Monday, September 21, 2015

கோவில்கள், மசூதிகள் அழிப்பு - உண்மையும் புரட்டும்



மிக முக்கியமான ஒரு நூல் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று சொல்லி இருந்தேனல்லவா. அது இந்த நூல்தான். 96 பக்கங்களில் இந்திய வரலாறு நம் கண் முன்னே விரிகிறது. நான் கொடுத்துள்ளது வெறும் அறிமுகம் மட்டுமே. முழுமையான நூலை படியுங்கள். அதன் மீது உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களை படிக்க தூண்டவே இந்த பதிவு. நூலின் முழு பரிமாணத்தை எனது பதிவில் கொண்டு வர முடியவில்லை என்ற சுய விமர்சனத்தையும் முன் வைக்கிறேன்.




நூல்                      கோவில்கள், மசூதிகள் அழிப்பு
                          உண்மையும் புரட்டும்
ஆசிரியர்                  அ.அன்வர் உசேன், வெ.பத்மநாபன்
வெளியீடு                 பாரதி புத்தகாலயம்
                          சென்னை 18.
விலை                    ரூபாய் 70.00
 முஸ்லீம் மன்னர்கள் தங்களின் படையெடுப்புக்களின் போது இந்து ஆலயங்களை இடித்தார்கள், கொள்ளையடித்தார்கள் என்பது சங் பரிவாரக் கும்பல் தொடர்ந்து செய்து வருகிற ஒரு பிரச்சாரம். மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் கூட “என்ன இருந்தாலும் கோயில்களை இடிப்பது தவறுதானே என்ற பொதுப்புத்திக்கு தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள். இது காவிக்கும்பலுக்கு தங்கள் மதவெறி செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வசதியாகி விடுகிறது.  
இந்த நேரத்தில் வந்திருக்கிற மிகச் சரியான நூல் இது.

நடந்த நிகழ்வுகளை உள்ளது உள்ளபடியே சொல்கிற நூல் இது. மத வழிபாட்டுத் தளங்களை இடிப்பது, கடவுள் விக்கிரங்களை கைப்பற்றுவது ஆகியவை இஸ்லாமிய மன்னர்கள் காலத்திற்கு முன்பிருந்தே நடந்த நிகழ்வுகள் என்பதையும் சேர்த்த் சொல்கிறது.

கி.பி 835 ல் பாண்டிய மன்னன் இலங்கைத் தீவை வென்ற போது அனுராதபுரத்தில் உள்ள அரசு கருவூலங்களையும் புத்த மடங்களையும் சூறையாடி கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் அங்கேயிருந்த தங்க புத்தர் சிலையையும் எடுத்து வருகிறான். பாண்டிய நாட்டில் வாரிசுப் பிரச்சினை வருகிற போது ஒரு தரப்பிற்காக தலையிடுகிற  இலங்கை மன்னன், தனது நாட்டிலிருந்து களவாடப்பட்ட தங்க புத்தர் சிலையை மீட்டுக் கொண்டு போகிறான்.

சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரனை கிபி 1045 ல் வெற்றி பெறுகிற சோழ மன்னன் ராஜாதிராஜன், சாளுக்கிய தலைநகர் கல்யாணியில் உள்ள கோயிலின் வாயிற்காப்போன் சிலையை கொண்டு வந்து கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வைக்கிறான்.

கிருஷ்ண தேவராயர் உதயகிரியை ஆண்ட கஜபதி வம்சத்தை வெற்றி பெற்ற போது அங்கேயிருந்த பாலகிருஷ்ணா சிலையை கைப்பற்றி தன் நாட்டில் வைக்கிறான்.

பதினோராம் நூற்றாண்டில் காஷ்மீரை ஆண்ட ஹர்ஷா என்ற மன்னன் கோயில்களை கொள்ளையடிக்கவும் அழிக்கவும் தனியாக ஒரு மந்திரியையே நியமித்திருந்தான். 

இது போல பல சம்பவங்களை வரலாற்றிலிருந்து எடுத்துத் தருகிற ஆசிரியர்கள் ஒரு முக்கியமான உண்மையையும் விளக்குகிறார்கள். 

"ஒரு குறிப்பிட்ட அரசன் கடவுளின் பிரதிநிதி. அந்த கடவுளின் பெயரால் அரசன் அரசியல் அதிகாரத்தைச் செலுத்துகிறான். அதை மக்கள் ஏற்கின்றனர். ஒரு அரசனைத் தாக்குகிற போது அவனது கடவுளையும் கடவுள் ஆட்சி நடத்துகிற ஆலயத்தையும் தாக்குகையில் அதிகாரம் இழந்தவனாக அரசன் கருதப்படுகிறான்"

ஆக கோயில்கள் ஆட்சியதிகாரத்தோடு சேர்ந்து பார்க்கப்படுகிற போது தாக்கப்படுகிறது என்ற உண்மையை சொல்கிற இந்த நூல்

மனுதர்மம் “இரதங்கள், குதிரைகள், அரச குடைகள், சிம்மாசனங்கள், செல்வம், தானியம், கால்நடைகள், பெண்கள் அனைத்து விதமான பொருட்கள் மற்றும் அடிப்படை உலோகங்கள் அனைத்தும் எவன் வெல்கிறானோ அவனுக்குச் சொந்தம் என்றும் அவற்றை “கடவுள்கள், அறிவாளர்கள், ஆசிரமங்கள், நீதிமான்கள், முதலியோருக்கு பகிர்ந்தளிக்கலாம்  என்று சொல்கிறதையும் பதிவு செய்கிறது.


