Wednesday, August 22, 2012

உலகின் மகிழ்ச்சியான மனிதன் இப்போது அ.ராசா தான்.



கல், கரி, சுரங்கம் – என்றென்றும் தங்கம்

முன்னாள் மத்தியமைச்சர் அ.ராசாவின் இன்றைய உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை யாராவது கண்டறிந்து சொன்னால் நன்றாக இருக்கும். தனது சாதனையை மிஞ்சி விட்டார்களே என்பதற்காக வருத்தப்படுவாரா அல்லது இனி கவனம் தன் மீது இருக்காது, திசை மாறி விட்டது என மகிழ்ச்சி அடைந்திருப்பாரா என்ற கேள்வியை நிலக்கரி சுரங்க ஊழல் ஏற்படுத்தி விட்டது. அவர் மகிழ்ச்சியாகத்தான்
இருப்பார் என்பது எனது கணிப்பு.

இந்த ஊழல்கள் பற்றி இப்போது பார்ப்போம்.

தமிழகத்தின் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் கிரானைட் சுரங்கங்களில் நடந்துள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி, சட்ட விரோத செயல்கள் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல ஆண்டுகளாக அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையோடு நடந்து வந்த இந்த மோசடி மூலம் மிகப் பெரிய இழப்பை தமிழகம் சந்தித்துள்ளது. மேலூரோடு நின்று போகாமல் தமிழகத்தின் மேலும் பல இடங்களில் கிரானைட் சுரங்கங்களில் நடைபெற்றுள்ள மோசடிகள் அம்பலமாகி வருகின்றது.

இயற்கை வளங்களின் மீதான கட்டுப்பாட்டை அரசு இழக்கிற போது, உலகமயமாக்கல் மோகத்தில் தனியாருக்கு தாரை வார்க்கிற போது இது போன்ற மோசடிகள் நிகழத்தான் செய்யும். தமிழகத்திற்கு கிரானைட் ஊழல், கர்னாடகத்திற்கு இரும்புச் சுரங்க ஊழல் என்றால் மத்தியரசுக்கு நிலக்கரிச் சுரங்க ஊழல்.

தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்க்ங்களை ஒதுக்கீடு செய்வதில் மத்தியரசு வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என்றும் அதனால் அரசு கஜானாவிற்கு வர வேண்டிய ஒரு லட்சத்து எண்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் வரவில்லை என்று தலைமை தணிக்கையாளர் அறிக்கை குற்றம் சுமத்துகின்றது.

இயற்கை வளங்களை தனியார் சுரண்ட அனுமதிப்பதே தவறு, அதிலே நியாயமான கட்டணங்களைக் கூட பெறாமல் இருப்பது என்பது தனியார் நிறுவனங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான கூடா நட்பைத்தான் காண்பிக்கிறது.

2004 ம் ஆண்டே நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்வது என முடிவெடுத்தாலும், அதை பகிரங்க ஏலம் மூலம் வெளிப்படையாக செய்வது என்ற முடிவோ எட்டாண்டுகளுக்குப் பிறகுதான் எடுக்கப்படுகின்றது. இதற்கிடையில் தனியார் நிறுவனங்களுக்கு அடி மாட்டு விலையில் 142 சுரங்கங்கள் தாரை வார்க்கப்படுகின்றன.

இந்தியாவின் பல அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரித் தேவை அபரிமிதமாக இருக்கையில், அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் இந்த ஒதுக்கீடு நடந்துள்ளது. ஒதுக்கீடு பெற்ற பல தனியார் நிறுவனங்கள், தாங்கள் எந்த அனல் மின் நிலையத்திற்காக ஒதுக்கீடு பெற்றார்களோ, அதையும் தாண்டி மற்ற நிறுவனங்களின் தேவைகளுக்காகவும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். சட்ட விரோதமான இந்த செயல் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் கிட்டத்தட்ட இருபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் லாபமடைந்துள்ளது.

