Friday, November 20, 2015

“குமுதம்” கதையின் பின்னணி





கடந்த வார குமுதம் இதழில் பிரசுரமான எனது ஒரு பக்க கதையை 16.11.2015 அன்று பதிவிட்டிருந்தேன். அதன் பின்னணியை நாளை சொல்வதாகவும் எழுதியிருந்தேன்.

ஆனால் அதற்கான அவகாசம் இன்றுதான் கிடைத்தது.

செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் எனக்கு ஒரு மணி ஆர்டர் வந்துள்ளதாகவும் அதை மறுநாள் காலை தபால் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு தபால்காரர் சொல்லி விட்டுச் சென்றார் என்று சொன்னார்கள்.

மறுநாள் காலை சென்றால் அது குமுதம் பத்திரிக்கையிலிருந்து வந்த நூறு ரூபாய். நான் குமுதம் பத்திரிக்கைக்கு எதுவும் எழுதி அனுப்பாதபோது எதற்கு பணம் அனுப்பியுள்ளார்கள் என்று குழப்பம் வந்தது.

வாராவாரம் குமுதம் வாங்குவதோடு சரி. ஒரே ஒரு தொடர்பு என்னவென்றால் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அவசியமில்லை என்று எனது வலைப்பக்கத்தில் எழுதியதை எடுத்து பிரசுரித்து இருந்தார்கள். அதற்காக 750 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தினார்கள். அந்த தொகையையும் கூட எங்கள் சங்க இதழான Insurance Worker க்கு நன்கொடையாக அனுப்பி விட்டேன்.

பிறகு குமுதம் அலுவலகத்திற்கு ஒரு இரண்டு முறை தொலைபேசி செய்து விசாரித்த போது ஒரு குறிப்பிட்ட இதழில் எனது ஒரு பக்க கதை வந்திருப்பதாக சொன்னார்கள். அதனை புரட்டிப் பார்த்தால் அந்த கதையை எழுதியவர் பெயரும் எஸ்.ராமன்.

அவருக்கு போக வேண்டிய தொகை எனக்கு வந்து விட்டது. ரிப்போர்ட்டர் கட்டுரையால் வந்த குழப்பம் என்று நினைக்கிறேன். அந்த தொகையை மீண்டும் குமுதம் அனுப்பி விட்டேன்.

அந்த அனுபவத்தையே கொஞ்சம் கற்பனை சேர்த்து ஒரு பக்க கதையாக்கி குமுதத்திற்கே அனுப்பி வைத்தேன். அதுவும் பிரசுரம் ஆனது.

7 comments:

  1. சன்மானத்தை முதலில் வாங்கிக்கொண்டு கதை எழுதும் அளவு வளர்ந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஆக..முதலில் எழுதாமலே எழுத்தாளராகி பிறகு உண்மையிலேயே எழுத்தாளராகிவிட்டீர்கள்..
    தொடர்ந்து எழுதுங்கள் தோழா. உங்கள் கட்டுரைகளின் சுவாரசியம் கதைகளில் தொடர்ந்தால் இன்னும் நல்ல எழுத்தாளராவீர்கள் அல்லவா? தொடர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  3. நம்மையெல்லாம் எழுதவைக்க இவ்வாறால்லாம்கூட நிகழ்வுகள் அமைந்துவிடுகின்றன என்று நினைத்துக் கொள்வோம். இதனையே நல்வாய்ப்பாக பயன்படுத்துவோம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஆஹா...அருமையான பின்னணி...உங்களுக்கு கதையெழுத வருகிறது..இன்னும் எழுதுங்களேன் தோழர்...

    ReplyDelete
  5. அட இப்படியெல்லாம் நடக்குதா? வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete