Saturday, April 28, 2018

சுட்டதும் சுடப்பட்டதும் - தொழில் தர்மம் . . .


உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு புத்தகங்களை சுட்ட கதைகளை சில தோழர்கள் பகிர்ந்து கொண்டிருந்தனர்.  ஹைதராபாத்தில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அன்புடன்  சுடப்பட்ட குடையுடன் என்ற  புகைப்படப் பதிவு ஒன்றையும்  முக நூலில் பார்த்தேன்.

இவையெல்லாம் கொஞ்சம் நினைவுகளை தூண்டி விட்டது.

மதுரை சௌராஷ்டிராக் கல்லூரியில் முதலாண்டு படிக்கையில் ரமேஷ் என்ற நண்பன், மதுரையில் உள்ள ஒரு பெரிய துணிக்கடை அதிபரின் பேரன், சுஜாதா புத்தகங்களை வாங்கிக் குவிப்பான். நான் படிப்பதற்கும் கொடுப்பான். ஒரு சமயத்தில் இரண்டு புத்தகம்தான் கொடுப்பான். அவற்றை திருப்பித் தந்தால்தான் அடுத்த புத்தகம் கிடைக்கும். முதலாண்டு  முடிந்த பின் விடுமுறையின் போது கொடுத்த இரண்டு புத்தகங்களைத்தான் திருப்பித் தர முடியவில்லை. ஏனென்றால் அவன் படிப்பை மதுரையில் தொடராமல் சென்னைக்கு போய் விட்டான். அவன் கொடுத்த “வைரங்கள்” மற்றும் “14 நாட்கள்” இன்னும் என்னிடம்தான் உள்ளது.

நெய்வேலியில் எல்.ஐ.சி பணிக்கு சேர்ந்தவுடன் அப்போதிருந்த முன்னணி தோழர் அ.சுப்பராயன் ( அவர் பின்பு எங்கள் வேலூர் கோட்டத்தின் முதுநிலைக் கோட்ட மேலாளராக பணியாற்றினார்) நிறைய புத்தகங்களை படிக்கக் கொடுப்பார். ஆனால் கறாராக திரும்பி  வாங்கி விடுவார். சுட வேண்டும் என்று விரும்பினாலும் அதற்கான வாய்ப்பு கிடைத்ததில்லை.

ஆனால் அதே நேரம் தோழர் சுப்பராயனோடு ஒரே இயக்கத்தில் செயல்பட்ட தோழர் பாலு என்ற தோழரும் புத்தகங்களைக் கொடுப்பார். திருப்பி வாங்க மறந்திடுவார். அவரது மறதியை பயன்படுத்தி சுட்ட புத்தகங்கள் உண்டு. “சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாறு” ராகுல சாங்கிருத்தியானின் “ராம ராஜ்யம்” ராஜேந்திர சோழனின் “எட்டு கதைகள்” ஆகியவை அப்படி சுட்ட புத்தகங்கள்.

கொஞ்சம் பொருளாதார முன்னேற்றம் வந்த பின்பு நூல்களை சுடுவதில்லை. வாங்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் புத்தகங்கள் சுடப்பட்டது இந்த காலகட்டத்தில்தான். வேலூர் வந்த பின்பு சுடப் படுவது என்பது மட்டும்தான்  நடைபெற்றது.  

சில முக்கியமான புத்தகங்களை படித்து விட்டு தருகிறேன் என்று வாங்கிக் கொண்டு போய் அதற்குப் பிறகு சில மாதங்கள் நம் கண்ணிலேயே படாமல் போன சிலர் உண்டு.  குறைந்த பட்சம் அவர்கள் அந்த புத்தகங்களை படித்திருந்தாலாவது சரி. நிச்சயம் திருப்பித் தருவார்கள் என்று நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே இப்போது புத்தகங்களை அளிப்பது. ஆனால் அந்த எண்ணிக்கை குறைவுதான்.


அதே போல எங்கள் கோட்ட இதழ் சங்கச்சுடருக்காக நூல் அறிமுகம் எழுதி விட்டு அந்த நூலின் அட்டைப்படத்தையும் வெளியிட அச்சகத்திற்கு அனுப்பினால் அங்கிருந்து திரும்பி வராது.  படித்து விட்டு தருகிறேன் என்று தட்டச்சு செய்கிற தோழர் கோபி சொல்வார். சரி படிக்கட்டும் என்று விட்டுவிட்ட நூல்கள் அதிகம்.  

அதிலே ஒரு வருத்தம் உண்டு.

மறைந்த தோழர் சி.வெங்கடேசன், நந்தனார் பற்றி தோழர் சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய புனைவு நூலான “மரக்கால்” நூலை எனக்காக  நூலாசிரியர் கையெழுத்தோடு  வாங்கி அன்பளிப்பாக அளித்தார். அந்த நூலை மட்டுமாவது திருப்பிக் கொடு என்று கேட்டும் வரவில்லை. 

ஆனால் ஒன்று அதிலே கற்றுக் கொண்ட பாடம் ஒன்று உண்டு. புத்தக அட்டைக்காக நூலை அச்சகத்திற்கு அனுப்புவதில்லை. நானே ஸ்கேன் செய்தோ அல்லது புகைப்படம் எடுத்தோ அனுப்பி விடுகிறேன். 

அகில இந்திய அளவிலான மாநாடுகள் என்றால் அங்கே கொடிகளை சுடுவது என்பது பலருக்கும் ஒரு மரபு. ஒரு கொடியையாவது சுட்டால்தான் மாநாட்டில் கலந்து கொண்ட திருப்தியே இருக்கும். 

அப்படி கொடி சுட்ட அனுபவம் எனக்கும் உண்டு என்பதோடு இப்பதிவை முடிக்கிறேன். 

சில விபரங்கள் சொல்லலாம். 



ஆனால் அதெல்லாம் Professional Ethics (தொழில் தர்மம்) கிடையாது. . .

2 comments:

  1. இந்த பதிவை உங்கள் பழைய நண்பர் ரமேஷ் படித்தால் மகிழ்ச்சி அடைவார்

    ReplyDelete
  2. Tamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.

    வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil Us

    ReplyDelete