Sunday, January 4, 2015

போக்குவரத்து விதி மட்டுமல்ல






காரிருள் சூழ்ந்து
கதிரவன் மறைந்தது போல
மாயத் தோற்றத்தில்
மதி மயங்கிய மக்கள்
மாற்றமென்று தடுமாறி 
மாபெரும் தவறிழைத்ததாய்
வரலாற்றில் பதிவான
ஆண்டொன்று முடிந்தது.

தொட்டால் சுடுமென்று
உண்மை உரைத்திட்ட
நல்லவரைப் புறக்கணித்து
நாகம் நிகர் நயவஞ்சகரை
அரவணைத்து, ஏற்றிக் கொண்ட
நச்சை போக்கும் வழியின்றி
தவிக்கும் மக்களின்
துயரம் தோய்ந்ததாய் அமைந்தது
கடந்து போன ஆண்டு.

பால் போல் தோற்றமளிக்கும்
பாழுங்கள்ளைப் பாராட்டினர்
பாதகம் அது என்பதை
உள்ளத்தில் உணராமல்,

தனக்கான சவக்குழியை
முதலாளித்துவம் தானே
தயார் செய்யும் என்றுரைத்த
மார்க்ஸின் வார்த்தைக்கு முரணாக,

ஜனநாயகம் எதுவென்றும்
சர்வாதிகாரம் எதுவென்றும்
புரியாமல் குழம்பிப் போய்
தன் மீதே தாக்குதல் நடத்த
எதிரியின் கையிலே
ஆயுதம் அளித்தார்.

இனி வரும் ஆண்டாவது
இனிமையாய் மாற
அறியாமை இருள் அகற்றி
அறிவுச் சுடர் ஏற்றி வைப்போம்.

சமரசத்தில் அல்ல,
சத்தியத்தின் போராட்ட்த்தில்தான்
சாத்தியமாகும் ஒற்றுமை என
உரக்கச் சொல்வோம்.

“இடது பக்கம் செல்க”
எனும் போக்குவரத்து விதிதனை
வாழ்க்கையின் விதியாய்
மாற்றி அமைப்போம்
மக்களின் வாழ்விலே
விடியல் காண.

1 comment:

  1. இனி வரும் ஆண்டிலாவது
    அறியாமை இருள் அகலட்டும்
    நன்றி நண்பரே

    ReplyDelete