அரசின் கொள்கை முடிவு என்று சொல்லி அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. 2004 ம் ஆண்டே வெளிப்படையான ஏலம் விட வேண்டும் என்று சொல்லி மத்திய நிலக்கரித்துறை செயலாளர், குறிப்பு எழுதி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய பின்பும் அதன் மீது எட்டாண்டுகள், பிரதமர் அலுவலகமும் மத்திய அமைச்சரவையும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி இயற்கை வளமான நிலக்கரியை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க தெரிந்தே அனுமதித்து வந்துள்ளனர்.

இப்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலையின் அடிப்படையில் கண்க்கிடுகையில் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பு ஒரு லட்சத்து எண்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் என்ற அதிர்ச்சிகரமான உண்மை வெளி வந்துள்ளது. எனக்கு எதுவும் தெரியாது என்ற வாடிக்கையான பதிலைச் சொல்லி பிரதமர் மன்மோகன்சிங் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. ஏனென்றால் இடைப்பட்ட காலத்தில் அவர்வசம்தான் நிலக்கரித்துறை அமைச்சகம் இருந்தது.

மத்தியரசு பல முக்கியமான வேலைகளை செய்ய வேண்டும்.

தனியார் நிறுவனங்கள் அடித்த கொள்ளையை கணக்கிட்டு அத்தொகையை வசூல் செய்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.

தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு தேசத்திற்கு இழப்பை தேடித்தந்த அனைத்து அரசியல் தலைவர்கள் ( பிரதமர் உட்பட ), அதிகாரிகள் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தனியார் மட்டுமல்ல இவர்களும் ஆதாயம் அடைந்திருப்பார்கள். அப்படி கை மாறிய தொகைகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

மக்களுக்கு சொந்தமான எந்த ஒரு இயற்கை வளமும் தனியாருக்கு அளிக்கப் படக்கூடாது. இயற்கை எரி வாயு, எண்ணெய் படுகைகள், அனைத்து வித சுரங்கங்கள் என எவையெல்லாம் தனியார் வசம் ஒப்படைக்கப் பட்டதோ, அவையெல்லாம் மீட்கப்பட்டு அரசு மீண்டும் தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தோண்டப்படுவது என்னமோ கல்லாக, இரும்பாக, நிலக்கரியாக இருக்கலாம். ஆனால், அவை தனியார் நிறுவனங்களுக்கோ லாபத்தை அள்ளி அள்ளி வழங்கும் தங்கச் சுரங்கங்களாகவே உள்ளது. பொருளாதாரம் சிக்கலில் உள்ள இச்சூழலில் இவை அரசுக்கும் மக்களுக்கும் பயன்படும்.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ இது பற்றியெல்லாம் சிந்திக்காமல், தங்களது ஊழல் வெளிப்பட்ட ஆத்திரத்தில் தலைமை தணிக்கையாளர் மீதே பாய்ந்து கொண்டிருக்கிறது. வோடஃபோன் நிறுவனம் இந்தியாவில் வாங்கிய சொத்துக்கான வரியை ஏய்த்த போது, அதைக்கட்ட வைக்கக் கூடிய விதத்தில் முன்தேதியிட்ட ஒரு சட்டத்தை பிரணாப் முகர்ஜி பட்ஜெட்டில் கொண்டு வந்தார். அதை செயலிழக்க வைக்கப் போவதாக மீண்டு வந்துள்ள சிதம்பரம் கூறியிருப்பது இந்த அரசு யாருக்கான அரசு என்பதை மறுபடி மறுபடி நிரூபித்து வருகின்றது.

ஆட்சியாளர்களை மாற்றுவது என்பதுதான் இந்தியாவை பாதுகாப்பதற்கான ஒரே தீர்வு. பாஜக இதிலே ஆதாயம் அடைய முயற்சிக்கலாம். ஆனால் கர்னாடக மாநில சுரங்க ஊழலில் ஆதாயம் அடைந்தது பாஜகதான். மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சஸானா அனல் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கத்தை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது பாஜகவின் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சௌஹான் என்பதையும் நாம் மறக்கக் கூடாது.

ஊழலில் கறைபடியாத, உலகமயமாக்கலுக்கு எதிரான இடதுசாரிக் கட்சிகளை வலிமைப் படுத்தினால் மட்டுமே இந்தியாவின் வளங்கள் பாதுகாக்கப்படும்.


No comments:

Post a Comment