Saturday, September 5, 2015

சகோதரி ராஜ்ஜியத்தில், ராணுவ பாசறையில்.....


 
மேற்கு வங்கத்தில் நடைபெறும் மம்தா தீதி ஆட்சியின் லட்சணத்திற்கு ஒரு நேரடி சான்றாக ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எல்.ஐ.சி நிறுவனத்தில் தற்காலிகமாக, தின ஊதிய அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு நிரந்தரப் பணி நியமனம் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து அது அமலாக்கப்பட்டது.

எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நீதிமன்றத்தில் நடத்திய போராட்டத்தின் மகத்தான வெற்றி இது. தீர்ப்பை அமலாக்கவும் நிர்வாகத்தோடு போராட வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஐயாயிரம் தற்காலிக ஊழியர்கள் நிரந்தர ஊழியர்களாக மாறினார்கள்.

உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது 2011 ம் வருடம். அதற்குப் பிறகு வந்த சில தடைகளும் தகர்ந்து அந்த ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப் பட்டது 2012 ம் வருடம்.  17.02.2012 அன்று  சார் பணியாளராக பணியில் சேர்ந்த பலர் இப்போது பதிவு எழுத்தர் என்ற அடுத்த பதவிக்கே பதவி உயர்வு மூலம் சென்று விட்டனர். பட்டப்படிப்பு முடித்த சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று உதவியாளராகவும் மாறி விட்டனர்.

நாடு முழுதும் நடந்த இந்த பணி நியமனம் மம்தா தீதியின் எல்லைக்கு உட்பட்ட மேற்கு வங்கத்தில் அசன்சால் கோட்டத்தில் மட்டும் நடைபெறவில்லை. 

2011ல் பணி நியமனத்திற்கான நுழைவுத் தேர்வு நடைபெற்ற போது திரிணாமுல் குண்டர்கள்  தேர்வு மையத்திற்குள் புகுந்து  கலாட்டா செய்து தேர்வு நடைபெற முடியாமல் தடுத்தார்கள். பின்பு இரண்டு முறையும் காவல்துறை முன்னிலையிலையே தகராறு செய்து தடுத்தார்கள். அவர்கள் கட்சி ஆட்களுக்கு எல்.ஐ.சி வேலை கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்கள்.

அசன்சாலில் தேர்வு நடத்தினால்தானே பிரச்சினை என்று கொல்கத்தாவில் தேர்வு நடத்த நிர்வாகம் முடிவு செய்தது. கொல்கத்தா கமிஷனர் பாதுகாப்பு கொடுப்பார் என்று சொன்னார்கள். நடப்பது சகோதரியின் ஆட்சியல்லவா?

கொல்கத்தாவில் தேர்வு மையத்திற்கு காவல்துறை வரவில்லை. கமிஷனர் வரவில்லை. அங்கேயும் திரிணாமுல் ரௌடிகள் வந்தார்கள். கலாட்டா செய்தார்கள். கமிஷனரின் போன் தொடர்பு எல்லைக்கு அப்பால்தான் இருந்தது.

ஒரு வழியாக நேற்று அந்த தோழர்களுக்கான எழுத்து தேர்வு நடந்து முடிந்து விட்டது. 

எங்கே தெரியுமா?

ஒரு ராணுவ பாசறைக்குள் ராணுவத்தினரின் பாதுகாப்போடு.

மற்றவர்கள் எல்லாம் பணியில் சேர்ந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து ஒரு பதவி உயர்வும் பெற்ற சூழலில் அசன்சால் கோட்டத்து  தற்காலிக ஊழியர்கள் மட்டும் அனைத்தையும் இழந்திருக்கிறார்கள். 

இதுதான் மம்தா தீதி ஆட்சியின் லட்சணம். 

வேலூர் கோட்டத்தில் அத்தோழர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதை ஒரு விழாவாகவே கொண்டாடினோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும் போது அத்தோழர்களின் முகத்தில் காணப்பட்ட உற்சாகம் மீண்டும் நினைவிற்கு வருகிறது.

அசன்சால் தோழர்களுக்கு இனியாவது அது கிடைக்கட்டும்.








1 comment:

  1. அசன்சால் தோழர்களுக்கு இனியாவது நல்லது நடக்கட்டும்

    ReplyDelete