Friday, January 20, 2017

“ முஹம்மது யூசுபின் பழைய (பொங்கல்) டைரிக்குறிப்புகள் “

  நண்பர் கனவுப்பிரியன் அவர்களின் சுவாரஸ்யமான, அதே நேரம் மிகவும் முக்கியமான முக நூல் பதிவு. கடைசி வரி வரை அவசியம் படியுங்கள். ஏன் முக்கியம் என்பது புரியும்.

 





 ஜனவரி மாதத்து பொங்கல் நாளுக்காக நவம்பர் மாதம் முதலே தயாராகும் என்னைப் பற்றி சொல்லித்தானே ஆகவேண்டும்.
நிலத்தில் நான் கடலும் கடல் சார்ந்த இடத்தையும் சார்ந்தவன். எனக்கு தென்னை மரம் பற்றி அத்தனை தெரியாது எனது ஊர் மண்ணும் செம்மண் கிடையாது. 

எல்லோரும் மழை வேண்டி பிரார்த்திக்கும் போது மழை வேண்டாம் என உள்ளூர் சாமிக்கு சூடம் காட்டி தேங்காய் உடைக்கும் உப்பு விளையும் மண்ணைச் சார்ந்தவன் நான். 

இங்கு தேரிகள் அதிகம். தேரிகள் என்றாலே பனை மரங்களின் அணிவகுப்பு வந்துவிடும். “ யே நீ ரொம்ப அழகா இருக்கே “ என்ற சாம் நடித்த படத்தில் “இனி நானும் நான் இல்லை “ என்ற பாடல்களின் இடையில் அந்த மணல் தேரிகளைக் காணலாம்.
வீட்டின் மிச்சமுள்ள நிலத்தில் ஒற்றைப் பனைமரம் இருந்தது. “ ஒத்தை பனை வீட்டுக்கு ஆகாது, முனி பாய்ச்சல் இருக்கும் அது தங்கும் “ என்றவனைப் பார்த்து “ வீடு எனக்கு மட்டுமில்ல அதுக்கும் சேர்த்து தான் கட்டி இருக்கேன் அதுவும் தங்கிட்டு போட்டுமே “ என்ற தகப்பனின் பிள்ளை நான். 

இந்த வருடத்தில் நாற்பது நாட்கள் பதநீர் இறக்கினால் அடுத்தவரும் வருடம் பாளையை விட்டு விடுவார் அப்பா. சீவாத பாளை கொஞ்சம் கொஞ்சமாய் பனம்பழமாக மாறிக் கொண்டிருக்கும்.
சில சமயம் நள்ளிரவில் தொப் என்ற சத்தம் கேட்கும். எடை தாளாமல் பனைமரத்தில் இருந்து பழுத்த பனம் பழம் விழுந்த சத்தம் அது. தரையைத் தொட்டும் சில அப்படியே இருக்கும் சில அதிகம் பழுத்த பழம் வெடித்து சிதறி மண் ஒட்டிய நிலையில் இருக்கும். 

வீட்டிற்கு வெளியே பூவரச மரத்தின் அடியில் பனம்பழம் காய்ச்ச என்று தனி அடுப்பு, சட்டி இருக்கும். விடுமுறை நாளில் மட்டும் கருப்பட்டி போட்டு பனம்பழம் காய்ச்சி கத்தி வைத்து வெட்டி மாம்பழத் துண்டு போல நீள நீள துண்டுகளாகத் தருவாள் அம்மா. நார் நாராக இருக்கும் ஆனாலும் அவள் கைக்கு அது அறுபடும்.
நல்ல தித்திப்பாக இருக்கும். தின்று முடித்ததும் பனங்கொட்டை சேமித்து மண் குமித்து நிரப்பி விடுவார் அப்பா. பதநீர் இறக்காத காலத்தில் இருநூறு முன்னூறு பனம் பழம் கிடைக்கும் அந்த ஒற்றை மரத்தில் இருந்து. 

ஏறக்குறைய முன்னூறு பனங்கிழங்குகள் பொங்கலுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் வீட்டிலே அந்த மண் குவியலுக்குள்.

மஞ்சள் பூலாங்கிழங்கு எல்லாம் நட்டி வைக்கப்படும் அது வேறு தனிக் கதை.

ஜனவரி பத்தாம் தேதி வாக்கில் அந்த குவியல் தோண்டப்படும்.
ஆசையாக நானும் அண்ணனும் தோண்டி ஒவ்வொரு கிழங்காக எடுப்போம். முன்னூறு பனங்கொட்டைக்கு
முன்னூறு கிழங்கு இருக்கா என எண்ணி பார்ப்போம்.

மண் எப்பொழுதும் யாரையும் ஏமாற்றியது இல்லை.
ஒன்றிரண்டு மெலிந்த கிழங்குகள் தவிர மற்ற அனைத்தும் வாளிப்பான பருவ மங்கை போல அத்தனை அழகாக நல்ல புஷ்டியான உடல்வாகுடன் இருக்கும். 

" நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் " - என

சங்க காலப் பாடலில் நாரையின் கூர் மூக்கை பனங் கிழங்கிற்கு உவமையாக வழங்கி இருக்கக் கூடாது. அது ஒரு வடிவான பெண்ணுக்கு சமமானது.

பனங் கிழங்கை தனியாக வெட்டி விட்டு மீதம் இருக்கும் பனங் கொட்டையை வெட்டி “ தவுன் “ எடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் சேகரித்து வீட்டின் உள்ளே வந்து சேரும்.
அப்பாவிடம் எனக்கு மிகவும் பிடிக்காத குணம் ஒன்று உண்டு. எது கிடைத்தாலும் பங்கு வைப்பார். 

முன்னூறு கிழங்கில் நூறு எங்களுக்கு மீதம் நூறு எதிர்த்த வீட்டுக்கு ஆளுக்கு பத்து என்று இன்னுமொரு நூறு உறவுக்கார வீடுகளுக்கு என்று பங்கு பிரிப்பதில் எனக்கு அத்தனை உடன்பாடில்லை.
அப்படியே “ தவுன் “ வும் பங்கு பிரிக்கப்படும். அகோர வேட்கையுடன் இங்கு ஒருவன் காத்திருப்பது அவர்கள் கண்ணில் ஏன் படவில்லை என தெரியவில்லை. 

பங்கு பிரிக்கப்பட்ட “ தவுன் “ தின்பதில் இருந்து ஆரம்பம் ஆகும் பொங்கலுக்கான ருசி.
எங்கள் வீட்டிற்கு நேர் எதிரே கோட்டைச்சுவர் இல்லாத போலிஸ் குடியிருப்பு. முன் வரிசையில் ரோட்டைத் தாண்டி நான்கு நான்காக இருபத்திஎட்டு வீடுகள். 

அந்த தெருவே மொத்தமாக பொங்கலுக்கு நான்கு நாள் முன்பு மார்க்கெட் நோக்கி கிளம்பிவிடும், அஞ்சு கிலோ பாக்கெட் சுண்ணாம்பு முதல் காவி கட்டி, வெள்ளை அடிக்க பட்டை, மண் பானை, அடுப்பு கல்லு என்று ஆளாளுக்கு தேவைகளின் பட்டியல் உடன்.
என்னைப் போன்ற டவுசர் ஆசாமிகள் பை தூக்கி சுமக்க அழைத்துச் செல்லப்படுவார்கள். காணிக்கையாக “பழரசம் பால்ராஜ் “ கடையில் பெரிய கிளாசில் பழரசம் வாங்கி தரப்படும். 

எங்கள் வீட்டின் நேர் எதிர் உள்ள எட்டு போலீஸ்காரர் வீடுகளில் பொங்கல் முடியும் வரை எடுபுடி வேலைக்கு நாங்கள் சேர்த்துக் கொள்ளப்படுவோம். எனது நண்பர்கள் வீட்டில் நான் செய்வேன் எனது அண்ணன் நண்பர்கள் வீட்டில் அவன் செய்வான்.
பொங்கல் அடுப்பு கல்லுக்கு வெள்ளை அடித்து காவி பட்டை போட்டு, முடிந்த வரை என் கைவண்ணத்தை காட்டுவேன். வேப்பமரத்துக்கு எல்லாம் வெள்ளை அடிப்போம் அது வேற கதை. 

என் கூட அன்று விளையாடிய பலரும் பல ஊர்களில் இன்று இன்ஸ்பெக்டராக இருக்கிறார்கள் என்பது கிளை கதை.
ஆயினும் நேர் எதிர் வீட்டு ராமசாமி தான் பால்ய நண்பன். அதற்கும் காரண காரியம் உண்டு. 

அவர்கள் மாடு வளர்த்தார்கள். அவர்கள் வீட்டு வைக்கோல் படப்பில் ஊரான் வீட்டு கோழி வந்து முட்டை இட்டுச் செல்லும். அதை எடுத்து கடையில் கொடுத்து காசு வாங்கி சினிமா பார்ப்போம். ஆக நெருங்கிய நண்பன் ஏன் ஆனான் என புரிந்திருக்கும். அவனுக்கும் ஜோதிக்கும் ஒரு இது உண்டு அதை நான் வெளியே சொல்வதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன். இதுவும் ஒரு காரணம். 

இரண்டு நாள் வெள்ளை அடிப்பதில் கழியும். அப்போதே வேண்டாததை வெளியே வைத்து விடுவோம்.

போகிக்கு முந்தைய நாள் வீட்டின் பின்னால் உள்ள பிள்ளையார் கோவிலை ஒட்டிய பொது வட்ட கிணற்றில் மாடு குளிப்பாட்ட அழைத்துச் செல்வோம்.
ரெண்டு குடம் நீர் இறைத்து அதன் மேல் ஊற்றியதும் பள்ளிக் கூடம் போகமாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தை போல மாடு குளிக்க அடம்பிடிக்கும். 

அதனிடம் கோபப்பட்டு பேசுவான் ராமசாமி “ உன்ன குளிப்பாட்டனும், அவன குளிப்பாட்டனும், தொழுவம் தூக்கனும், நாத்து வெட்டனும், கழனி தண்ணி வைக்கணும், உங்க அப்பனா இதை எல்லாம் செய்வான் “ என்று மாட்டிடம் பேசுவான். 

அங்கும் இங்கும் தலையை திருப்பி பார்க்கும் பின் குளிக்க சம்மதிக்கும். ஆச்சர்யமாய் பார்ப்பேன். 

“ பேசுறியே, அதுக்கு புரியுமா “ என்று கேட்பேன் 

“ எல்லாம் தெரியும் தெரியும், திமிரு. சத்தம் போட்டாத்தான் கேக்குறது “என்பான். இப்படி சொல்லும் போது தப்பு செய்து மாட்டிக்கொண்டவன் போல மாடு அவனை அப்பாவியாய் பார்ப்பது தான் கூடுதல் ரசம்.
நான் நீர் இறைத்து தருவேன். ஊற வைத்த வைக்கோல் வைத்து மாட்டை தேய்த்து குளிப்பாட்டுவான். தெரியாத ஆள் அருகில் சென்றால் வாலை சுழற்றி ஒரு அடி கொடுக்கும் அது போதும் இனி அவன் அருகில் வராமல் இருக்க. சில சமயம் நானும் வாங்கி இருக்கிறேன். 

நீண்ட நேரம் குளிப்பாட்டுவோம். பின் வெயிலில் நிறுத்தி வைத்து விட்டு அடுத்த மாடுக்கு குளியல் நடக்கும். மஞ்சள் நிறத்தில் ஏதோ கொண்டு வருவான் அது மட்டும் மடுவில் தேய்த்து கழுவி விடப்படும்.
அவர்கள் வீட்டின் எல்லா மாட்டுக்கும் லட்சுமி என்று தான் பெயர்.
சாணி, வைக்கோல், கோரைப்புல், தட்டை, முட்டைகோஸ் என விரவி கிடக்கும் மாட்டுத் தொழுவம் கழுவுவான். நீர் இறைத்து கொண்டு வந்து தருவது என் வேலை. 

