Tuesday, January 13, 2015

திரைப்படங்களில் கதாநாயகன் இறக்கக் கூடாதா?




இன்று ஒரு பத்திரிக்கையில் பார்த்த செய்தி இது.

"அஜித் கதாநாயகனாக கௌதம் மேனன் இயக்கும் "என்னை அறிந்தால்" திரைப்படத்தில் கதாநாயகன் இறந்து போவதாக கிளைமாக்ஸ் காட்சி இருந்ததாகவும் எனது ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அஜித் சொன்னதை கௌதம் மேனன் ஏற்றுக்கொண்டு மாற்றி விட்டார். அதனால்தான் பொங்கலுக்கு வர வேண்டிய படம் தாமதமாகிறது "  தளபதியில் ரஜனிக்கு பதில் மம்முட்டி இறப்பதை முன்னுதாரணமாகவும் காண்பித்ததாக சொன்னார் என்றும் அச்செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.

இந்த செய்தி உண்மையா பொய்யா என்பது தெரியாது. வதந்தியாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது.

கிளைமேக்ஸ் முடிவு செய்யாமலா திரைப்படத்தை துவக்கியிருப்பார்கள் என்ற கேள்வி கூட எழுகிறது.

ஆனால் யோசித்துப் பார்த்தால் இப்போதெல்லாம் எந்த பெரிய கதாநாயகனும் இறந்து போவதாக சமீபத்தில் படங்களே வரவில்லை. கதையோடே படங்கள் வராத போது இது ஒரு பெரிய விஷயமா என்று கூட நீங்கள் கேட்கலாம். அதுவும் நியாயம்தான். ரொம்ப நாள் முன்னாடி ரமணா, பீமா படங்களில் கதாநாயகன் இறந்து போவதாக காட்சி வந்தது என்று நினைக்கிறேன். மாறுதலாக சொல்ல வேண்டுமானால் காவியத்தலைவன் படத்தை வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் சித்தார்த்தோ, பிரித்வி ராஜோ பெரிய ஸ்டார்கள் கிடையாது.

அது என்ன கதாநாயகர்கள் மரணத்தை வென்ற சஞ்சீவிகளா? அவர்கள் வெற்றி பெற்றதாகத்தான் திரைப்படம் அமைய வேண்டுமா? 

இப்படி கதாநாயக துதி பாடுவதால்தான் பெரிய ஸ்டார்கள் மசாலாக்களையே நம்பிக் கொண்டியிருக்க வேண்டியுள்ளது.

ஆனால் நடிகர் திலகம் பாவம். பல படங்களில் அவரை இறக்க வைத்து விடுவார்கள். கமல ஹாசன் கூட இதில் கொஞ்சம் பரவாயில்லை.

ஒரே ஒரு ஆறுதல்

ரஜனிகாந்தின் லிங்காவில் பழைய ஸ்ரீதர் படமான "நெஞ்சம் மறப்பதில்லை" யில் நூறாண்டுகளுக்கும் மேலாக நம்பியார் வாழ்வது போல ராஜா லிங்கேஸ்வரன் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக காண்பிக்கவில்லை. 

1 comment: