எங்கள் சங்க உறுப்பினர்களுக்காக வெளியிட்ட சுற்றறிக்கை. ஆனாலும் உங்களுடைய தகவலுக்காகவும்.
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,
வேலூர் கோட்டம், பதிவு எண் 640 /என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 55/15
18.11.2015
அனைத்து உறுப்பினர்களுக்கும்
அன்பார்ந்த தோழரே,
பேரழிவு நிகழ்ந்த இடங்களில் பேரன்புடன்
மழை, வெள்ளத்தை
சபிக்காதீர்.
திருடப்பட்ட தன்
ஏரிகளையும் ஆறுகளையும்
தேடித் தேடி
பரிதாபமாய் அலைகிறது.
கட்டிடங்கள் தன்னிடத்தை
களவாடியதைக் கண்டித்து
மறியல் செய்கிறது
சாலைகளில், வீடுகளில்.
என்றோர் அர்த்தமிக்க கவிதை சமூக
வலைத் தளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது. ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள்,
ஆறுகள் என நீர் நிலைகள் எல்லாமே இன்று ஆக்கிரமிப்பாளர்களின் லாபச் சுரண்டலுக்கு
இரையானதன் விளைவை தமிழகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட காலகட்டத்தில்
செய்ய வேண்டிய தூர்வாறுதல் பணியை செய்வதில் ஆட்சியாளர்கள் காண்பித்த அலட்சியமும்
இணைந்து கொண்டதால் பெரு மழை, பெரும் துயரத்தை தந்துள்ளது.
சுனாமி, தானே புயல் என்று ஏற்கனவே
இயற்கையின் சீற்றத்திற்கு பலியான கடலூர் மாவட்டம் மீண்டும் மிகப் பெரிய
பாதிப்பிற்கு உள்ளாகியது. கடும் மழையின் தாக்கத்தை சமாளிக்க அரசு நிர்வாகம் தயாராக
இல்லாதது மிகப் பெரிய பேரழிவிற்கு அடி கோலியது. பெரிய காட்டுப்பாளையம் என்ற
கிராமத்தில் பத்து பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். அதிலே எட்டு
பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு பெரும் துயரம்.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள்
வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களுக்கு போக வேண்டிய அவல நிலை, இடிந்து போன
வீடுகள், அடித்துச் செல்லப்பட்ட உடமைகள், தண்ணீரில் மூழ்கி அழுகிய பயிர்கள்,
துண்டிக்கப்பட்ட சாலைகள் இவைதான் தமிழகம் முழுதும் நாம் பார்த்த காட்சிகள்.
கோடிக்கணக்கான ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சூழலில் நமது சங்கத்தின்
மரபிற்கேற்ப நமது கடலூர் கிளைச் சங்கத் தோழர்கள் கடலூர் நகரில் பாதிக்கப்பட்ட ஒரு
பகுதி மக்களுக்கு பாய்களும் போர்வைகளும் வழங்கினார்கள். அத்தோடு நமது பணி நின்று
போகவில்லை.
மிகப் பெரிய அழிவு கடலூர்
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள போது அங்கே துயருற்ற மக்களுக்கு உதவிட உடனடியாக
நிதியுதவி செய்திடுமாறு தென் மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோட்டங்களுக்கும் தென்
மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது. அதனை ஏற்று
தமிழகத்திலும் கேரளாவிலும் உள்ள அனைத்து கோட்டச் சங்கங்களும் நிதி அனுப்பி
வைத்தனர். பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இப்பணியில் இணைந்து கொண்டது. நம்முடைய
கோட்டத்தின் பங்களிப்பு உட்பட ரூபாய் இரண்டு லட்சத்து ஐந்தாயிரம் திரண்டது.