சாம்பிராணி புகை எல்லாம் காட்டிய பின் பசு மாட்டை பார்க்க வேண்டுமே. அதன் தோல் மினுக்கும் பளபளவென்று. அதன் பருத்த வயிற்றில் லேசாக சாய்ந்து கண்ணத்தை வைத்துப் பார்ப்பேன் குளிர்ந்து இருக்கும் அதன் உடல். 

போகிக்காக எரிக்க என்று தெரிந்த சைக்கிள் கடையாக சென்று டயர் வாங்கி வந்து ஆளாளுக்கு சேகரித்து வைப்பார்கள். கிழிந்த கோரம்பாய் மண்ணெண்ணெய் ஊற்றி ஆரம்பித்து வைக்கப்படும் போகி எரிப்பு.
சூரசம்ஹாரம் நடக்கும் போது சொக்கப்பனை கொளுத்துவார்கள். ஒரு விதமான ஊங் ஊங் எனும் உறுமி சத்தத்துடன். 

அந்த அளவிற்கு ஆங்காரமாய் எரியவில்லை என்றாலும் இதுவும் தன் பங்கிற்கு நாக்கை பிளந்து கொண்டு நாற்சந்து தெருவின் நடுவில் நின்று சட சடவென எரியும். 

நன்கு எரியும் போது பெருசுகள் நிற்பார்கள். அதன் தாகம் தணியும் போது அவர்கள் நகன்று விட எங்களைப் போன்ற மால்குடி டேஸ் சுவாமிகள் அராஜகம் தொடங்கும். சுற்றியுள்ள எதையாவது பொறுக்கி அதனை நோக்கி வீசிக் கொண்டிருப்போம். 

திடீர் என பின் மண்டையில் பொளேர் என்று அறை விழும் “ போ வீட்டுக்கு, படிக்கிறது கிடையாது. எப்போ பாரு விளையாட்டு “ என்ற நிரந்தர வசனத்துடன் அண்ணன் காட்சி தருவான். மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டே வீடு செல்வது எப்பொழுதும் வாடிக்கை.
நாளை பொங்கல் என்றால் இன்றைய நாள் இரவு என்பது, இந்தியா பாகிஸ்தான் ஒன்டே கிரிக்கெட் மேட்ச்சின் வெற்றியா தோல்வியா என நிர்ணயிக்கும் கடைசி ஓவர் போல ஒவ்வொரு நிமிடமும் சுவராசியமாய் இருக்கும். 

அன்று இரவு தான் வீட்டில் கரும்பு கட்டு வாங்கி வந்து மர கட்டிலுக்கு அடியில் மறைத்து வைப்பார்கள். 

“மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி தேன்தமிழ் சொல் எடுத்து பாடவந்தேன் அம்மா பாடவந்தேன் “ என்ற பாடலுடன் பிள்ளையார்கோவில் குழாய் தன் பங்கை மாலையில் ஆரம்பித்து இரவு வரை கச்சேரியை நடத்தும். 

இது போக தெருக்கு தெரு “பானை உடைக்கும் போட்டி, முறுக்கு, பன் திங்கும் போட்டி, மியுசிகல் சேர் பற்றிய நடக்கவிருக்கும் நிகழ்வை பாடலுக்கு இடையே இடையே மைக் பிடித்து “இப்படிக்கு நல்லவனுக்கு நல்லவன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் “ என்ற வித விதமான தலைப்பில் அடித்து விளாசுவார்கள். 

அன்றைய நாளில் எல்லா இடங்களிலும் கடை முழுக்க ஆட்கள் இருப்பார்கள் ஏதேனும் வாங்கியவண்ணம், ஊர் முழுக்க ஏதேனும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் பாடல்கள் வாயிலாக.

தினத்தந்தியின் ஒரு பக்கத்தில் நீள் வெட்டுக்கு AVM தயாரித்து வர இருக்கும் புதிய படம் பற்றிய விளம்பரம் தினமும் பார்த்தாலும் பஸ் ஸ்டாண்ட் வரை சென்று அங்கு தொடர்ச்சியாக ஒட்டப்பட்டு இருக்கும் 17 படங்களின் வால் போஸ்டரை சைக்கிள் நிறுத்தி அதன் எதிரே நின்று ஒருமுறை நன்கு பார்த்துவிட்டு வருவதில் மஹா ஆனந்தம்.
குறிப்பாக ரஜினி கமல் படங்களின் வால் போஸ்ட் எதிரே நீண்ட நேரம் நிற்பது. வால்போஸ்டரை பார்த்தே உச்சி குளிர்ந்த மகா ஜனம் நான்.
தெருவின் எல்லா வீடுகளிலும் திண்ணை இருக்கும்.
இரண்டு நாட்களுக்கு முன்னமே சாணி மொழுகி வீட்டின் வாசலுக்கு எதிரே வசதியான பிளாட்பாரம் அமைத்திருப்பார்கள் அனைவரும்.
இரவு பத்து மணிக்கு மேல் ஆளாளுக்கு கோலப் பொடியுடன் திரிவார்கள்.
கோலம் போடுவதை பார்க்கிறேன் என்ற பெயரில் வீடு வீடாக சென்று அரசு மரியாதையுடன் சைட் அடிக்கலாம். தாவணிகள் காலம் அது. கருவேலம் மரம் போல நைட்டிகள் இப்பொழுது தான் பெருத்து விட்டன.
உள்ளங்கையில் “ பொங்கல் வாழ்த்து “ என பேனாவால் எழுதி குடும்பத்து ஆட்கள் பார்க்காத சமயத்தில் கோலம் போடும் அவளிடம் கையை விரித்து காட்டி நம் வருகை தந்ததின் நோக்கத்தை ராஜதந்திரமாக காட்டலாம். 

செபத்தையாபுரம் ராஜசேகர் அனுப்பிய 15 பைசா பொங்கல் வாழ்த்து அட்டையில் தூங்காதே தம்பி தூங்காதே கமலஹாசன் இன்னும் என் வீட்டு பரணில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
பொங்கல் அன்று காலையில் எல்லார் வீட்டு வாசலும் அலங்கரிக்கப்பட்ட மணமகள் போலத்தான் காட்சி அளிக்கும்.
வாசலில் போட பட்ட பெரிய நீண்ட அகன்ற மா கோலத்தின் மீது காவி வெள்ளை நிறம் பூசிய மூன்று அடுப்பு கல்லில் சந்தன பூசிய கைத்தடம் பதித்த மண் பானையில் பொங்கல் தயாராகிக் கொண்டிருக்கும்.
மங்களகரம் என்பதின் அடையாளம் அந்த தெரு முழுக்க வீசும். யார் முகத்திலும் சோகமில்லாத மனிதர்களை தொடர்சியாக காணலாம்.
எல்லா போலீஸ்காரர்களையும் இதுவரை பார்த்திராத வேஷ்டி சட்டையில் பார்ப்பது ஒரு வித புது அனுபவம். 

பிரியாணி தந்ததற்கு பதிலாக ஒவ்வொரு வீட்டில் இருந்தும் எங்களுக்கு பாத்திரத்தில் சாப்பாடு வரும். பொங்கல், உப்பு போடாத சாப்பாடு என வித விதமாய் சைவ சித்தாந்தம் பட்டையை கிளப்பும். 

வனசுந்தரி அக்கா வீட்டில் பொங்கல் நெய்யுடன் இரண்டர கலந்து இருப்பதால் வருடா வருடம் அங்கு தான் உளுந்த வடை பாயாசத்துடன் எனது காலை உணவை ஆரம்பம் செய்வேன். 

“ எல தின்னு எல எடுத்து தின்னு “ என அவர்கள் வற்புறுத்தியதால் தான் மூன்று முறை சாப்பிட்டேன். மற்றபடி யாராவது ஏதாவது என்னைப் பற்றிச் சொன்னால் நம்பவேண்டாம். 

அதன் பின் ஆஸ்தான தொழிலான காலை பத்தரை மணி காட்சி சினிமா. இதைப்பற்றி ஒரு நாவலே எழுதலாம். 

