இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் பெரும்
பகுதியினர் ஒரு வெறி பிடித்த கூட்டமாகவே
பல முறை நடந்து கொண்டுள்ளனர். போற்றுவதற்கும் சரி, தூற்றுவதற்கும் சரி எந்த
அளவுகோளோ இல்லை வரையறையோ இல்லாதவர்கள். இப்படி மாறி மாறி மதீப்பிடுகளை மாற்றிக்
கொள்கிறோமே என்பதற்கு வெட்கமும் பட மாட்டார்கள்.
வெற்றியின் போது கடவுளாகக் கொண்டாடுவார்கள்,
தோல்வியடைந்த மறு கணமே கல் வீசித் தாக்குவார்கள்.
நூறாவது செஞ்சுரிக்காக இப்படி ஜவ்வு மாதிரி இழுக்க
வேண்டுமா என்று திட்டப்பட்ட சச்சினை கிரிக்கெட்டின் கடவுளாக்கி, அவர் பற்றி யாரும்
பேசவே கூடாது என்று எச்சரித்தார்கள்.
டோனியின் வீட்டை கல் வீசி தாக்கியவர்கள் நான்கு
வருடங்கள் கழித்து அவர் மீது மலர் மழை பொழிந்தார்கள். அவங்க “தல” டோனிக்கு
விசிலடித்தும் காட்டினார்கள்.
உலகக் கோப்பைக்கு செல்லும் முன்னே ஆஸ்திரேலியாவில்
இந்தியா அடி வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வசை பாடிக் கொண்டிருந்த ரசிகர்கள்
உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்ட போது “இதெல்லாம் ஒரு அணியா?” என்று
மூர்க்கமாக விமர்சித்தார்கள்.
பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற்ற பின்னர்
நிலைமையே முற்றிலுமாக மாறி விட்டது. இந்த உலகக் கோப்பையில் இந்திய ரசிகர்கள்
வெறியர்களாக மாறத் தொடங்கிய தருணம் அது.
அதற்கடுத்து ஒவ்வொரு வெற்றியாக கிடைக்க கிடைக்க அந்த
வெற்றி ஊட்டிய வெறியில் உலகக் கோப்பையை வென்று விட்டதாகவே கருதி மகிழ்ச்சிக்
களிப்பில் திளைக்க ஆரம்பித்து விட்டனர்.
எதற்கும் லாயக்கில்லாத அணி, கால் இறுதிக்கு வந்தாலே போதும்
என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தோமே என்பதெல்லாம் “கஜனி சூர்யா” போல அம்னீஷியா
வந்து மறந்து விட்டார்கள்.
விளையாட்டை விளையாட்டாக பார்ப்பதில்லை.
போதாக்குறைக்கு அதை தேச பக்தியோடு வேறு இணைத்து விட்டார்கள். அதீத எதிர்பார்ப்பு
மிகப் பெரும் ஏமாற்றமாக மாறி விட்டது. பாகிஸ்தான் ரசிகர்கள் வாங்கி வைத்த பட்டாசை
வெடிக்க முடியாமல் போய் விட்டது என்று கிண்டல் செய்து கொண்டிருந்தவர்களுக்கு
தாங்கள் வாங்கி வைத்த பட்டாசை வெடிக்க முடியாமல் போய் விட்டதே என்பதை தாங்கிக்
கொள்ள முடியவில்லை.
அதனால்தான் வரம்பு மீறிய கண்டனங்கள் வந்து கொண்டே
இருக்கிறது. இதிலே விராட் கோலியை காதலிக்கிற காரணத்தாலே நடிகை அனுஷ்கா
ஷர்மாவிற்கும் எசப்பாட்டுக்கள் கிடைத்து வருகிறது.
இப்படியே நீடிப்பார்களா என்று சொல்ல முடியுமா?
கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விடுவார்களா?
கண்டிப்பாக இல்லை.
அடுத்து ஏதாவது ஒரு வெற்றி கிடைத்தால் போதும்,
அவ்வளவுதான் மறுபடியும் “ஷார்ட் டைம் மெமரி லாஸ்” வந்து விடும். காலில் போட்டு
மிதித்த இந்திய அணியை மீண்டும் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு உற்சாகக்
கொண்டாட்டத்தை துவக்கி விடுவார்கள்.
இவர்கள் போற்றுகையில் மகிழ்ந்தாலோ, தூற்றும் போது
சுணங்கினாலோ அவ்வளவுதான் அந்த விளையாட்டு வீரரின் கதி அதோகதிதான்.
No comments:
Post a Comment