Thursday, March 26, 2015

மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்




தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத் தோழர்கள் கடந்த வாரம் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் ஒன்றை வேலூர் சத்துவாச்சாரி பகுதியில்  நடத்தினார்கள். அக்கூட்டத்தில் பேசுமாறு என்னை அழைத்திருந்தார்கள். நானும் சென்று எனக்குத் தெரிந்தவற்றைப் பேசி விட்டு வந்தேன்.

தெருமுனைக் கூட்டம் நடந்த இடத்திற்கு எதிரில் ஒரு பேக்கரி உள்ளது. பிரெட் வாங்குவதற்காக அந்த பேக்கரிக்கு சிறிது நேரம் முன்பாக சென்றிருந்தேன். 

பிரெட்டைக் கொடுத்துக் கொண்டே அந்த பேக்கரி ஊழியர் 

"சார் போன வாரம் நீங்க நல்லா பேசினீங்க. சிறப்பாக இருந்தது. மத்திய அரசாங்கம் நம்மளை எப்படி ஏமாத்தறீங்கனு விளக்கமா சொன்னீங்க, நிச்சயம் மாற்றம் வரும் சார்" 

மிகுந்த நம்பிக்கையோடு சொல்லி விட்டு 

"எங்க ஓனரும் நீங்க பேசினதை நின்னு முழுசா கேட்டார். நம்ப கஸ்டமர்தான் என்று மற்ற ஊழியர்களுக்கும் சொன்னார்" 

என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டார். அந்த ஓனர் ஒரு திமுக பொறுப்பாளர் என்பது நான் உங்களுக்கு அளிக்கும் உபரி தகவல்.

உண்மைகளைச் சொன்னால் மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர் என்பதே மனதிற்கு வலிமை தருகிறது.

இன்று காது கொடுத்து கேட்பவர்கள் நாளை நிச்சயம் களம் இறங்குவார்கள் என்ற நம்பிக்கையும் கிடைத்துள்ளது.

பி.கு " இப்போதெல்லாம் புகைப்படம் இல்லாமல் எந்த பதிவும் போடுவதில்லை என்பதால் இம்மாதம் ஒன்பதாம் நாள் இன்சூரன்ஸ் சட்டத்திற்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளேன். 

No comments:

Post a Comment