமையான சூழலில் சந்தித்துக் கொள்வது ஆகியவையே என்கவுன்டர். பகைமையான சூழலில் சந்தித்துக் கொள்வது சண்டைக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் சமீப கால வரலாற்றில் என்கவுன்டர் என நமக்கு காவல்துறை, ஊடகம் சொல்லியிருக்கும் சம்பவங்கள் என்ன?

வெங்கடேசப் பண்ணையார் மரணம்,
அயோத்திக்குப்பம் வீரமணி மரணம்,
சந்தனக்கடத்தல் வீரப்பன் மரணம்,
திருப்பூரிலோ, ஈரோட்டிலோ ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய காமுகன் மரணம்,
அல் உமா அமைப்பின் இமாம் அலி மரணம்,
வங்கிக் கொள்ளயர்கள் என வர்ணிக்கப்பட்ட வட நாட்டவர்கள் மரணம்.
திருப்பதி காட்டில் ஆந்திர போலீசால் கொல்லப்பட்ட தமிழ்நாட்டு கூலித் தொழிலாளர்கள்.

கொஞ்சம் அகில இந்திய அளவில் சென்றால்

மோடியின் செல்வாக்கு சரிந்த நேரத்தில் அதை தக்க வைக்க அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாக காண்பிக்கப்பட்ட இஷ்ரத் ஜஹான் மரணம்.

ராணுவத்தால் அடிக்கடி காஷ்மீரில் கணக்கு காட்டப்படும் மரணங்கள்

சர்வதேச அளவில் பார்த்தால் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட சம்பவம்.

இந்த மரணங்கள் எல்லாம் நேருக்கு நேராக மோதியதால் நிகழ்ந்தனவா? இங்கேயெல்லாம் நிஜமாகவே என்கவுன்டர் நடந்துதான் மரணங்கள் சம்பவித்ததா? அதனை சம்பந்தப்பட்டவர்களின் மனசாட்சி ஒப்புக்கொள்ளுமா? இவை எல்லாமே போலி என்கவுன்டர்கள். என்கவுன்டர் என்று கணக்கு காண்பித்து காவல்துறை நிகழ்த்திய கொலைகள். அரசு பயங்கரவாதத்தின் வெளிப்பாடு.

சரி எது நிஜமான என்கவுன்டர்?

மகாபாரதக் கதையில் குருஷேத்திரப் போரில் “துவந்த யுத்தம்” என்ற வார்த்தை அடிக்கடி வரும். சமமான இருவர் நேருக்கு நேர் மோதுவதைத்தான் “துவந்த யுத்தம்” என்பார்கள். என்கவுன்டர் என்பதும் அதுதான்.

இங்கே என்கவுன்டர் என்று சொல்லப்படுவதெல்லாம் வெறும் போலி என்கவுன்டர் மட்டுமே. பின்னாளில் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக அவன் தப்பிக்கப் பார்த்தான், கத்தியால் குத்த வந்தான், அரிவாளால் வெட்ட வந்தான். துப்பாக்கியைத் தூக்கினான் என்று சொல்லி சும்மானாச்சுக்கும் பிளேடில் ஒரு கீறல் போட்டுக் கொண்டு சீன் போடுவார்கள்.

ஏன் போலி என்கவுன்டர்?

காவல் துறையின் வேலை என்ன? ஒரு குற்றம் நடந்தால் அதைச் செய்தது யார் என்று கண்டுபிடித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பின்பு விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தக்க சாட்சியங்களை கோர்ட் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும். தண்டனை வழங்குவதற்கான உரிமையை நீதி மன்றத்துக்குத்தான் அரசியல் சாசனம் அளித்துள்ளதே தவிர காவல் துறைக்கு அல்ல. குற்றத்தை செய்தது யார் என்பதை சட்டத்தின்படி நிரூபிக்க வேண்டிய பொறுப்பு போலீசுக்கு உண்டு.

அப்படி நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கித் தருவதற்குப் பதிலாக காவல்துறை கடைபிடிக்கும் குறுக்கு வழிதான் போலி என்கவுன்டர். தகுந்த சாட்சியங்கள் கிடைக்கவில்லை என்றாலோ, சட்ட ரீதியாக தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை என்று இவர்கள் நினைத்தாலோ,  எங்கோ ஒட்டை  இருக்கிறது என்றுதான் அர்த்தம். அந்த ஓட்டையை அடைப்பதற்குப் பதிலாக, சிரத்தையெடுத்து வழக்கு நடத்துவதற்குப் பதிலாக குறுக்கு வழியில் போய் விடுகிறார்கள். சில சமயங்களீல் மக்களின் கோபத்தை திசை திருப்பவும் கூட போலி என்கவுன்டர்கள் கை கொடுக்கின்றன.

குற்றவாளிகளை கொலை செய்ய முடிகிற போலீசிற்கு அவர்களை கைது செய்ய முடியாதா? வழக்கு நடந்த முடியாதா? அப்படி இயலவில்லை என்றால் நம்முடைய சட்டம் அவ்வளவு பலவீனமாக உள்ளதா? இல்லை காவல்துறைக்கு அதற்கான திறன் கிடையாதா? அதிகாரத்தை கையில் வைத்துள்ள காவல்துறை, அரசாங்கத்தை விட குற்றவாளிகள் சக்தி மிக்கவர்களா? புத்திசாலிகளா?

சட்டத்தின் வாயிலாக ஒரு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர காவல்துறையால் முடியும், அது நேர்மையோடும் பொறுமையோடும் செயல்பட்டால். ஆனால் பைலை மூடினால் போதும் என்று வேகமாகவும் அலட்சியமாகவும் வழக்கை தயார் செய்கிற போது இயல்பாகவே தோற்றுப் போய்விடுகிறார்கள்.

தன்னுடைய பணியை ஒழுங்காக செய்ய முடியாத, அதற்கு தயாராக இல்லாத, திராணி இல்லாத ஆட்கள்தான் போலி என்கவுன்டர்  என்ற நடைமுறையை பிரயோகம் செய்கின்றனர். இதில் கொஞ்சமும் வீரம் கிடையாது. மாறாக முழுக்க முழுக்க கோழைத்தனம்தான்

அப்படிப்பட்ட போலி என்கவுன்டர்களை போற்றுவதென்பது போலி என்கவுன்டரை விட அபாயகரமானது.

மனித உரிமை ஆர்வலர்கள் என் மீது பாயப் போகிறார்கள் என்ற பெருமிதத்தோடுத்தான் அந்த கட்டுரை தொடங்குகிறது. தவறான ஒரு விஷயத்தை ஆதரிப்பதில் ஆணவத்தையும் பெருமிதத்தையும் வெளிப்படுத்தும் போக்கு இருக்கிறதே, அந்த ஜெயலலிதா பாணி மேலும் அபாயம் மட்டுமல்ல, அசிங்கமும் கூட.

No comments:

Post a Comment