மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கம் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். வேலை நிறுத்தத்தின் முக்கியக் கோரிக்கைகள்.
மருத்துவப் பிரதிநிதிகள் பணி செய்வதை மும்பையில் உள்ள சில கார்ப்பரேட் மருத்துவமனைகள் தடை செய்துள்ளன. அதைக் கண்டித்தும் மருத்துவப் பிரதிநிதிகள் பணி செய்வதை சட்ட பூர்வ உரிமையாக்க வேண்டும் என்பது ஒரு முக்கியக் கோரிக்கை.
மருந்து உற்பத்தி நிறுவனங்களும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும் செய்கின்ற ஊழல்கள், நெறி முறையற்ற வணிக நடைமுறைகள் ஆகியவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.
நோயாளிகளுக்கு பயனளிக்கக் கூடிய விதத்தில் மருந்துக் கொள்கையை மத்தியரசு உருவாக்க வேண்டும் என்பது இன்னும் ஒரு கோரிக்கை.
வேலை நிறுத்தத்திற்கான இன்னொரு முக்கியமான காரணம் நடிகர் அமீர்கான் மருத்துவப் பிரதிநிதிகளை இழிவாகப் பேசியதை கண்டிப்பது.
சத்தியமேவ ஜெயதே நிகழ்ச்சியில் சுகாதாரம் பற்றி விவாதிக்கையில் மருத்துவத்துறை ஊழல்களுக்கெல்லாம் மருத்துவப் பிரதிநிதிகள்தான் காரணம், மருத்துவப் பிரதிநிதிகள் ஊழல்களின் தரகர்கள் என அவர் பேசியுள்ளார். சரியான புரிதல் இல்லாமல் ஒரு தரப்பு கூறியதை வைத்து அமீர்கான் பேசியது கண்டிக்கத்தக்கது.
மருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. அந்த லாபத்தை அவர்கள் தக்க வைக்க வேண்டுமானால் அதற்கு மருத்துவர்களின் தயவு தேவை. மருத்துவம் இன்று முற்றிலுமாக வணிக மயமாகி விட்டது. அதனை ஏழை மக்களுக்கான சேவை என பார்க்கக் கூடிய மருத்துவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இருபது லட்சமும் முப்பது லட்சமும் நன்கொடை கொடுத்து சீட் வாங்கி படிப்பவர்களிடம் சேவை மனப்பான்மையை எதிர்பார்ப்பது மூடத்தனம். அப்படி மூலதனத்தை போட்டு மருத்துவராகின்றவர்கள் போட்ட பணத்தை எப்படி எடுப்பது என்றுதான் பார்க்கிறார்கள்.
அவர்களின் ஆசைக்கு தீனி போடுவது மருந்துக் கம்பெனிகள். பரிசுப் பொருட்கள், இன்பச் சுற்றுலாக்கள், வெளி நாட்டுப் பயணங்கள் என ஏற்பாடுகள் நடக்கின்றன. கருத்தரங்குகள் என்று சொல்லப்பட்டாலும் அதன் நோக்கம் வேறாகத்தான் இருக்கிறது.
எனவே மருத்துவத்துறையின் ஊழல் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் மருந்துக் கம்பெனிகள் என்றால் மறு பக்கம் மருத்துவர்கள். இவர்கள் இருவர் மீதும் எந்த விமர்சனமும் வைக்காமல் மருத்துவப் பிரதிநிதிகளை மட்டும் குறை சொல்வது எப்படி நியாயமாக இருக்கும்?
சில சந்தர்ப்பங்களில் வேண்டுமானால் பரிசுப் பொருட்களை மருத்துவரிடம் சேர்ப்பது வேண்டுமானால் மருத்துவப் பிரதிநிதிகளாக இருக்கலாம். ஏனென்றால் பெரும்பாலான சமயங்களில் மருத்துவப் பிரதிநிதிகளை நம்பாமல் இந்தப் பொருட்களை மேலாளர் மட்டத்தில் உள்ளவர்களே நேரடியாக அளிக்கின்றார்கள்.
உண்மை நிலை இவ்வாறிருக்க “ எய்தவன் இருக்க அம்பை நோவானேன் “ என்பது போல மருத்துவப் பிரதிநிதிகள் மீது சேற்றை வாரி இறைத்துள்ளது மிகவும் மோசமான ஒன்று. சமூக அக்கறையுள்ள கலைஞனான அமீர்கான், சாதாரண நடுத்தர ஊழியர்களான மருத்துவப் பிரதிநிதிகள் மீது சொல்லப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும்.
அப்போதுதான் அவரை ஒரு நேர்மையான, நடுநிலையான மனிதனாக ஏற்றுக் கொள்ள முடியும்.
தங்களின் சுய மரியாதையை பாதுகாக்க, தன் மானத்தோடு மருத்துவப் பிரதிநிதிகள் நடத்திய வேலை நிறுத்த, ஆர்ப்பாட்ட முழக்கங்கள் அமீர்கானின் செவிகளையும் நிச்சயம் எட்டியிருக்கும். அடுத்த நிகழ்ச்சியில் அவர் வருத்தம் தெரிவிக்கிறாரா என்று பார்ப்போம்.
No comments:
Post a Comment