இரண்டு திரைப்படங்களைப் பற்றிய
விமர்சனம் என்று நினைத்திருந்தால் மன்னிக்கவும். இது சமீபத்தில் நான் படித்து
முடித்த புத்தகங்களைப் பற்றிய விமர்சனம்.
சமீபத்தில் சேலம் சென்ற போது
எடுத்துச் சென்ற மூன்று புத்தகங்களையும் அந்த பயணத்திலேயே முழுமையாக படித்து
முடித்து விட்டேன் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு மிகப் பெரிய சாதனை. ஒன்று
துப்பறியும் கதை. இன்னொன்று ஒரு மருத்துவரின் நகைச்சுவைக் கட்டுரைகள். மூன்றாவது
இன்று மிகவும் தேவைப்படுகிற ஒரு வலிமையான கருத்தாயுதம். அதைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுத வேண்டுமென்பதால் நாளை பதிவு செய்கிறேன். இன்று இரண்டு நூல்கள் பற்றி மட்டும் பார்ப்போம்.
ஒவ்வொன்றாக பார்ப்போம்
நூல் நெப்போலியனின் கடிதம்
ஆசிரியர் சத்யஜித் ரே
தமிழில் வி.பா.கணேசன்
வெளியீடு புக்ஸ் பார்
சில்ட்ரன்,
சென்னை – 18
விலை ரூபாய் 50.00
சத்யஜித் ரே யின் ஃபெலூடா வரிசைக்
கதைகளில் ஒன்று. சீரியஸான திரைப்பட இயக்குனர் என்றே கருதப் படுகிற திரு சத்யஜித்
ரே அவர்களின் பன்முகப் பரிமாணங்கள் இந்த துப்பறியும் வரிசை நூல்களில்
வெளிப்படுகிறது.
தான் வளர்த்து வந்த பஞ்சவர்ணக்
கிளி காணவில்லை என்று வருத்தப்படும் சிறுவனுக்கு உதவ அவனது வீட்டிற்கு துப்பறியும்
நிபுணர் பெலூடா வருகையில் அவனது தாத்தா கொல்லப்படுகிறார். பழம்பெரும் கலைப்
பொருட்களை சேகரிப்பவரான அவர் தனது விலை மதிப்பில்லாத பொக்கிஷமாக கருதிய
“நெப்போலியனின் கடிதம்” காணாமல் போய் விடுகிறது.
வீட்டிலிருந்து யாரும் வெளியே
போகவில்லை என்பதை உறுதி செய்து கொள்கிற பெலூடா தன் விசாரணையை துவக்குகிறார். நெப்போலியனின்
கடித்த்தை கைப்பற்ற நினைக்கிற போட்டியாளர், பொறுப்பற்ற ஒரு மகன், வேறு வேலைக்கு
போகப் போகிற தற்போதைய செயலாளர், மீண்டும் பணிக்கு வர விரும்புகிற முன்னாள்
செயலாளர் என்று அவரது சந்தேகம் பலரின் மேல் விழுகிறது.
முன்னாள் செயலாளர்தான் கொலை
செய்திருக்க வாய்ப்புண்டு என்று கருதினாலும் அவர் எப்படி வீட்டை விட்டு
வெளியேறியிருப்பார் என்பதும் புரிபடவில்லை. இறுதியில் காணாமல் போன கிளி வைக்கப்பட்டிருந்த
கூண்டிலிருந்த ரத்த்த் துளியிலிருந்து அவர் கொலைகாரன் யார் என்பதைக்
கண்டுபிடிக்கிறார்.
தாடிமீசையோடு இருந்த முன்னாள்
செயலாளர்தான் அதை அகற்றி சோடா புட்டி கண்ணாடி போட்டுக் கொண்டு புதிய செயலாளராக
இருந்திருக்கிறார் என்பதையும் ஒட்டு மீசை, தாடியோடு கொலை செய்து விட்டு பின்பு அதை
அகற்றி விட்டு புதிய செயலாளராக வலம் வந்து விட்டார் என்று முடிக்கிறார்.
இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி
வருகிறதல்லவா?