சினிமா பார்த்து வந்த கையோடு மதிய சாப்பாட்டுக்கு பின் பிள்ளையார் கோவில் பின்னாடி உள்ள அரசமரத்தடியில் அமர்ந்து நண்பர்களாக சேர்ந்து பார்த்த இரண்டரை மணி நேர சினிமா பற்றி மூன்று மணி நேரம் பேசுவது.

மாலையில் கபடிப்போட்டி இல்லை இருக்கவே இருக்கிறது பானை உடைத்தலை முறுக்கு தின்பதை சாக்கு போட்டியை சைக்கிள் போட்டியை என வேடிக்கை பார்ப்பது. 

இரவு பிள்ளையார் கோவிலில் கட்டி இருந்த குழாய் சுற்றிலும் குழந்தைகள் ஆட சினிமா பாடல் பாட ஆரம்பித்து விடும். “ மல்லிகா யுவசுவ யுவசுவ இன்னக்க “ என்று சிங்கள பப்பிசை பாடலும் பிள்ளையார் எங்களுடன் சேர்ந்து கேட்பார்.
பொங்கல் சந்தோஷம் அன்றுடன் முடிந்து விடவில்லை.

டவுசருடன் அலைந்த காலத்தில் ஊருக்குள் இருக்கும் நாகலிங்கமரம் நிறைந்த வாட்டர் டேன்க் செல்வோம். அதை சுற்றிலும் புதிதாக நிறைய கடைகள் முளைத்திருக்கும். கூட்டம் நிரம்பி வழியும். அதை சுற்றிவருவது மாலையால் பீச் செல்வது அத்துடன் முடிந்து விடும்.
எங்களுக்கான பொங்கலும் காலத்திற்க்கேற்ப மாறிக் கொண்டே இருந்தது. பதின் வயது வேறு பொங்கலை தந்தது.

பள்ளிக்கு பூனை மீசையுடன் பேன்ட் ஷர்ட் உடன் செல்வது எல்லாம் வானவில் போலத் தோன்றிய காலம் அது 

புதிதாக பதினாறு வயதில் ஜட்டி போட பழகி இருந்தேன். ஜெயவர்த்தனா எனும் இலங்கை கொடுங்கோலன் பற்றிய செய்தியும் மூளையில் பதிவானது. பிலிம் இன்ஸ்டிடியுட் ஆபாவாணன் புதிதாக பேசப்பட்டார். விதி, சம்சாரம் அது மின்சாரம் என கேசட்டில் கதை வசனம் கேட்ட காலங்கள் மாறி இருந்தன. பெண்களை புதிதாக ரசிக்கத் துவங்கி இருந்தோம். வீட்டிருக்கு தெரியாமல் நண்பன் பதுமை உடன் “ பாவம் கொடூரன் “ எனும் மலையாள பிட்டு படம் பார்த்துவிட்டு வீடு திரும்பி காலம் அது.

ஆக பொங்கல் மறுநாளின் அடையாளமும் மாறி இருந்தது எங்களுக்குள்.வாட்டர் டேன்க் போவதில்லை. பதினைந்து பேருக்கு மேல் என நண்பர்கள் பெருத்து விட்டார்கள். 

மன்மத சாமி ஆசி வழங்கும் தினமாக தான் காணும் பொங்கலை கருதினோம். அன்றைய தினம் தான் ஊருக்குள் இருக்கும் அத்தனை பிகரையும் வெளியே காணமுடியும். சைட் அடிப்பதை குடிசை தொழிலாக செய்த காலம் அது. 

காணும் பொங்கல் என்றால் பஸ்ஸில் தான் சுற்றுவது. நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி வந்து பஸ் ஸ்டாண்டில் காத்து நிற்போம் பாஞ்சாலங்குருச்சி செல்ல.

ஊரில் இருந்து அதிகமான பேர் காணும் பொங்கல் மறுநாள் செல்லும் இடங்களில் இதுவும் ஒன்று.

