ஒபாமா இந்தியா
வருகை
ஆறு விமானங்களில் பாதுகாப்பாளர்கள், கப்பற்படை
ஹெலிகாப்டர்கள், முப்பது கார்கள், அதில்
ஒன்று அதி நவீன கெடிலாக் கார், அணு குண்டு தாக்குதலையும் சமாளிக்கும் ஏர்ஃபோர்ஸ் 1 விமானம், இவைகளோடு அமெரிக்க ஜனாதிபதி பாரக்
ஒபாமா இந்தியா வருகிறார். குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் முதல்
அமெரிக்க ஜனாதிபதி இவர்தான். மனைவி மகள்களோடு வருகிறார், தாஜ் மகால் செல்லப்
போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. புது டெல்லி நகரம் இப்போது
அமெரிக்க காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. புது டெல்லி மாசடைந்த
நகராக இருப்பதால் இருபதாயிரம் காலன் (கிட்டத்தட்ட எழுபத்தி ஆறாயிரம் லிட்டர்)
சுத்தமான ஆக்சிஜனை கப்பல் மூலம் கொண்டு வரும் திட்டத்தை மட்டும் இந்தியா
ஏற்கவில்லை. புதுடெல்லி ஆக்ரா நெடுஞ்சாலையில் ஒபாமா தாஜ் மஹால் பார்த்து விட்டு
திரும்பும்வரை காக்கை குருவிகள் கூட மேலே பறக்க முடியாது. எறும்பு கூட ஊற
முடியாது. குடியரசு தின ஊர்வலப்பாதையில் வெடிகுண்டுகள் வைக்கப்படக் கூடாது
என்பதற்காக சாலையின் ஓரத்தில் உள்ள பூந்தொட்டிகள் கூட சோதனையிலிருந்து
தப்பவில்லை..
குடியரசு தின விருந்தினராக மட்டும்தான் ஒபாமா
வரவுள்ளாரா? மனைவியோடு தாஜ் மஹால் செல்வதோடு அவரது பயண நோக்கம் முடிந்து விடுமா?
காந்தி சமாதியில் அவர் அஞ்சலி செலுத்த
செல்லும்போது மோடி உடன் வருவாரா என்றெல்லாம் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
ஒபாமா தன் குடும்பத்தோடும் அதிகாரிகள்
பட்டாளத்தோடு மட்டும் இந்தியா வரப் போவதில்லை. அவரோடு அமெரிக்க பன்னாட்டு
நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளும் சேர்ந்தே வருகின்றனர். இந்திய அமெரிக்க
முதலாளிகளின் சந்திப்பு ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரல். அமெரிக்க முதலாளிகள்
இந்தியாவை சூறையாட இந்தியப் பிரதமரும் இந்திய முதலாளிகளும் வழி வகுத்துத்
தரவுள்ளனர்.
இந்தியாவும் அமெரிக்காவும் செய்து கொண்டுள்ள
பாதுகாப்பு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது என்பது அவரது பயணத்தின் இன்னொரு நோக்கம்.
இந்தியப் படைகளின் ரகசியங்களை, இந்தியாவின் ராணுவ தளவாடங்களின் தன்மையை அமெரிக்கா
அறிந்து கொள்வது என்பதன் மற்றொரு பெயரே பாதுகாப்பு ஒப்பந்தம். ஆனால் அமெரிக்கா பற்றி இந்தியா அறிந்து கொள்ள
முடியாது. பாதுகாப்புத்துறையில் அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ள சூழலில் அமெரிக்க
ஆயுத உற்பத்தி நிறுவனங்களை இந்தியாவில் கால் ஊன்ற அனுமதிப்பது என்பதும் ஒபாமா மோடி
பேச்சுவார்த்தைகளில் இடம் பெறக்கூடிய அம்சம். பதினேழு திட்டங்களுக்கான முன்மொழிவை
அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவிடம் அளித்திருக்கிறது. அதனை இறுதிப்படுத்தும் தருணமாக ஒபாமா விஜயம் அமையும். ஆப்கானில்
இந்திய படைகளை அனுப்ப வேண்டும் என்றும் ஒபாமா நிர்ப்பந்திக்கலாம்.
பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற
மன்மோகன்சிங்கை பத்திரிக்கையாளர்கள்
அவரது ஆட்சிக் காலத்தின் சாதனையாக எதைச் சொல்வீர்கள் என்று கேட்ட போது
“அமெரிக்காவுடன் உருவாக்கிய அணு சக்தி” ஒப்பந்தம் என்றுதான் சொன்னார். இந்தியாவின்
இறையாண்மையை காவு கொடுக்கும் உடன்பாடு கையெழுத்தானாலும் அமெரிக்க அணு நிலையங்கள்
இன்னும் இந்தியா வரவில்லை. அதற்கான காரணம் விபத்துக்கள் ஏற்பட்டால் இழப்பீடு
அளிக்க வேண்டும் என்ற ஷரத்து உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் அளிக்க வேண்டும்
என்று அந்த சட்டத்திலிருப்பது கண் துடைப்பாக, அடி மாட்டு அளவில் இருந்தாலும்
அதுவும் கூடாது என்று அமெரிக்க கம்பெனிகள் நிர்ப்பந்திக்கிறது. ஆகவே அந்த ஷரத்தை
அகற்றி அமெரிக்க அணு நிலைய கம்பெனிகளுக்கு எந்த பொறுப்பும் கிடையாது என்று
மாற்றுவது அல்லது இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் தலையில் கட்டுவது ஆகியவையும்
பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்.
சுற்றுச்சூழல் தொடர்பாக தனது நிலைப்பாட்டை
இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தப்படும். அறிவுசார் சொத்துரிமை
தொடர்பாக தனது கம்பெனிகள் நலன் காக்க உரிய திருத்தங்களை இந்தியா கொண்டு வர
வேண்டும் என்று வற்புறுத்தப்படும். அதன் தாக்கம் எதிர்காலத்தில் மருந்து விலை
உயர்வில் எதிரொலிக்கும்.
“இந்தியாவில் உருவாக்குவோம்” ( Make in India ) என்ற மோடியின் முழக்கம் ஒரு வெற்று கோஷம்தான்
என்றாலும் அதையும் கூட ஒபாமா விரும்பவில்லை
என்றும் தனது அதிருப்தியை மோடியிடம் தெரிவிப்பார் என்று செய்திகள் உலவுகிறது.
இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டு வரம்பை
உயர்த்துவது, தொழிலாளர் நலச்சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றியமைப்பது,
மானியங்களை வெட்டுவது போன்ற பல கட்டளைகளை முன்னரே பிறப்பித்துள்ளனர். அவற்றை
விரைவுபடுத்த நிர்ப்பந்தம் அளிக்கப்படும்.
ஒபாமா குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடுவது,
மனைவியோடு தாஜ்மஹாலில் புகைப்படம் எடுத்துக் கொள்வது, மோடியோடு கைகுலுக்குவது
இவையெல்லாம் வெளிச்சத்தில் நடைபெறும். அதையெல்லாம் நம் ஊடகங்கள் காண்பித்துக்
கொண்டு இருக்கும். ஆனால் மிச்சசொச்சமிருக்கிற இந்தியாவை விலை பேசுவது அந்த
வெளிச்சத்தின் பின்னாலே மறைக்கப்பட்டு விடும். விருந்தாளியாக வருபவருக்கு மரியாதை
கொடுப்பது, உபசரிப்பது என்பது நல்ல மரபு. இங்கே விருந்தாளியாக வருபவர் வீட்டையே
எழுதி வாங்கிக் கொண்டு செல்லப் போகிறார்.
பின் குறிப்பு : இரண்டு நாட்கள் முன்பாக எழுதியது இது. ஒபாமாவின் மகள்கள் வ்ராவிட்டாலும், ஒபாமா தம்பதியினர் தாஜ் மஹால் போகாவிட்டாலும் வேறு எதுவும் மாற்றமின்றித்தான் நடைபெறப் போகிறது. அதனால் முன்பு எழுதிய எதையும் மாற்றவில்லை.
No comments:
Post a Comment