Sunday, March 1, 2015

சேரிக்குள் நுழைந்தார் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சாமி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டம் வெற்றி சேரிக்குள் வந்த காஞ்சி வரதராஜ பெருமாள் சாமி ஊர்வலம்
 



காஞ்சிபுரம்,பிப்.28-
காஞ்சிபுரம் மாவட்டம்,வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட தென்னேரி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி பௌர்ணமியன்று ஏரியில் தெப்பத் திருவிழாநடைபெறும். இவ்விழாவிற்கு மூல விக்கிரகமாக காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் சாமிசெல்வது வழக்கம். 

இத்திருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்சாமி அயிமிச்சேரி, திருவாங்காரனை, குன்னம், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் உயர் சாதியினர் வசிக்கின்ற ஊர்த்தெரு பகுதிக்கு மட்டுமே செல்லுகிற நிலை இருந்து வருகின்றது.இந்நிலையில் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் வசிக்கின்ற தெருவுக்குள்ளும் வரதராஜ பெருமாள் சாமி வர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைமையில் விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, புரட்சி பாரதம், மக்கள் மன்றம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், காஞ்சிபுரத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.இதனையடுத்து, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மூன்று கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது. இப்பேச்சுவார்த்தையின் முடிவில் பிப்.28 அன்று நடை பெறும் தென்னேரித் தெப்பத் திருவிழாவிற்கு வரும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சாமி ஊர்வலம் தலித்மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள கோவில் வளாகம் அருகில் கொண்டு வந்து நிறுத்துவது என ஒப்பந்தமானது. தலித் கிராமத்திற்கு வரும் சாமி ஊர்வலத்தை வரவேற்கும் விதமாக கிராம மக்கள் சாலைகளை சீரமைத்தும் மரங்களை வெட்டியும் வழிகளை ஏற்படுத்தினர்.

மேலும் கோவில் நிர்வாகம் நிர்ணயித்த ஊர்வலத்துக்கு செலுத்த வேண்டிய பணம் ரூ.10 ஆயிரத்தை வசூல் செய்து செலுத்தினர்.அதன்படி சனிக்கிழமை (பிப்.28)அன்று தென்னேரி தெப்பத் திருவிழாவிற்கு வீதி உலாவந்தகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவில் சாமிஊர்வலம் அயிமிச்சேரி, திருவாங்காரனை, குன்னம், அகரம் உள்ளிட்ட தலித் கிராமங்களுக்கு ஊர்வலமாகச் சென்றது.முதன் முறையாக தலித் கிராமங்களுக்கு சாமிஊர்வலம் வருவதற்கு போராட்டம் நடத்திய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிஉள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, (பிப்.27) அன்று கோரிக்கை வெற்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. போராட்டக்குழுவில் இடம்பெற்ற முன்னணியின் மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணா தலைமையில் விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் விடுதலைசெழியன், கட்சியின் நிர்வாகி பாசறை செல்வராஜ் பகுஜன் சமாஜ் மாவட்டத் தலைவர் மருத்துவர் சத்தியராஜ், கட்சியின் நிர்வாகி சுரேஷ், முன்னணியின் நிர்வாகிகள் லாரன்ஸ், கே.எஸ்.ராஜேந்திரன், ஜிவசந்தா, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் உள்ளிட்ட அனைவருக்கும் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து நன்றி தெரிவித்தனர்.

நன்றி தீக்கதிர் 01.03.2015 

மேலும் சில புகைப்படங்கள்

முகநூலிலிருந்து எடுத்தது























  

1 comment:

  1. எப்படியோ அம்பிகளை பொறுத்தவரை சில்லறை மட்டுமே அதி முக்கியம்.
    மற்றதெல்லாம் அனுசரித்து தேவைகேற்ப நடந்து கொள்வார்கள்.
    கவலை வேண்டாம்.

    ReplyDelete