முஸ்லீம் மன்னர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இருந்த அதே நடைமுறையை அவர்களும் பின்பற்றுகின்றனர். அதற்கான இலக்கணத்தை மனு வகுத்துக் கொடுத்துள்ளான். எந்த அரசன் எதிர்க்கிறானோ, அவன் சார்ந்த ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன. பணிந்து போகிற அரசனின் ஆலயங்கள் பாதுகாக்கப்படுகின்றன. 


“சோமநாதபுரத்திலிருந்து பல குரல்கள் என்ற அத்தியாயம் இந்த நூலின் மிக முக்கியமான பகுதி. கஜனி முகமதுவால் சோமநாதபுரம் ஆலயம் தாக்கப்பட்டது பற்றி மிகவும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. கஜனி முகமது எவ்வளவு இரக்கமற்றவனாக இருந்தான் என்பதை அவன் முல்தான் மற்றும் மன்சூரா பகுதிகளில் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான இஸ்மாயிலி மற்றும் ஷியா பிரிவு முஸ்லீம்களை கொன்றதையும் அவர்களின் மசூதிகளையும் இடித்துத் தள்ளியது பற்றியும் அதனால் அவன் சன்னி பிரிவு போராளியாக பார்க்கப்பட்டான் என்பதையும் விளக்கமாகவே பதிவு செய்துள்ளனர். அதே போல கஜனி முகமதுவின் தாக்குதல்களுக்கு துருக்கி மற்றும் அரேபிய நாடுகளுக்கிடையே குதிரை வணிகத்தில் இருந்த போட்டியும் ஒரு காரணம் என்பதையும் குறிப்பிடுகின்றனர்.

அதே சோமநாதபுரத்தில் கஜனி முகமது தாக்குதல் நடந்த இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கே ஒரு மசூதி கட்ட ஜைனர்களும் இந்துக்களும் உதவி செய்துள்ளனர் என்ற புதிய தகவலையும் இந்த நூல் சொல்கிறது. அப்படியென்றால் ஆயிரம் வருடக் குமுறல் என்று காவிக்கூட்டம் சொன்னது கற்பனையல்லவா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

கஜனி முகமது அளவிற்கு மற்ற இஸ்லாமிய மன்னர்கள் மோசமாக நடந்து கொள்ளவில்லை என்று சொல்கிற இந்த நூல், சில இஸ்லாமிய மன்னர்கள் கோயில்களை  இடித்தது பற்றியும் அவை பெரும்பாலும் இந்து மன்னர்கள் உருவாக்கிய வழிமுறையின் அடிப்படையிலேயே இருந்திருக்கிறது என்பதையும் கோயில்களை பாதுகாத்த இஸ்லாமிய மன்னர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது.

அது மட்டுமல்ல, கோயில்கள் அளவிற்கு மசூதிகள் இடிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிடுகிற நூல், கோயில்கள் போல மசூதிகள் அரசனின் ஆட்சியதிகாரத்தோடு இணைந்த்தில்லை என்ற காரணத்தையும் விவரிக்கிறது.

இந்தியாவில் சமண, பௌத்த வழிபாட்டுத் தளங்களையெல்லாம் அழித்த்து யார் என்பதையும் பல உதாரணங்களோடு சொல்கிற இந்த நூல் வலியுறுத்தும் ஒரு முக்கியமான விஷயம் ஒன்றும் உண்டு. இந்தியாவிற்கு வராமலேயே இந்தியாவின் வரலாற்றை எழுதிய பிரிட்டிஷ் ஆய்வாளர்கள், தங்களின் ஆட்சி மேம்பட்டது என்பதைக் காண்பிப்பதற்காக முந்தைய மன்னர்களைப் பற்றி மோசமாக எழுதியுள்ளார்கள் என்பதையும் இந்த நூல் வலியுறுத்துகிறது.

சில உண்மைகளை மிகையாகக் கூறி சிலவற்றை இருட்டடிப்பு செய்து வரலாற்றில் புரட்டு வேலையை மோடி அரசு செய்கிற நேரத்தில் உள்ளதை உள்ளபடி சொல்கிறது இந்த நூல்.

கடந்த கால நிகழ்வுகளை தற்காலத்தில் சரி செய்கிறோம் என்று பின்னோக்கி சென்று கொண்டிருந்தால் காட்டுமிராண்டிக் காலத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும் என்பதுதான் இந்த நூல் சொல்கிற செய்தி.


1 comment:

  1. அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete