சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் சேலத்தில். சனிக்கிழமையன்று மாலை கோட்டச் செயலாளர்கள் கூட்டமும் ஞாயிறன்று சேலம் கோட்டச் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு மாநாடும் நடைபெற்றது.
மாலை கோவை எக்ஸ்பிரசில் வேலூர் நோக்கி திரும்புகையில் பயணத்தை கொஞ்சம் உறக்கத்திற்கு பயன்படுத்துவோம் என்றுதான் யோசித்திருந்தேன். பக்கத்து இருக்கையில் இருந்த சென்னை 2 கோட்டத்தின் பொதுச்செயலாளர் தோழர் மனோ கையில் இருந்த புத்தகத்தின் அட்டை கண்ணைக் கவர்ந்தது.
கையிலெடுத்து படிக்கத் துவக்கினேன். அதற்குப் பிறகு உறக்கமாவது? ஓய்வாவது? கொஞ்சம் குழந்தையாகவே மாறிப் போனேன்.
அந்த புத்தகம் பற்றி கொஞ்சம் பார்ப்போமா?
நூல் ரஃப் நோட்டு
ஆசிரியர் ஆயிஷா இரா.நடராஜன்
வெளியீடு புக்ஸ் பார் சில்ட்ரன்
பாரதி புத்தகாலயம்
சென்னை - 18
விலை ரூபாய் 50
பல்பு பாபு என்ற படிப்பில் கொஞ்சம் பின் தங்கிய மாணவன், வகுப்பில் பலராலும் கிண்டல் செய்யப்படுபவன். அவனைப் பயன்படுத்திக் கொண்டு மற்ற மாணவர்கள் செய்கிற குறும்புகளுக்காக கண்டிக்கப் படுகிறவன். படிப்புதான் இல்லையென்றால் மன நிலையும் பாதிக்கப்பட வேண்டுமா என்று அவன் அம்மாவே நொந்து போகக் கூடிய அளவு மாட்டிக் கொள்கிறான்.
அவன் வகுப்பில் பல மாணவர்களின் ரஃப் நோட்டுக்கள் காணாமல் போகிறது. அவனுடைய நோட்டும் கூட. மற்ற மாணவர்களின் நோட்டுக்கள் கிடைக்கும் போது அவனுடையது மட்டும் கிடைக்கவில்லை.
அவனுடைய பழைய நோட்டுக்களை குதிரையில் வந்த ஒருவன் வாங்கிக் கொண்டு போனதாக அவன் அம்மா சொல்ல, வழக்கமாக குதிரையில் பள்ளிக்கு வரும் அவனது நண்பனைத் தேடி கடற்கரைக்குச் செல்கிறான்.
ஆனால் வந்தது அந்த நண்பனல்ல என்று தெரிகிற போது ஒடிந்து போகிறான். அப்படி உன் நோட்டில் என்ன இருக்கும் என்று அவனை நண்பன் கேட்க அவன் ஒரு கற்பனை உலகிற்குள் சென்று ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு கதை சொல்ல தொடங்குகிறான்.
அப்படி வரிசையாக பல கதைகள் வந்து விழுந்து கொண்டே இருக்கிறது. அந்த கதைகளை நான் சொன்னால் உங்களுக்கு சுவாரஸ்யம் போய் விடும். இருந்தாலும் ஒன்றே ஒன்று.
ராணுவ அதிகாரியாக இருந்து போர்க்களத்தில் வீரச்செயல்கள் செய்கிற ஒரு வாலிபன் குண்டு வீச்சில் பாதிக்கப்படுகிறான். அவன் முகமே விகாரமாகி விடுகிறது. அந்த முகத்தோடு அவன் தன் அம்மாவை பார்க்க விரும்பவில்லை. ஆனால் பாசத்தை கட்டுப்படுத்த முடியாமல் தன் அடையாளத்தைச் சொல்லாமல் அவள் மகனின் நண்பன் என்று சொல்லி சந்திக்கிறான். மறுநாள் அவன் புறப்படுகையில் தன் மகனுக்கு என்று உணவுப் பொட்டலம் கட்டித் தருகிறாள். ரயில் நிலையம் என்று அதைப் பிரித்து பார்க்கையில் "மகனே, ஏன் இந்த நாடகம்?" என்று எழுதியிருக்கும். மீண்டும் வீட்டிற்கு வந்து "என்னை எப்படி கண்டுபிடித்தாய்?" என்று கேட்பான். உன் துணியை இரவு தோய்த்த போது அதிலிருந்து உன் வாசத்தை கண்டுபிடித்தேன் என்பாள் அந்த தாய்.
வரிசையாக கதைகள் சொல்கிற போது அவனது தாழ்வு மனப்பான்மை நீங்கி விடும்.
அவனது ரஃப் நோட்டுக்கள் எப்படி தொலைந்தது? யார் எடுத்தது? மீண்டும் கிடைத்ததா?
புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்களேன். உங்களது குழந்தைகளுக்கு அவசியம் வாங்கிக் கொடுங்கள். அவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உருவாக்க நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.
பின் குறிப்பு : சேலம் செல்லும் வழியில் படித்த நூல்கள் பற்றி ....
நாளை .......
சுவரஸ்யம்.
ReplyDeletearumai!
ReplyDelete