Tuesday, January 10, 2017

வேட்டி தினம் – கரையான் புற்றில் நாகம் ?





வேட்டி கட்டிக் கொள்வதை ஊக்கப்படுத்துவதற்கு ஒரு தினம் கொண்டாட வேண்டியுள்ளது வேதனையான ஒன்று.

திரு சகாயம் அவர்கள் முன்மொழிந்த ஆலோசனை இது. தமிழக கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தலைவராக அவர் இருந்த போது அந்த நிறுவனத்தின் விற்பனையை பெருக்குவதற்காகவும் அதன் மூலம் நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை இருப்பதை உறுதி செய்யவும் அவர் முயன்றார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த வேட்டி தினத்தை இப்போது ராம்ராஜ், என்.சி.ஆர், ஆலயம் போன்ற நிறுவனங்கள் கைப்பற்றிக் கொண்டு விட்டன. அவர்களின் விற்பனையைப் பெருக்குவதற்கான வாய்ப்பாக வேட்டி தினம் மாறி விட்டன.

சரி, இந்த நிறுவனங்களின் வேட்டிகள் விற்பனை அதிகரித்தாலும் அது நெசவாளர்களுக்கு பலன் தரலாமே என்று யோசித்தால் கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனை அதிகரித்தால் அதன் மூலம் நிறுவனம், நெசவாளர், நுகர்வோர் என மூன்று தரப்பிற்குமே பலன் கிடைக்கும்.

ஆனால் இந்த நிறுவனங்கள் நெசவாளர்களுக்கு அவர்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதியத்தை அளிப்பார்களா என்பது பெருத்த சந்தேகமே. நுகர்வோருக்கு எதுவும் கிடைக்காது என்பது தெரிந்த விஷயம். ஏனென்றால் ராஜ்கிரணுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை விளம்பரத்தில் நடிக்க ஊதியம் தர தயாராய் இருந்தவர்கள்தானே. விளம்பரத்திற்கு செலவழிக்கும் கோடிக்கணக்கான ரூபாய்கள் இறுதியில் நுகர்வோர் தலையில்தான் விடியும்.

எனவே நெசவாளர்களுக்கு உதவிட வேட்டி வாங்க வேண்டுமெனில் கோஆப்டெஸில்  வாங்குவது மேல். இந்த ஒட்டிக்கோ, கட்டிக்கோ தேவைப்படுபவர்கள் வேண்டுமானால் ப்ராண்டட் வேட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள்.

பின் குறிப்பு : வேட்டி தின கான்செப்ட் எல்லாம் வரும் முன்பே 1998 ல் கோட்டயத்தில் தென் மண்டல மாநாடு நடைபெற்ற போது எங்கள் கோட்டத் தோழர்கள் பேரணியில் வேட்டி அணிந்துதான் சென்றோம். அப்போது எடுக்கப்பட்ட படமே, மேலே உள்ளது. 1994 ல் அகமதாபாத்தில் அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது இறுதி நாளன்று வேட்டி அணிந்து கொண்டோம். குஜராத்தில் பணியாற்றும் தமிழர்கள், அன்று எங்களை தேடி வந்து அறிமுகம் செய்து கொண்டு பேசியதும் நினைவிற்கு வருகிறது.

1 comment:

  1. நெசவு நாட்டின் கேந்திரத் தொழில்.அதை பாதுகாக்க வேண்டும்.

    ReplyDelete