Wednesday, November 11, 2015

நதியின் குருதி





வானம் பிளந்தது போல
கொட்டித் தீர்க்கும் மழையில்
சாலைகள், வீடுகளென
எங்கெங்கும் பெருக்கெடுத்தோடும்
வெள்ளம் உன்னிடம்
மட்டும் ஏன் இல்லை?

கெடிலமும் பெண்ணையும்
கரை புரண்டு ஓடுதே,
உனக்கு மட்டும்
என்ன கேடு?

ஆண்டுகள் பலவானதால்
ஓட மறந்தாயோ?
தாகம் அதிகமாகி
அத்தனை நீரையும்
நீயே குடித்தாயோ?

கேள்விக்கணைகளை
கேலியாய் தொடுத்தேன்,
மணலோடும் பாலாற்றிடம்.

நதியாய் நான் 
வாழ்ந்ததை மறந்தீர்,
மணல் சுரங்கம்
எனக் கருதி
சுரண்டியே தின்றீர்.

பள்ளம் வெட்டி வெட்டி
என் மேனி எங்கும் புண்ணாக்கி
குருதியில் நனைய வைத்தீர்.

லாரிகளை ஓட வைத்து
ரணமாக்கி வதை செய்தீர்.

கிடைத்ததொரு கிடங்கென்று
குப்பைகளைக் கொட்டி
அசுத்தம் செய்தீர்.

அண்டை மாநிலத்தானும்
ஆங்காங்கே அணை கட்டி
என் ஓட்டத்தை தடுக்க
வேடிக்கை மட்டும்தான் பார்த்தீர்.

என்னை வீணாப் பொருளாக்கி
வினாவும் தொடுப்பீரா?

தலை குனிந்த என்னிடம்
மேலும் சொன்னது பாலாறு.

கற்றுக் கொள்ளுங்கள்
இயற்கையை மதிக்க,
மனிதத்தை மதிக்க.

அதுதான் உங்களைக் காக்கும்
காகித நோட்டுக்கள் அல்ல.

எனக்கு மட்டுமா 
சொன்னது நதி?


எல்லோருக்கும் சேர்த்துத்தான்.


பின் குறிப்பு :

எப்போதோ பாலாற்றில் தண்ணீர் ஓடிய படத்தைக் கண்டுபிடித்து
முக நூலில் பகிர்ந்த திருமதி மரியா சிவானந்தம் அவர்களுக்கு நன்றி.

 

2 comments:

  1. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்த கொடுமை
    நடைபெறுவதாகத் தெரியவில்லையே நண்பரே

    ReplyDelete
  2. அடடா...சூடாய் இருக்கும் உங்கள் பதிவுகள் மழையால் கொஞ்சம் குளிரும் எனப்பார்த்தால்.... அதையும் மீறி சுடுகிறது...
    ஒரு கவிதை வாசித்தேன்...

    மணலேற்றிய லாரியிலிருந்து
    வடிவது தண்ணீரல்ல
    நதியின் கண்ணீர்..

    ReplyDelete