முயல் தீவு, ஹார்பர் கடற்கரை, சுனை, அகஸ்தியர் அருவி, மாஞ்சோலை எஸ்டேட், குற்றாலம், திருச்செந்தூர், பாஞ்சாலங்குருச்சி கட்டபொம்மன் கோட்டை இது தான் ஊரில் இருந்து காணும் பொங்கல் செல்லும் முக்கியமான இடங்கள்.

விளாத்திகுளம், குறுக்குசாலை, ஓட்டப்பிடாரம் பகுதியில் எங்காவது ரேக்ளா ரேஸ் நடக்கும். 

எங்களை பொறுத்தவரை பாஞ்சாலங்குருச்சி தான் திரி ரோசெஸ் டீ போல குறைந்த விலை, அதிக பிகர், நிறைந்த சுவை.
அன்றைய தினம் நிறைய பஸ் வசதி அன்று இருக்கும் பாஞ்சாலங்குருச்சிக்கு. 

எந்த பஸ்ஸில் அதிகமான இளசுகள் ஏறுகிறதோ, அந்த பஸ்ஸில் ஏறி விடுவோம். ஊருக்குள் அன்றைய தினம் எல்லாவிதமான அலப்பறையும் அங்கீகரிக்கப்படும். பஸ்ஸில் கண்டக்டர் எதுவும் சொல்வதில்லை.
கும்பலாக பாட்டு கச்சேரி தான். பட்டைய கிளப்புவோம். கானா பாட்டு, நாட்டுபுற பாட்டு, சினிமா பாட்டு விளம்பரம், சாமி பாட்டு கடி ஜோக் எல்லாம் உண்டு. எங்களின் நோக்கம் பிகர்களை கவன ஈர்ப்பு தீர்மானம் போட வைத்து எங்களை பார்க்க வைப்பது.

" பள்ளிக்கட்டு சபரி மலைக்கு கல்முள்ளும் காலுக்கு மெத்தை " என்று ஆரம்பிப்பான் ஒருவன்.

" எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் .ஏசுவே உம்மை தான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் ..ஆஹ ...ஆனந்தம் ஆனத்தமே ..அல்லும் பகலிலும் ஆடிடுமே " இப்படி ஒருவன்
கேட்டால் சாமி பாட்டு பாடி தான் நல்ல காரியம் ஆரம்பிப்போம் என்று சொல்லுவது.

" ஓட்டட ஓட்டட கம்பத்திலே என்ன விட்டுட்டு போனியே அம்பத்திலே ரெண்டு புள்ள கக்கத்திலே வந்து நின்னானே பக்கத்திலே, முருங்க மரத்துக்கு ஆசைப்பட்டு நான் மூத்த கொழுந்தன வச்சிருந்தேன் " இப்படியே பாட்டு போகும் 

" ஒன்னாம் படி எடுத்து சித்திர கோபுரம் கட்டவே .."

" சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே பள்ளிக்கு சென்றாளா படிக்க சென்றாளா ......அட வாடா மருமகா என் அழகு மன்மதா பள்ளிக்கு தான் சென்றால் படிக்க தான் சென்றாள்......"

திடிரென்று எவனாவது ஒருவன் " சாந்தா டில்டிங் வெட் கிரைண்டர் அரைத்திடும் விதத்தில் வந்ததோர் புதுமை ஆஹா அருமை சாந்தா டில்டிங் வெட் கிரைண்டர் சாந்தா டில்டிங் வெட்கிரைண்டர் “ என்பான்.
பழைய பாடல் தான் அதிகம் பாடுவது. அதற்கு தான் மவுசு ஜாஸ்தி. சில பழைய வயசான பெருசுகளும் எங்களுடன் சேர்ந்து கொள்ளும்.
அதிகமாக கிருஸ்துவ பாடல்களை கேலி செய்து பாடிய முத்தையா இப்பொழுது மும்பையில் ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருக்கிறான்.
குறுக்கு சாலை தாண்டி இடதுபக்கம் கட்டபொம்மன் கோட்டையின் தோரண வாயில். 

