Sunday, November 22, 2015

மிச்சமிருக்கும் ரத்தமும் சதையும்





மழைக்காலத்தில் வெளியில் போக முடியாத நேரத்தில் உருப்படியாக செய்த ஒரு வேலை தோழர் என்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் நூலை முழுமையாக படித்து முடித்ததுதான்.

592 பக்கங்கள் அடங்கிய அந்த நூலை மதிப்பீடு செய்யும் அளவிற்கு எனக்கு தகுதியோ அனுபவமோ கிடையாது.

ஒவ்வொரு பக்கமும் தியாகத்தை, போராட்டத்தைச் சொல்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், தலித் மக்கள், பழங்குடியின மக்கள், மாணவர்கள், வாலிபர்கள், பெண்கள், என அனைத்து பிரிவினருக்குமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த ஐம்பது வருடங்களில் தமிழகத்தில் நிகழ்த்திய போராட்டங்களின் வரலாறு இந்த புத்தகம்.

காவல் துறையிடம் அடிபட்டுள்ளார்கள், சிறைவாசம் அனுபவித்துள்ளார்கள். முதலாளிகளால், பண்ணையார்களால் தாக்கப்பட்டுள்ளார்கள். ஆளுங்கட்சிகள், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அடியாட்களை ஏவி விட்டுள்ளார்கள். எண்ணற்றோர் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள்.

ரௌடிகளால் கத்தியால் குத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைக்கிற தோழர் வி.பி.சிந்தன் அவர்கள் வீடு திரும்பும் போது ஒரு கூட்டத்தில் ஒரு வார்த்தையாவது பேசுமாறு மக்கள் கேட்கிறார்கள்.

அவரும் பேசுகிறார்.

"தோழர்களே, அதிக நேரம் பேச முடியாமல் இருக்கிறேன். ஏராளமான ரத்தம் சிந்தப்பட்டதால் நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். மிச்சமிருக்கும் ரத்தமும் சதையும் உங்களுக்காகத்தான்"

இந்த தியாகப் பாரம்பரியம் இன்றும் ஒளி வீசிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தில் இணைந்திருப்பதை விட வாழ்வில் வேறென்ன பெருமிதம் இருக்க முடியும்.....

No comments:

Post a Comment