Tuesday, March 31, 2015

சட்டசபையில வேற என்னய்யா பேசறது?

 Governor K. Rosaiah addresses the Tamil Nadu Assembly on Friday. Photo: V. Ganesan

நேற்றைய தினம் தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற காட்சி

எதிர்க்கட்சி : திருவாரூரில் நடைபெற்ற கட்டிட விபத்து

சபாநாயகர் : அனுமதி மறுக்கப்படுகிறது

எதிர்க்கட்சி : திருநெல்வேலியில் தற்கொலை செய்து கொண்ட பொறியாளர்

சபாநாயகர் : அனுமதி மறுக்கப்படுகிறது

எதிர்க்கட்சி : வேலூர் மாவட்ட ஆட்சியரால் விபத்து

சபாநாயகர் : அனுமதி மறுக்கப்படுகிறது

எந்த ஒரு பிரச்சினை பற்றி பேசுவதற்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றால் சட்டசபையில் வேறு என்னதான் பேசுவது?

புரட்சித் தலைவி அம்மா வாழ்க என்று எதிர்க்கட்சிகளும் கோஷம் போட வேண்டுமா?
 

போன வருடம் போலீஸ், இந்த வருடம் நாய்கள்

 http://www.thehindu.com/multimedia/dynamic/01158/CB28--STRAY_DOGS_1158408f.jpg

வீடு திரும்ப பதினோரு மணிக்கு மேலாகும் என்றால் காலையில் அலுவலகம் செல்லும் போதே ஆட்டோவில் சென்று இரவும் ஆட்டோவில் திரும்புவேன். காரணம் தெருநாய்ப் பிரச்சினை. ஆனாலும் சில சமயம் நாம் எதிர்பாராமல் நேரமாகி விட்டால் வீடு வந்து சேரும் வரை கொஞ்சம் பதட்டமாகவே இருக்கும். வீட்டிற்கு வர மூன்று வழி உண்டு. அந்த மூன்று வழிகளிலும் பட்டா போட்டு கொடுத்தது குறைந்தது நான்கு  அல்லது ஐந்து நாய்க் கூட்டங்களாவது இருக்கும். 

நேற்று  பதிவு எழுத்தர் என்ற பணிக்கான பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு நடந்தது.  நேர்முகத் தேர்வு முடிந்த நாளே பதவி உயர்வு முடிவுகளை வெளியிடுவது என்ற நடைமுறை உள்ளதால் அதனை அறிந்து கொள்ள சங்கப் பொறுப்பாளர்களும் ஆர்வமுள்ள சில முன்னணித் தோழர்களும் அலுவலகத்தில் இருப்பது வழக்கம்.

கடந்த வருடம் இதே பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு 30.04.2014 அன்று முடிந்து வெளியானது. இரவு பதினோரு மணியாகி விட்டது. நாய்த் தொந்தரவில் சிக்கிக் கொள்ளப் போகிறோம் என்ற அச்சத்திலேயே வீடு  திரும்பினால் வழியில் போக்குவரத்துக் காவலர்கள் மடக்கி விட்டார்கள். 

அன்றைக்கு டாஸ்மாக் கனவான் ஒருவரின் நியாயமான கேள்வியால் இன்ஸ்பெக்டர் எரிச்சலான   சம்ப்வத்தைப் பற்றி கடந்த வருடமே பதிவு செய்திருந்தேன். அதனால் வீடு திரும்ப இன்னும் தாமதமானது. அன்று என்னமோ நாய்கள் சீக்கிரமாக தூங்கி விட்டது போல. யாரும் தொல்லை கொடுக்கவில்லை.

இரவு பத்து முப்பதிற்கு அலுவலகத்திலிருந்து புறப்பட்டேன். இந்த வருடமும் மாதக் கடைசி. ஆகவே மீண்டும் ஒரு முறை டிராபிக் போலீஸ்  மடக்கப் போகிறது என்று நினைத்தால் அவர்களின் தொல்லை இல்லை. 

மாறாக இரண்டு இடங்களில் நாய் துரத்தத் தொடங்கி விட்டது. ஒரே ஒரு நல்ல விஷயம். இரண்டு இடங்களிலும் அவர்களது தெரு முனை வந்ததும் நின்று விட்டது. எல்லை தாண்டாத பயங்கரவாதம்.

அவர்களின் தனிமையை நாம் தொந்தரவு செய்யும் போது அவர்கள் நமக்கு தொல்லையாக மாறி விடுகின்றனர்.

ஆகவே நாய்களின் நேரத்தைக் கணக்கில் கொண்டு நம்முடைய வேலைகளை நாம் திட்டமிட்டாக வேண்டும். 

எல்லா புகழும் மேனகா காந்திக்கே



Sunday, March 29, 2015

விக்கிரமாதித்தன் முயற்சியில் பாதாம் அல்வா



தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி வேதாளத்தை தன் தோள் மீது சுமந்து கொண்டு போன கதையாக நானும் விடாமல் இன்று மீண்டும் முயற்சி செய்தேன். சர்க்கரை அதிகமாகியிருக்கலாம் என்று திருமதி துளசி கோபால் தனது பின்னூட்டத்தில் சொல்லியிருந்ததையும் கவனத்தில் கொண்டு தயாரித்ததில் இன்று பாதாம் அல்வா வெற்றிகரமாக வந்து விட்டது.



மீண்டும் சொதப்பி 'எதுக்கு இப்படி தேவையில்லாம பொருளையெல்லாம் வீணாக்கறீங்க" என்ற பாட்டை மனைவியிடம் வாங்காததுதான் மிகப் பெரிய மகிழ்ச்சி.

 

வாழ்த்துக்கள் சாய்னா, இந்த இடம் நிலைக்கட்டும்



பேட்மிண்டன் விளையாட்டில் பெண்களுக்கான  உலகத் தர வரிசையில்  சாய்னா நேஹ்வால் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பாராட்டுக்கள் சாய்னா, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சதுரங்கத்தில் விஸ்வநாதன் ஆனந்த், பில்லியர்ட்ஸ் விளையாட்டில் கீத் சேத்தி, மைக்கேல் பெரைரா, பங்கஜ் அத்வானி, கேரம் போர்டில் எண்ணற்ற வீரர்கள் என்று உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்றுள்ளனர்,

அந்த விளையாட்டுக்களை விட கூடுதல் உடலுழைப்பை கோருகிற பேட்மிண்டன் விளையாட்டில் முதலிடம் பெற்றுள்ளது ஒரு சிறப்பம்சம். 

இந்திய விளையாட்டு ரசிகர்களே, உலகக் கோப்பை தோல்விக்கான சோகத்தை ஒதுக்கி வைத்து விட்டு இந்த மகத்தான சாதனையை கொண்டாட வாருங்கள்.

மீண்டும் வாழ்த்துக்கள் சாய்னா, உங்கள் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் வாழ்த்துக்கள்

 

Saturday, March 28, 2015

இளையராஜாவின் ஆஸ்கர் வரிசையில் இன்று

 http://i.ytimg.com/vi/clRa4aGfNkA/hqdefault.jpg

 http://www.iflickz.com/wp-content/uploads/2014/02/mahendran-and-ilayaraja-team-up-again.jpg

 http://i.ytimg.com/vi/hk3079rOcxI/hqdefault.jpg

ஆஸ்கருக்கு அனுப்பியிருந்தால் இசைஞானி இளையராஜாவிற்கு  கண்டிப்பாக விருது கிடைத்திருக்கும்  என்று இப்படத்தின் பெயரை நான் சொன்னால் நீங்கள் அனைவரும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வீர்கள்.

ஜானி

ராஜா கொடுத்த மிகப் பெரிய இசை விருந்து இப்படம்.

பாடல்கள், பின்னணி இசை என்று இரண்டிலுமே தூள் கிளப்பியிருப்பார் ராஜா. நான் பள்ளியில் படிக்கும் போது வந்த படம். பாடல்களை இன்று கேட்டாலும் புதிதாகவே இருக்கிறது. புத்துணர்வையும் தருகிறது. 

