Wednesday, September 2, 2015

22 வருடங்களுக்கு முன்பாககூட இதே நாளில் ....

இன்று நாடு முழுதும் தொழிற்சங்கங்களின் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தையும்  கூலியையும் இழந்து மத்தியரசுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு சில முதலாளிகளுக்கு சேவகம் செய்வதை விடுத்து விட்டு இனியாவது மக்களுக்கு நல்லது செய்வது பற்றி மோடி யோசித்தால் நல்லது. 

எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இந்த ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றது. வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்காக அலுவலகம் சென்றதுமே கோட்ட அலுவலகக் கிளையின் செயலாளர் தோழர் உ.கங்காதரன் "தோழர், உங்களுக்கு ஒரு பொக்கிஷம் என்று கொடுத்தார். 

அது ஒரு பழைய நோட்டீஸ். அதை அவர் மிகவும் பத்திரமாக வைத்திருந்திருக்கிறார். 1993 ம் வருடம் இதே நாளில் பென்ஷன் கோரிக்கைக்காக நாங்களும் வங்கி ஊழியர் சங்கங்களும் நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான நோட்டீஸ் அது. 17.08.1993 ல் பணியில் சேர்ந்த அவர் பதினைந்து நாட்களுக்காக பங்கேற்ற முதல் வேலை நிறுத்தம் என்பதால் அதை அவர் பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார். 

பென்ஷனைப் பெறுவதற்காக உறுதியோடு நடத்திய அந்த போராட்டங்கள் மனதில் வந்து போனது. அப்படி போராடி பெற்ற ஒரு பலனை பாதுகாப்பதற்காக நடந்தது இன்றைய போராட்டம். காலம் மாறினாலும் ஆட்சியில் அமர்ந்தவர்களின் முகம் மாறினாலும் கட்சிகளே வேறாக இருந்தாலும் முதலாளித்துவ சமுதாய அமைப்பு நீடிக்கிறவரை தொழிலாளர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment