Sunday, April 22, 2018

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தோழர் யெச்சூரி


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

தலைப்பில் ஏன் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்றொரு வினா வரலாம். வர வேண்டும், வருவதுதான் இயல்பு.

தோழர் யெச்சூரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்பு கிடையாது, இயக்கம் பிளவு படும் என்றெல்லாம் ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் பலர். 

அவர்கள் யாரும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்களும் இல்ல. இயக்கத்தை முடக்க வேண்டும் என்றே மனதாற விரும்பியவர்கள்.  பெயரளவில் மற்றவர்களைப் போல் இருந்தால் போதும் என்றே ஆசைப்பட்டவர்கள். 

கூட்டு முடிவு, கூட்டு இயக்கம் என்பதுதான் பிரதானமாக இருந்த போதிலும் தனி நபரின் பங்களிப்பையோ, அர்ப்பணிப்பையோ புறக்கணித்து விட முடியாது. கூடாது. மோடி ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்தும் பணியை தோழர் சீதாராம் யெச்சூரியைக் காட்டிலும் சிறப்பாக செய்ததாக வேறு யாரையும் சொல்லிட முடியாது. மாநிலங்களவையில் அவர் ஆற்றிய உரைகளே அதற்குச் சான்று. 

சிறப்பாக பணி செய்து கொண்டிருந்த தோழர் சீதாராம் யெச்சூரி பொறுப்பில்  தொடரக் கூடாது என்ற அவர்கள் விருப்பமே அவரைக் கண்டு அவர்கள் அச்சப்படுகின்றனர் என்பதன் அடையாளம். 

பன்னாட்டு கார்ப்பரேட்டுகள், மத அடிப்படைவாதிகள் ஆகியோர் அஞ்சுவது இடதுசாரிகளைக் கண்டுதான். அதிலே பிரதான இடதுசாரிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி மீது  அவர்களுக்கான எரிச்சலும் கோபமும் இயற்கையானது.

உலகமயம் என்ற பெயரில் முதலாளித்துவம் செய்கிற சுரண்டல், நாற்காலிக்காக மத வெறியைத் தூண்டும் அடிப்படைவாதிகளின் கேடு கெட்ட உத்திகள் - இரண்டிற்குமே சவாலாக இருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் அக்கட்சி மீது அவதூறு செய்வதையே அவை பிழைப்பாகக் கொண்டுள்ளன. 

தான் பின்பற்ற வேண்டிய அரசியல் நிலைப்பாடு குறித்து நாடெங்கிலும் உள்ள உறுப்பினர்களின் கருத்துக்களை திரட்டுவது, அக்கருத்தின் அடிப்படையில்  முடிவை எடுப்பதும் எடுக்கப்பட்ட முடிவை அனைவரும் ஒருமித்து அமலாக்குவதும்  வேறெங்கும் இல்லாத நடைமுறை. அந்த உன்னதமான ஜனநாயகத்தை கோஷ்டி என்று சிறுமைப்படுத்திய ஊடகங்கள் இப்போது  மிகவும் சோகத்தில் ஆழ்ந்து போயிருக்கும். 

தோழர் யெச்சூரி மீண்டும் பொறுப்பேற்றுள்ள சூழல் மிகவும் முக்கியமானது. 

இந்திய நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலான பாஜக ஆட்சியை வீழ்த்துவதே பிரதானமான கடமை என்று அகில இந்திய மாநாடு தெளிவாக வரையறுத்துள்ளது.

அந்த கடமையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பார், செய்து முடிப்போம் 

என்று அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துக்கள் தோழர் பொதுச்செயலாளர்.

உங்கள் பாதையில் எங்கள் பயணம் வெற்றியை நோக்கி . . .
இந்திய நாட்டின் விடியலை நோக்கி . . .


No comments:

Post a Comment