இனிய மனது கொண்ட  எல்லோருக்கும் இந்த இசை பிடிக்கும்.


முப்பத்தி ஐந்து வருடங்களுக்குப் பிறகும் இன்னும் காற்றில் அவரது கீதம் ஒலித்துக்  கொண்டுதான் இருக்கிறது.

இந்த தாளகட்டையை தூது விட்டாவது  கைப்பற்றிக் கொள்ளுங்கள்.

பாடல்கள் மட்டுமா அற்புதம்?

அதற்கு போட்டியாய் இருப்பது  பின்னணி இசை.

ஜானி படத்தின் பின்னணி இசையின் சில பகுதிகள் மட்டும் இங்கே உள்ளது 


ராஜாவின் தலை சிறந்த நூறு படங்கள் என்று பட்டியல் போட்டால் அதில்
ஜானிக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு.

பின் குறிப்பு : பின்னணி இசையின் இரண்டாவது இணைப்பைப் பார்க்கையில் எனக்கு தோன்றிய ஒரு கருத்து.

சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொடுத்து ரஜனிகாந்த் என்ற நல்ல நடிகனை நமது ரசிகர்களும் இயக்குனர்களும் தொலைத்து விட்டார்கள்.

Friday, March 27, 2015

இவர்கள் ரசிகர்களா? வெறியர்களா?



http://data1.ibtimes.co.in/en/full/567875/india-vs-australia-semi-final-match.jpg

இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் பெரும் பகுதியினர்  ஒரு வெறி பிடித்த கூட்டமாகவே பல முறை நடந்து கொண்டுள்ளனர். போற்றுவதற்கும் சரி, தூற்றுவதற்கும் சரி எந்த அளவுகோளோ இல்லை வரையறையோ இல்லாதவர்கள். இப்படி மாறி மாறி மதீப்பிடுகளை மாற்றிக் கொள்கிறோமே என்பதற்கு வெட்கமும் பட மாட்டார்கள்.

வெற்றியின் போது கடவுளாகக் கொண்டாடுவார்கள், தோல்வியடைந்த மறு கணமே கல் வீசித் தாக்குவார்கள்.

நூறாவது செஞ்சுரிக்காக இப்படி ஜவ்வு மாதிரி இழுக்க வேண்டுமா என்று திட்டப்பட்ட சச்சினை கிரிக்கெட்டின் கடவுளாக்கி, அவர் பற்றி யாரும் பேசவே கூடாது என்று எச்சரித்தார்கள்.

டோனியின் வீட்டை கல் வீசி தாக்கியவர்கள் நான்கு வருடங்கள் கழித்து அவர் மீது மலர் மழை பொழிந்தார்கள். அவங்க “தல” டோனிக்கு விசிலடித்தும் காட்டினார்கள்.

உலகக் கோப்பைக்கு செல்லும் முன்னே ஆஸ்திரேலியாவில் இந்தியா அடி வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வசை பாடிக் கொண்டிருந்த ரசிகர்கள் உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்ட போது “இதெல்லாம் ஒரு அணியா?” என்று மூர்க்கமாக விமர்சித்தார்கள்.

பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற்ற பின்னர் நிலைமையே முற்றிலுமாக மாறி விட்டது. இந்த உலகக் கோப்பையில் இந்திய ரசிகர்கள் வெறியர்களாக மாறத் தொடங்கிய தருணம் அது.

அதற்கடுத்து ஒவ்வொரு வெற்றியாக கிடைக்க கிடைக்க அந்த வெற்றி ஊட்டிய வெறியில் உலகக் கோப்பையை வென்று விட்டதாகவே கருதி மகிழ்ச்சிக் களிப்பில் திளைக்க ஆரம்பித்து விட்டனர்.

எதற்கும் லாயக்கில்லாத அணி, கால் இறுதிக்கு வந்தாலே போதும் என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தோமே என்பதெல்லாம் “கஜனி சூர்யா” போல அம்னீஷியா வந்து மறந்து விட்டார்கள்.

