கூண்டோடு கலைந்தது கூடாரம்.
கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் இந்திய மக்களுக்கு உண்ணா விரத நவரச நாடகக் காட்சிகளை வழங்கி வந்த அண்ணா ஹசாரே & கோ, இனி உண்ணா விரத ஷோக்களை நடத்தப் போவதில்லை என்று அறிவித்து விட்டார்கள். ஊழலின் பரிணாம வளர்ச்சி, அதற்கான காரணிகள் பற்றி கவலைப்படாமல் ஊழல் எதிர்ப்பு நாயகனாக வலம் வந்தார் அண்ணா ஹசாரே.
இவர்தான் காந்தியடிகளின் மறு அவதாரம் என்று முதலாளித்துவ ஊடகங்கள் இவரது அருமை பெருமையெல்லாம் ஊதிப் பெருக்க, மக்களும் தங்களை உய்விக்க வந்த உத்தமர் என்று அணி திரண்டார்கள். ஊழலில் புரளும் தொகைகள் இன்று விஸ்வரூபம் எடுக்க காரணமாக உள்ள உலகமயமாக்கல் பற்றி எந்த புரிதலும் இல்லாத அண்ணா ஹசாரே, கார்ப்பரேட் நிறுவங்கங்களின் லாப வெறியும் பேராசையுமே ஊழலின் வித்து என்பதை பொருட்படுத்தாமல் அவர்களின் ஸ்பான்சரில்தான் உண்ணா நோன்பு போராட்டங்களே நடத்தினார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மிரட்டல் விடுவது, கொச்சைப்படுத்துவது என அண்ணா & கோ தடுமாறத் தொடங்கியது. கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பில்லாத இயக்கம் என்பதும் சங் பரிவாரின் ஒரு முகமுடி என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாக ஆரம்பித்தது. உ.பி, ஹரியானா, பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்கள் இவர் உண்மை நிறத்தை அம்பலப்படுத்தியது.
அதனால்தான் இவரது உண்ணா விரத நாடகங்களில் மக்கள் சலிப்புற்றனர். கூட்டம் குறைந்தது. இனியும் இது செல்லுபடியாகாது என்று உணர்ந்து இப்போது அவரது குழாமையே கலைத்து விட்டார். அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து விட்டார்கள். அதிலும் கூட தனிக்கட்சியா, இல்லை, வேறு எப்படி என்றெல்லாம் தெளிவில்லாமல் மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்.
எவ்வித தத்துவ பின்னணியும் இல்லாமல் கொள்கைகள் இல்லாமல் திடீரென உதிப்பவர்கள் நட்சத்திரங்கள் அல்ல, நீடிக்க முடியாது என்பதற்கு அண்ணா ஹசாரே ஒரு உதாரணம். இந்தியாவில் காணாமல் போன கட்சிகள், நபர்கள் எவ்வளவோ பேர் உண்டு.
தமிழகத்தில் ஊடகங்கள் உசுப்பேற்றிய இரு கட்சிகள், எஸ்.டி.எஸ் துவக்கிய நமது கழகம், சிவாஜி கணேசன் துவக்கிய தமிழக முன்னேற்ற முன்னணி. தமிழகம் முழுதும் போட்டியிட்டும் ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் டெபாசிட் பெற்ற பெருமை இக்கட்சிகளுக்கு உண்டு. அதில் கூட எஸ்.டி.எஸ் டெபாசிட் இழந்தார். குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்ட என்.எல்.சி இன்ஜினியர் சங்க தலைவருக்குத்தான் டெபாசிட் கிடைத்தது.
அந்தப் பட்டியலில் விரைவில் அண்ணா ஹசாரேவும் இணையப் போகின்றார்.
No comments:
Post a Comment