Sunday, November 8, 2015

நேற்று இன்று நாளை - எம்.ஜி.ஆர் படமல்ல




நேற்று நடந்ததும் நன்றாகவே நடந்தது. இன்று நடந்ததும் நன்றாகவே நடந்தது. 

கேரள மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இடதுசாரி சக்திகளுக்கு உற்சாகம் அளித்தது என்றால் இன்றைய பீகார் தேர்தல் முடிவுகளோ இந்தியாவை உண்மையாகவே நேசிக்கிற, இந்திய மக்களின் ஒற்றுமையை மனப்பூர்வமாக விரும்புகிற ஜனநாயக சக்திகளுக்கு உற்சாகம் அளித்துள்ளது. 

வெறும் பொய்களையும் வெற்றுக் கூச்சல்களையும் மட்டுமே மூலதனமாக வைத்து ஆட்சிக்கு வந்த மோடியின் மோசடிகள் தொடர்ந்து எடுபடாது என்பதை பீகார் மக்கள் உணர்த்தியுள்ளார்கள்.

பீகார் மாநிலத் தேர்தலின் போது எத்தனையெத்தனை வித்தை காட்டினார்கள்? எல்லா கீழ்த்தரமான உத்திகளையும் கையாண்டார்கள். எங்களிடம் விளம்பரங்களை காண்பித்து அனுமதி பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சொல்லும் அளவிற்குச் சென்றார்கள்.

பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை பறித்து  முஸ்லீம்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்றார்கள்.

மத்தியில் உள்ள ஆட்சி மாநிலத்திலும் வராவிட்டாலும் நிதி ஒதுக்கீடு வராது என்று பிளாக் மெயில் செய்தார்கள்.

பாஜக இங்கே ஆட்சி அமைக்காவிட்டால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள் என்று போலி தேசபக்தி வசனம் பேசி உசுப்பேற்றினார்கள்.

மாட்டிறைச்சி சாப்பிடுவது நியாயமா என்று  கேட்டு ஒரு குறிப்பிட்ட ஜாதியை வெறியேற்ற நினைத்தார்கள்.

மோடியின் நல்லாட்சிக்கான அங்கீகாரமாக பீகார் முடிவு அமையும் என்று இன்று காலை வரையிலும் கூட கதையளந்தார்கள்.

பீகார் முடிவுகளுக்கும் மத்தியரசுக்கும் எந்த தொடர்புமில்லை. மோடி மீதான விமர்சனம் கிடையாது என்று காவிக்கூட்டம் புலம்புகிற அளவிற்கு பீகார் மக்கள் பலத்த அடி கொடுத்து விட்டார்கள். 

ஏற்கனவே அங்கே நிதீஷ் குமார் ஆட்சிதானே இருந்தது, அது இப்போதும் தொடர்கிறது என்று பல புத்திசாலிகள் பொங்கி எழும் வாய்ப்பு இருக்கிறது. 

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமாக சேர்த்து இருக்கிற நாற்பது தொகுதிகளில் இருபத்தி எட்டு தொகுதிகளை வெற்றி பெற்றார்கள். ஆக அங்கே பதினெட்டு மாதங்களில் மோடி மாயை அகன்றுள்ளது.

நேற்று கேரளாவிலும் இன்று பீகாரிலும் நடந்துள்ள நிகழ்வுகள் நாளை இந்தியா முழுதும் நிகழும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

பின் குறிப்பு:

இந்த தேர்தல் முடிவுகள் மூலமாக மோடிக்கு ஒரு நல்ல பாடம் கிடைத்துள்ளது. ஆகவே மக்களுக்கு நலன் கொடுக்கும் பல முடிவுகளை எடுப்பார்கள் என்று  கூட அப்பாவித்தனமாக சிலர் சிந்திக்கலாம். ஆனால் எனதருமை இந்திய மக்களே, அப்படிப்பட்ட அற்புதங்கள் எதுவும் நிகழாது. அப்படி நிகழவும் இந்திய, பன்னாட்டு முதலாளிகள் அனுமதிக்க மாட்டார்கள். இருக்கும் காலத்தில் சுருட்டிக் கொண்டு போகத்தான் முயற்சிப்பார்கள். சொல்லப்போனால் தாக்குதல்கள் அதிகரிக்கலாம்.  

காத்திருங்கள் : உங்களுக்கு சொந்தமாக குடிசை வீடோ அல்லது டிவிஎஸ் 50 யோ இருந்தால் கூட உங்களது சமையல் எரிவாயு மானியம் பறிக்கப்படலாம். மோடியின் தீபாவளிப்பரிசாகக் கூட இந்த அறிவிப்பு வரலாம். 

 

4 comments:

  1. NDTV நிகழ்ச்சியில் பாஜக இந்த தேர்தல் முடிவுகளை பார்த்த பிறகாவது தனது நிலையை மாற்றி சரி செய்யுமா என்ற கேள்விக்கு மழுப்பலான பதில்களே சொன்னார்கள். நீங்கள் சொல்வது போல பாஜக ஆர் எஸ் எஸ் கூட்டம் தங்களது ஒட்டு வங்கியை காப்பாற்றிக் கொள்ள இன்னும் தீவிரமாக மத வாதம், மாட்டு வாதம் போன்றவற்றில் ஈடுபடுவர்கள் என்றுதான் தோன்றுகிறது.

    ReplyDelete
  2. Puli pathungurathu... Payarathukku thaan... Wait and see thambi...

    ReplyDelete
    Replies
    1. போ, போய் புள்ள குட்டி இருந்தா அதுங்க படிப்பைப் பாரு. அந்த கால ரஜனியோட பாயும் புலி, இந்த கால விஷாலோட பாயும் புலி, விஜய் நடிச்ச புலி - எல்லாமே அட்டர் பிளாப்

      Delete
  3. தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்....தர்மம் வெல்லும்.....
    அதுசரி இப்போது வென்றதும் தர்மம் தானா.....ஒன்னும் புரியலயே தோழர்...ஆனால் கொஞ்சம் மகிழ்ச்சி...

    ReplyDelete