விளையாட்டை விளையாட்டாக பார்ப்பதில்லை. போதாக்குறைக்கு அதை தேச பக்தியோடு வேறு இணைத்து விட்டார்கள். அதீத எதிர்பார்ப்பு மிகப் பெரும் ஏமாற்றமாக மாறி விட்டது. பாகிஸ்தான் ரசிகர்கள் வாங்கி வைத்த பட்டாசை வெடிக்க முடியாமல் போய் விட்டது என்று கிண்டல் செய்து கொண்டிருந்தவர்களுக்கு தாங்கள் வாங்கி வைத்த பட்டாசை வெடிக்க முடியாமல் போய் விட்டதே என்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதனால்தான் வரம்பு மீறிய கண்டனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதிலே விராட் கோலியை காதலிக்கிற காரணத்தாலே நடிகை அனுஷ்கா ஷர்மாவிற்கும் எசப்பாட்டுக்கள் கிடைத்து வருகிறது.

இப்படியே நீடிப்பார்களா என்று சொல்ல முடியுமா? கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விடுவார்களா?

கண்டிப்பாக இல்லை.

அடுத்து ஏதாவது ஒரு வெற்றி கிடைத்தால் போதும், அவ்வளவுதான் மறுபடியும் “ஷார்ட் டைம் மெமரி லாஸ்” வந்து விடும். காலில் போட்டு மிதித்த இந்திய அணியை மீண்டும் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு உற்சாகக் கொண்டாட்டத்தை துவக்கி விடுவார்கள்.

இவர்கள் போற்றுகையில் மகிழ்ந்தாலோ, தூற்றும் போது சுணங்கினாலோ அவ்வளவுதான் அந்த விளையாட்டு வீரரின் கதி அதோகதிதான்.


Thursday, March 26, 2015

மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்




தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத் தோழர்கள் கடந்த வாரம் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் ஒன்றை வேலூர் சத்துவாச்சாரி பகுதியில்  நடத்தினார்கள். அக்கூட்டத்தில் பேசுமாறு என்னை அழைத்திருந்தார்கள். நானும் சென்று எனக்குத் தெரிந்தவற்றைப் பேசி விட்டு வந்தேன்.

தெருமுனைக் கூட்டம் நடந்த இடத்திற்கு எதிரில் ஒரு பேக்கரி உள்ளது. பிரெட் வாங்குவதற்காக அந்த பேக்கரிக்கு சிறிது நேரம் முன்பாக சென்றிருந்தேன். 

பிரெட்டைக் கொடுத்துக் கொண்டே அந்த பேக்கரி ஊழியர் 

"சார் போன வாரம் நீங்க நல்லா பேசினீங்க. சிறப்பாக இருந்தது. மத்திய அரசாங்கம் நம்மளை எப்படி ஏமாத்தறீங்கனு விளக்கமா சொன்னீங்க, நிச்சயம் மாற்றம் வரும் சார்" 

மிகுந்த நம்பிக்கையோடு சொல்லி விட்டு 

"எங்க ஓனரும் நீங்க பேசினதை நின்னு முழுசா கேட்டார். நம்ப கஸ்டமர்தான் என்று மற்ற ஊழியர்களுக்கும் சொன்னார்" 

என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டார். அந்த ஓனர் ஒரு திமுக பொறுப்பாளர் என்பது நான் உங்களுக்கு அளிக்கும் உபரி தகவல்.

உண்மைகளைச் சொன்னால் மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர் என்பதே மனதிற்கு வலிமை தருகிறது.

இன்று காது கொடுத்து கேட்பவர்கள் நாளை நிச்சயம் களம் இறங்குவார்கள் என்ற நம்பிக்கையும் கிடைத்துள்ளது.

பி.கு " இப்போதெல்லாம் புகைப்படம் இல்லாமல் எந்த பதிவும் போடுவதில்லை என்பதால் இம்மாதம் ஒன்பதாம் நாள் இன்சூரன்ஸ் சட்டத்திற்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளேன். 

ஓ ! அவரோட ஹோட்டல்தானே?



திங்கள் கிழமையன்று எனது அக்கா கணவரின் அறுபத்தி ஒன்றாவது பிறந்த நாள். சம்பிரதாயபூர்வமான நிகழ்வுகள் எதுவும் நடத்தவில்லை.

மிக நெருங்கிய உறவினர்களோடு ஒரு Get together ஆக சென்னையில் ஒரு பிரபல ஹோட்டலில் மதிய உணவிற்கு என் அக்கா பையன் ஏற்பாடு செய்திருந்தான். எந்த ஹோட்டல் என்பதை மட்டும் பிறகு உறுதிப்படுத்துவதாக சொல்லியிருந்தான்.

அது போல சென்னை டி,நகரில் உள்ள “அகார்ட் மெட்ரோபாலிடன்” என்று அவன் தகவல் சொன்னதும் நான் கேட்ட முதல் கேள்வி
 http://www.freevisuals4u.com/photos/2011/12/Accord-Metropolitan.jpg

“வெங்கடேஷ் பட் வேலை செய்யற ஹோட்டல்தானே?”

அவன் கடுப்பாகி விட்டான்.

“யாரந்த வெங்கடேஷ் பட்? எல்லோருமே இதே கேள்வியைக் கேட்கறீங்களே?”

எனக்கு முன்பாக அவன் யாருக்கெல்லாம் தகவல் சொன்னானோ, அவர்கள் அனைவரும் கூட இதே கேள்வியைத்தான் கேட்டுள்ளார்கள். (இதே போல வேறு ஒரு சூழலில் மற்றவர்கள் கேட்ட அதே கேள்வியை நானும் ஒருவரிடம் கேட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட சோகக் கதையை வேறொரு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்)

அவர் விஜய் டி.வி யில் சமையல் நிகழ்ச்சிக்கு வரும் சமையல் கலைஞர் என்று சொன்னதும் “ஓ, அவரா எனக்கும் தெரியுமே” என்றான்.
 http://www.thehindu.com/multimedia/dynamic/00134/26BGMBHAT1_134722f.jpg

ஒரு ஹோட்டல் அதன் உரிமையாளர்களை விட அதில் பணியாற்றும் சமையல் கலைஞர் மூலமாக அதிகம் அறியப் படுகிறது என்றால் அது ஒரு ஆரோக்கியமான அம்சம். அதற்கு ஊடக வெளிச்சமும் ஒரு காரணம்.

சும்மா சொல்லக் கூடாது.


உணவின் சுவை அற்புதமாகவே இருந்தது. வடக்கத்தி பாணி உடை அணிந்த ஒரு பையனின் சேவையும் சிறப்பாக இருந்தது. நாங்கள் அங்கே இருந்த போது திரு வெங்கடேஷ் பட்டும் அங்கே வந்தார். அவரது நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பவர்கள் என்று அறிமுகமும் செய்து கொண்டோம். உங்கள் சமையல் குறிப்புக்கள் புத்தகமாக வந்துள்ளதா என்று கேட்டதற்கு மே மாதம் வரவுள்ளது என்றார்.

வர வேண்டும், சீக்கிரமாகவே வர வேண்டும். அப்போதான் நாமும் அதிலிருந்து புதிது புதிதாக முயற்சி செய்து கொண்டே இருக்க முடியும்.

ஒரே ஒரு விஷயம் அவரிடம் சொல்ல நினைத்து பிறகு வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன். விஜய் டிவி யில் அவரது குறிப்புக்கள் எழுத்து வடிவில் ஒளிபரப்பாகும் போது எழுத்துப் பிழைகள் ஏராளமாக இருக்கும். 

தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத அவர் அதற்கு காரணமல்ல, தொலைக் காட்சியின் தவறுதான் என்பதால்தான் அதைச் சொல்லவில்லை. 

நூலாக வரும் போது தமிழ் நன்றாக அறிந்த ஒருவரிடம் கொடுத்து சரி பார்க்கச் சொல்ல வேண்டும். அந்த பணிக்கு மட்டும் அவர் விஜய் டிவி ஆட்களை நம்பக் கூடாது.





Wednesday, March 25, 2015

பாதாம் (அல்வா)????????????