கோட்டையை பஸ் நெருங்குவதற்குள் எவனாவது ஒருத்தன் எவளாவது ஒருத்தியின் பார்வையில் சிக்கி சின்னாபின்னாமாகி இருப்பான்.
கலைஞர் செய்த நல்ல காரியங்களில் இந்த கோட்டையும் ஒன்று..ரொம்ப பெரியதும் இல்லை ரொம்ப சிறியதும் இல்லை.

ஆரம்பத்தில் ஒரு முரசு இருக்கும் கையால் டம் டம் என்று தட்டுவது.." ராஜ மார்த்தாண்ட ...ராஜ குலோத்துங்க பராக் பராக் என்று சவுண்ட் விடுவது. 

உள்ளே நிறைய புகைப்படம் இருக்கும் பொம்மி, உமைத்துரை என்று, வாள் கேடயம் தொட்டு பார்ப்பது.

அரண்மனை உள்ளே சென்றால் சிவாஜியின் ஞாபகம் வந்துவிடும். அந்த அரண்மனையையும் ஊரையும் வந்திருக்கும் கந்தர்வ கன்னிகளையும் சுற்றுவது.

ஊருக்கு திரும்புவதற்குள் “ மாப்பிளே அவ என்னையே பாக்கிறாடா “ என்று எவனாவது சொல்லிவிடுவான். 

அப்புறம் என்ன காதலின் தூதாக அரைகிலோ கொய்யாபழம் வாங்கி அவளிடம் எப்படியாவது சேர்ப்போம்.( அந்த ஊர் கொய்யாபழம் ரொம்ப பேமஸ் )

இப்படியாக சாயங்கால நேரத்தில் எந்த பஸ் ப்ரீ யாக இருக்கிறதோ அதில் ஏறி கப்சிப் என்று சன்னல் ஓர சீட் பிடித்து அமர்ந்து மனதில் நிறைய எண்ணங்கள் ஓட மீண்டும் தூத்துக்குடி பஸ் ஸ்டாண்ட் வந்து மீண்டும் பஸ் பிடித்து “ முயல் தீவு “ செல்வோம். 

இயற்கை என்ற ஜனநாதன் இயக்கிய நடிகர் சாம் நடித்த படத்தில் நிறைய காட்சிகள் தூத்துக்குடியில் எடுக்கப் பட்டவை. அதில் முயல் தீவும் வரும்.
ஒற்றை தார் பாதை, ஈரம் தோய்ந்த மண், ஓடி பிடித்து விளையாடும் அலைகள், நீல நிறக்கடல், எங்கோ தூர தெரியும் கப்பல், கடலில் தூக்கி வீசப்பட்ட காய்ந்த கல்யாண பூமாலைகள். உடன் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களால் நீருக்குள் மூழ்காமல் கரை ஒதுங்கும் அந்த பூக்கள் என கடல் அழகே தனி. 

லைட் ஹவுஸ் மேல் ஏறி நண்பர்கள் சூழ ஓ வென ஜன்னல் வழியே கத்துவதுடன் மட்டுமல்லாமல் கடலோடு விளையாடி ஆடை முழுக்க நனைந்து கடல் மண் கலந்து அதே ஈரத்தோடு பஸ் ஏறி இதோ இன்னும் அதே ஈர நினைவுகளோடு வாழ்கிறேன். 

சொல்ல மறந்திட்டேன் பொங்கலை பத்தி சிறு குறிப்பு தான் எழுதி இருக்கேன். சம்மதிச்சா 100 பக்கத்துக்கு ஒரு சின்ன பதிவு வேணா போடுறேன், 

முஸ்லிம் யாராவது பொங்கலை கொண்டாடுவாங்களா என்று ஒரு பதிவு தெரிந்த நண்பர் போட்டிருந்தார். நீங்க எல்லாம் எந்த கண்டத்தை சேர்ந்தவங்கன்னு தெரியல. 

இன்றும், காணும் பொங்கல் அன்று தூத்துக்குடி பஸ் ஸ்டாண்ட் போனா இதே போல சில கூட்டம் திரியும் அதிலும் யாராவது ஒரு முஸ்லிம் இருப்பான்.

அனைவருக்கும் “ இனிய பொங்கல் வாழ்த்துகள் “

No comments:

Post a Comment