“வாலு”, “வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க” என்ற இரண்டு படங்களை
சமீபத்தில் வேறு வழியில்லாமல் பார்க்க நேரிட்டது. இதில் “வி.எஸ்.ஓ.பி” விமர்சனம் எழுதுவதற்கே
லாயக்கில்லாத ஒரு படம் என்பதால் அது பற்றி பதிவு செய்யவில்லை. “தனி ஒருவன்” பற்றிய
விமர்சனங்கள் நன்றாக இருந்ததால், நேற்று எனது மகன் அழைத்த போது கொஞ்சமும் பயமின்றி
சென்றேன்.
துவக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக செல்கிறது படம். வழக்கமாக
கதாநாயகனுக்கு கொடுக்கப்படும் அறிமுகம் இப்படத்திலோ வில்லனுக்கு அளிக்கப்படுகிறது.
அப்போது தொடங்குகிற சுவாரஸ்யம் க்ளைமாக்ஸ் வரை தொடர்கிறது.
ஏற்கனவே பலரும் படத்தைப் பற்றி எழுதி விட்டதால் கதையைப் பற்றி நான் எழுதப்
போவதில்லை.
எனக்கு பிடித்த சில அம்சங்களைப் பற்றித்தான் எழுதப் போகிறேன்.
ஆட்சியை நடத்துவது அரசியல்வாதிகள் அல்ல. கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்.
அவர்கள் தங்களின் சுய நலத்திற்காக எதையும் செய்வார்கள். மக்களின் நலன் என்பதை
காலில் போட்டு மிதித்து லாபம் மட்டுமே குறியாக இருப்பார்கள் என்பதை மிகவும்
அழுத்தமாக சொல்வதால் மிகவும் பிடித்தமான படமாகி விடுகிறது.
கார்ப்பரேட்டுக்களின் அடிமைகளாகத்தான் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்
என்பதையும் இப்படம் உணர்த்துகிறது. அதானி, அம்பானி, மோடி என காண்பிப்பதற்கு பதிலாக
அரவிந்த் சுவாமி, தம்பி ராமையா என்று காண்பிக்கிறார்கள், அவ்வளவுதான்.
மிகவும் புத்திசாலியான ஒரு வில்லனை பார்த்தே ரொம்ப நாளாகி விட்டது.
அரவிந்த் சுவாமி தனது சாக்லேட் பாய் இமேஜை தக்க வைத்துக் கொண்டே வில்லனாக நம்மை
ஈர்க்கிறார். ஜெயம் ரவிக்கு பேராண்மைக்குப் பிறகு நல்லதொரு கனமான பாத்திரம்.
நன்றாகவே செய்துள்ளார்.
நயன் தாரா வெறும் வந்து போகிற கதாநாயகியாக இல்லாமல் அவருக்கு நடிப்பதற்கு
வாய்ப்பும் தருகிற படம்.
நாசர், தம்பி ராமையா, கதாநாயகனின் நண்பர்கள், ஆகியோரும் சிறப்பாகவே
செய்துள்ளார்கள்.
அடுத்து இப்படித்தான் காட்சி வரும் என்று நாம் யூகிப்பதற்கு மாறாக
இருப்பதுதான் படத்தின் சுவாரஸ்யம். உதாரணமாக அரவிந்த் சுவாமியிடம் ஜெயம் ரவி
பரிசாக பெறும் ரிவால்வர் மூலம்தான் அவரை சுட்டுக் கொல்லப் போகிறார் என்று
எதிர்பார்க்க வைத்து விட்டு அதற்கு வாய்ப்பே தராததை சொல்ல முடியும்.
இது போல இன்னும் பல காட்சிகள் உண்டு. படத்தை பார்த்தால் உணர்வீர்கள்.
சொன்ன கருத்தும் சொல்லப்பட்ட விதமும் அருமை.
சன் டிவி பாணியில் சொல்ல வேண்டுமானால்
“தனி ஒருவன்” – பார்ப்பதற்கு தகுதியானவன்.
நன்றி நண்பரே
ReplyDeleteபார்க்கிறேன்
“வி.எஸ்.ஓ.பி” விமர்சனம் எழுதுவதற்கே லாயக்கில்லாத ஒரு படம்.....SUPER....short....
ReplyDeleteSeshan