சின்னதாக மருவும் தலைப்பாகையும்
கட்டினால் மாறு வேடம் என்று நம்மை நமபச் சொல்கிற திரையுலகத்தைச் சேர்ந்தவர்தானே
சத்யஜித் ரே என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
நூல் நோயர் விருப்பம்
ஆசிரியர் டாக்டர்
ஜி.ராமானுஜம், எம்.டி
வெளியீடு பாரதி புத்தகாலயம்,
சென்னை – 18
விலை ரூபாய் 50.00
மன நல மருத்துவரான டாக்டர்
ஜி.ராமானுஜம், தனது அனுபவங்களை மிகவும் நகைச்சுவையோடு எழுதியுள்ள கட்டுரைகளின்
தொகுப்புக்களே இதே நூல்.
நோய்களின் பெயர்கள் எவ்வளவு
கடினமாக உள்ளது என்றும் அந்த பெயர்கள் எவ்வாறு வைக்கப்படுகிறது என்ற கட்டுரையோடு
இந்த நூல் தொடங்குகிறது. பெயர்களை மறக்கும் நோய்க்கே ஒரு பெயர் உண்டு. அதன் பெயர்
டிஸ்னாமியா என்று சொல்கிறார். இந்த பெயரை நாம் மறக்காமல் இருக்க வேண்டும்.
டாக்டர்களின் புரியாத கையெழுத்து,
செல்லும் இடங்களில் எல்லாம் ஆலோசனை கேட்கும் நோயாளிகள், நோயாளிகளை பார்க்க வரும்
விசிட்டர்கள் செய்யும் குழப்படி ஆலோசனைகள், மாற்று மருத்துவம், கை வைத்திய
ஆலோசனைகள் என்று மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் சிரிக்க வைக்கும்.
அலைபேசியை தொலைப்பது, ரயில் பயண
அவஸ்தை, நேர நிர்வாகம் தொடர்பாக கூட்ட்த்திற்கு சிறப்பு விருந்தினராகச் சென்று
வேறு யாரும் வராமல் அவதிப்பட்ட்து, புத்தகத்தை கடன் கொடுத்து வராமல் இருப்பது, பல
இடங்களில் நாம் வெறும் எண்களாகவே அறியப்படுவது, உலகம் அழிவது என்று எல்லோரும்
சந்திக்கும் பிரச்சினைகளும் நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளது.
பெயர் தெரியாத நோயின் பெயர்
டிஸ்னாமியா என்றால் முகங்களை மறந்து போகும் நோயின் பெயர் ப்ரோசோபேக்னோஷியா என்று
சொல்கிற டாக்டர் மேலும் எழுதுவதைப் படியுங்கள்
“மனைவி எதிரில் வந்தால் கூட கண்டு
கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஒரு அசௌகர்யம் இருக்கிறது. முகத்தைத்தான்
அடையாளம் காண முடியாதே தவிர குரலை அடையாளம் காண முடியும். எனவே என்ன மசமசன்னு
நின்னுக்கிட்டு எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே என்று திட்ட ஆரம்பித்து
விட்டால் மனைவிதான் என்று தெரிந்து விடும்”
குறும்புக்கார டாக்டர்.
புத்தகத்தை வாங்கிப் படித்து சிரியுங்கள். சுண்டல் வினியோகிக்க பயன்படுத்த
வேண்டாம். அப்படி நடக்க வாய்ப்புள்ளதாக கருதும் டாக்டரின் அச்சத்தை நாம்
போக்கிடலாமே.
அன்புத் தோழர்க்கு வணக்கம்.
ReplyDelete“வலைப்பதிவர் திருவிழா-2015“ புதுக்கோட்டையில் நடக்கவிருப்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள் எங்களால் இயன்றவரை திடடமிட்டுப் புதியபுதியமுயற்சிகளோடு செய்துவருகிறோம். வலைப்பக்கம் வந்து பார்த்து ஆலோசனைகள் தரவேண்டுகிறேன் - பார்க்க-
http://bloggersmeet2015.blogspot.com/ மற்றும் http://valarumkavithai.blogspot.com/2015/09/blog-post_10.html
பிரபல பதிவரான தாங்களும் விழாவில் கலந்து கொள்ள வருவதோடு, இதுபற்றிய பதிவு ஒன்றைத் தங்கள் தளத்திலும் எழுதவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி
அன்பின் இனிய
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
நலமும் வளமும் சூழ வாழ்க வளமுடன்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com