இத்தொகை கொண்டு பெரிய
காட்டுப்பாளையம், விசூர், ராஜிவ் காந்தி நகர், எல்லப்பன்பேட்டை, கல்குணம், கடலூர்
புருஷோத்தமன் நகர் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஆயிரத்து ஐம்பது
குடும்பங்களுக்கு அரிசி, பாத்திரங்கள், பாய், போர்வை, ஆடைகள் என்று நிவாரணப்
பொருட்கள் நேற்று (17.11.2015) அன்று வழங்கப்பட்டது.
இந்த நிவாரணப் பணியில் அகில இந்திய
துணைத்தலைவர் தோழர் ஜே.குருமூர்த்தி, தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர்
கே.சுவாமிநாதன், துணைத் தலைவர் தோழர் ஆர்.புண்ணியமூர்த்தி, துணைப் பொருளாளர் தோழர்
வி.ஜானகிராமன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென் மண்டலப் பொதுச்செயலாளர்
ஜி.ஆனந்த், சென்னை II
கோட்டப்
பொதுச்செயலாளர் தோழர் கே.மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
நம்முடைய கோட்டத்திலிருந்து
கோட்டத் தலைவர் தோழர் டி.மணவாளன், பொதுச்செயலாளர் தோழர் எஸ்.ராமன், துணைத் தலைவர்
தோழர் கே.வேலாயுதம், தென் மண்டல செயற்குழு உறுப்பினர் தோழர் எல்.குமார், கடலூர்
கிளைச் சங்கப் பொறுப்பாளர்கள் தோழர்கள்
ஆர்.கணேஷ், கே.பி.சுகுமாரன், சரவண குமார், வி.சுகுமாரன், ஆர்.வெற்றிவேல்,
பி.ராஜூ, பண்ருட்டி கிளைச் செயலாளர் தோழர் ஜி.வைத்தியலிங்கம், கோட்ட அலுவலகக் கிளைச்
செயலாளர் தோழர் உ.கங்காதரன், தோழர் சி.கணேசன் (காட்பாடி) ஆகியோர் இப்பணியில்
ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் கடலூர் மாவட்டக் குழுத் தோழர்கள், நிவாரண உதவிகளை பயனாளிகளுக்கு
நேரடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை திறம்பட செய்திருந்தனர். மார்க்சிஸ்ட்
கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் நம்மோடு இணைந்து
நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
தோழர் கே.பாலகிருஷ்ணன், அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஆறுமுகம்
ஆகியோரும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நம்முடன் வந்திருந்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் கண்டு கொள்ளாத அரசாங்கத்தைப் பற்றிய தங்கள் குமுறல்களை, சோகங்களை தோழர் ஜி.ஆர் மற்றும் தோழர் கே.பி ஆகியோரிடம் வெளிப்படுத்தினர்.
இயற்கை நடத்திய கோரத் தாண்டவத்தை
பார்ப்பதற்கான வாய்ப்பு நம் முன் உள்ள கடமைகளை உணர்த்தியுள்ளது. நம்மால் இயன்ற
உதவியை செய்தோம் என்பதோடு நாம் நிறைவடைய முடியாது. வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு
வாழ்வை மீட்டுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுடையது. அதை அவர்கள் செய்யத் தவறும்
போது போராட்டக்குரல் எழுப்ப வேண்டியது நம்முடைய கடமையும் கூட. அகில இந்திய
இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நமக்கு கற்றுக் கொடுத்திருப்பதும் அதைத்தான்.
வாழ்த்துக்களுடன்
தோழமையுள்ள
ஒப்பம் எஸ்.ராமன்
பொதுச்செயலாளர்
ஒரு சிறந்த பணிக்கு கைகோர்த்தமைக்கு வாழ்த்துக்கள். இயற்கையைக் குறை கூறாமல் நம்மால் ஆன நல்லவற்றை செய்வோம். நன்றி.
ReplyDeleteபட்டுக்கோட்டை சொன்னது தான்...
ReplyDeleteஎங்கெல்லாம் மேடு பள்ளம் இருக்கிறதோ அங்கெல்லாம் சிவப்புக்கொடி பறக்கும்....
நல்லதொரு பணி! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான உதவி.
ReplyDelete