சமையலறைக்குச் சென்று நாளானதால் பாதாம் அல்வா தயாரிக்கலாம் என்று திட்டமிட்டு முதல் நாளே பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்தேன்.

மறு நாள் காலை பாதாமின் தோலை உரித்து அதோடு கொஞ்சம் பால் சேர்த்து மிக்ஸியில் அறைத்து வைத்துக் கொண்டேன்.

பின்பு சர்க்கரைப் பாகு வைத்து அதிலேயே கேசரி பௌடரையும் போட்டு பாகு நன்றாக பொங்கி வரும் வேளையில் அறைத்து வைத்த கலவையையும் போட்டு நன்றாக கிளறி அவ்வப்போது நெய் ஊற்றி நன்றாக அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை விட்டு இறக்கி விடவும்.

அழகாக கப்பில் போட்டு பறிமாறுங்கள் பாதாம் அல்வாவை.


இப்படி முடித்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால் வலைப் பக்கத்திற்காக படம் எடுக்கும் சம்பிரதாயங்கள் முடிந்து பார்த்தால் அல்வா கெட்டித்தட்டி இறுகிப் போயிருந்தது.

கொஞ்சம் சிரமப்பட்டு கேக் போன்ற வடிவத்திற்கு கொண்டு வந்து சமாளித்தாகி விட்டது.


அது சரி. நான் கேக் செய்ய முயற்சி செய்தால் அது அல்வா போல வந்து விடுகிறது. அல்வா செய்ய நினைத்த போதோ அது கேக் வடிவத்தில் வந்து விட்டது.

இதற்கெல்லாம் நாம் சளைத்து விடுவோமா என்ன?

சரியாக வரும்வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் சோதனைகள்.

Tuesday, March 24, 2015

அவர் கக்கிய விஷம் இப்போது மோடி அமைச்சரின் குரலில்





மத மாற்றம் இல்லாமல் சமூக சேவை செய்ய முடியாதா என்று ஆவேசமாக கேள்வி கேட்டுள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.

சிறுபான்மை கமிஷனின் துவக்கக் கூட்டத்தில்தான் இந்த கேள்வியைக் கேட்டுள்ளார். கேள்வி என்று அதைச் சொல்வது கூட தவறு. சமூக சேவை என்ற பெயரில் சிறுபான்மையினர் மத மாற்றம் செய்கின்றனர் என்று வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தங்கள் மதத்தில் உள்ளவர்கள் பெரும்பான்மை மதத்திற்கு போகக் கூடாது என்பதற்காக மற்ற நாடுகளில் சிறுபான்மை மக்கள் மத மாற்றத் தடைச்சட்டம் கோருவார்கள்.ஆனால் இந்தியாவில் அவர்கள் மத மாற்றத் தடைச் சட்டத்தை எதிர்க்கிறார்கள். “கர் வாப்சி” என்ற சொந்த மதத்திற்கு திரும்புவதை எதிர்க்கிறார்கள் என்றும் அவர் பேசியுள்ளார்.

அன்னை தெரசா சமூக சேவை என்ற பெயரில் மத மாற்றம்தான் செய்தார் என்ற ஆர்.எஸ்.எஸ் தலைமை ட்ரவுசர் மோகன் பகவத் கக்கிய அதே விஷத்தை பெயரைக் குறிப்பிடாமல் ராஜ்நாத்சிங்கும் கக்கியுள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு மோடியின் அரசில் பாதுகாப்போ, நியாயமோ கிடைக்கப் போவதில்லை என்பதை ஒவ்வொரு நாளும் அமைச்சர் பெருமக்களும் காவியுடை தரித்த சாமியார்களும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்திய ஒற்றுமையை ஐம்பத்தாறு இஞ்ச் மார்பளவு கொண்ட தன்னால்தான் பாதுகாக்க முடியும் என்று சொன்ன மோடியின் ஆட்சியில்தான் அவராலும் அவரது கூட்டத்தாராலும்தான் இந்திய ஒற்றுமை என்பது அபாயத்திற்குள்ளாகியுள்ளது.