புத்தாண்டு மலர்ந்துள்ளது. அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
கடந்து போன 2016 ஆண்டை கொஞ்சம் திரும்பிப்
பார்த்தால் அது இந்திய நாட்டுக்கோ மக்களுக்கோ நன்றாக அமையவில்லை.
மத்தியிலும் சரியில்லை, மாநிலத்திலும் சரியில்லை.
ரோஹித் வெமுலா தற்கொலை, ஜவஹர்லால் நேரு
பல்கலைக்கழகத்தில் அரசு நிகழ்த்திய அராஜகம் என்று ஆண்டின் முற்பகுதியில் காவிகளின்
தாக்குதல் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இருந்தது என்றால் எல்லாவற்றிலும்
தோற்றுப் போன பொய் நாயகன் மோடி எடுத்த மூடத்தனமான செல்லா நோட்டு நடவடிக்கையால்
பொருளாதார வாழ்வாதாரம் தாக்கப்பட்டது.
வருடத்தின் முன்பாதியில் வாய் திறந்து பேசவே
அச்சப்படும் நிலையை உருவாக்க முயன்ற காவிக் கூட்டம், வங்கி வாசலிலும் ஏ.டி.எம்
வாசலிலும் வரிசையில் நிற்கவைத்து வேடிக்கை பார்த்தது. கருப்புப் பணத்திற்கு எதிரான
போராட்டம் என்ற இந்த முழக்கமும் வழக்கம் போல மொக்கையாகி விட்டதை ஏற்றுக் கொள்ள
மனமில்லாமல் இன்னும் பேச்சில் மட்டும் வீரத்தை காண்பிக்கும் ஒரு பிரதமரை தேசமே
வெறுப்போடு பார்க்கிறது.
ஐம்பது நாளில் எந்த ஒரு சிறு ஆணியைக் கூட பிடுங்க
முடியாத நீங்கள் கொளுத்திக் கொள்ளப் போகிறீர்களா இல்லை தொங்கப் போகிறீர்களா என்று
கேட்கும் அளவிற்கு பிரதமர் பதவியை மோடி கேவலமாக்கியதுதான் 2017 ம் ஆண்டின் மிகப்
பெரிய சோகம்.
சென்னைப் பெரு வெள்ளம், அதற்கு காரணமான அரசு நிர்வாக
இயந்திரத்தின் சீர்கேடு, அலட்சியம் ஆகியவையெல்லாம் தமிழக அரசியல் களத்திலே ஒரு
மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை சிதைந்து போனது. மாற்றத்திற்கான ஒரு
வாய்ப்பு கரன்ஸி புயலிலே அடித்துச் செல்லப்பட்டது.
பாழடைந்த பேய் பங்களாக்களைக் காட்டிலும்
மர்மப்பிரதேசமாக அப்பல்லோ மருத்துவமனை மாறிப்போனதும் இந்த ஆண்டுதான். அந்த 75
நாட்கள் தமிழகத்தின் வரலாற்றில் புரியாத புதிர்தான்.
அந்த மர்ம நாட்களின் தொடர்ச்சி தமிழக அரசியல் இன்னும்
பல மோசமான காட்சிகளை எதிர்காலத்தில் காண வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கான காரணம் என்ன
என்பதையும் அவர்களை உண்மையாகவே நேசிக்கிறவர்கள் யார் என்பதையும் எப்போது உணர்ந்து
கொள்கிறார்களோ, அப்போதுதான் எதிர்காலம் ஒளிமயமானதாகும்.
அப்புரிதலை உருவாக்க கடுமையான களப்பணி தேவை.
இடதுசாரிகள் அதனை நிச்சயம் செய்வோம் என்ற உறுதியோடு மீண்டும் ஒரு முறை
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment