ஞாயிறு சேலம் சென்றேன். கையில் துணையாக ஹிந்து நடுப்பக்க ஆசிரியர் அவர்கள் எழுதிய "கடல்" நூல் இருந்தது.
கடற்கரையில் அலைகளில் காலை நனைப்பது, சிறு வயதில் ராமெஸ்வரத்தில் குருசடைத் தீவிற்குச் சென்றது, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு ஒரு முறை சென்றது, மும்பை சென்றிருந்த போது ஒரு குகைத்தீவிற்குச் சென்றது ஆகியவை மட்டுமே அதிக பட்ச கடல் அனுபவமாக இருந்த எனக்கு கடல் பற்றிய ஒரு புரிதலை அளித்த நூல் அது.
தமிழகத்தின் கடல் முனையான நீரோடி முதல் பழவேற்காடு வரை நேரடியாகச் சென்று அங்குள்ள கடலோடிகளோடு பழகி அவர்களின் பிரச்சினைகளை முழுமையாக உள்வாங்கி எழுதியுள்ள பல கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
பல விதமான படகுகள் பற்றி, மீன்களின் வகைகள் பற்றி துவக்க கட்டுரைகள் விளக்குகிறது. சுறா அச்சுறுத்தும் என்றால் ஓங்கல்கள், அதுதாங்க டால்பின் அசத்துகிறது. கட்டுமரப் பயணம் எவ்வளவு சாகசமானது என்பதையும் சொந்தமாய் வள்ளம் வைத்திருக்கும் சம்மாட்டியராவது எவ்வளவு பெருமிதம் அளிக்கக் கூடியது என்பதை படிக்கும் போது உணர முடிகிறது.
அன்றாடம் கடல் சென்று திரும்புவதை விட மிகப் பெரிய அபாயமாக ரசாயனத் தொழிற்சாலைகள் உருவாக்கியதுள்ளது என்பதை அவரது கடலூர், தூத்துக்குடி அனுபவங்கள் சூடாகச் சொல்கிறது என்றால் கனிம மணல் மாபியாக்களின் சதிகளையும் சுரண்டல்களையும் கதிரியக்கம் அளிக்கும் பரிசாக புற்று நோய் பெருகி வருவதை இன்னொரு கட்டுரை கன்னத்தில் அறைந்து சொல்கிறது.
இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் பற்றி அழுத்தமான சில உண்மைகள், இழுவை மடி வலை, இரட்டை மடி வலை, டிராலர்கள் ஆகியவற்றின் விளைவால் அழிந்து போகும் மீன் வளம், ஆழ்கடலில் மீன் பிடிக்க வேண்டியவர்கள் கரைக் கடலிலும் அண்மைக் கடலிலும் மீன் பிடிப்பது உலக மயத்தின் விளைவு என்பதையும் அவர் சொல்கிறார்.
தனுஷ்கோடி பேரழிவு, சுனாமி பேரழிவு பற்றிய கட்டுரைகள் கண்ணில் நீரை வரவழைக்கும். சுனாமியின் போது சாம்பார் சாதத்தையும் தயிர் சாதத்தையும் சாப்பிட முடியாதவ்ர்களை "என்ன திமிர் இவர்களுக்கு" என்று சிலர் வசை பாடியதை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். நூற்றுக் கணக்கில் சப்பாத்தி செய்து கொண்டு வந்ததை யாரும் சீண்டாததால் ஒரு மார்வாடி திட்டிக் கொண்டே திரும்பியதை நான் நேரடியாக பார்த்துள்ளேன்.
ஒட்டு மொத்த தமிழகத்தையும் சீரழித்து வரும் டாஸ்மாக்கிற்கு கடல் புறமும் விதி விலக்கல்ல என்பதையும் உணர முடிகிறது.
மிகவும் கனத்த விஷயங்களோடு எழுதப்பட்ட இந்த நூலின் இறுதிக் கட்டுரைகள் வெளிச்சமான பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளது.
சுறா வேட்டை சாகசக் காரர்கள், கடலில் விழுந்தவர்களைக் காப்பாற்றும் இயேசு புத்திரன், கண்பார்வை இல்லாவிட்டாலும் கடுமையாய் உழைக்கும் முனிய சாம, தரமான மீன் அனுப்பி எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்ற கண்ணனின் மகன் சேகர் ஆகியவை சுவாரஸ்யமான கட்டுரைகள்.
கடலை கடலோடிகளிடம் கொடுங்கள் என்பதுதான் இந்த நூல் சொல்லும் அடிப்படைச் செய்தி.
படிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நீங்களும் என்னைப் போல கடலில் மூழ்கி விடுவீர்கள்.
திரு சமஸ் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
நல்ல புத்தகம் போல இருக்கிறது. புத்தகம் படிக்கும் பொறுமை வயது காரணமாகக் குறைந்து வருகிறது.
ReplyDelete