Monday, May 7, 2012

நேரு குடும்பத்தை பழி வாங்க இதுதான் நல்ல வாய்ப்பு, பிரணாப் முகர்ஜி, இதை நழுவ விடாதீர்கள்



மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படலாம் ஊடகங்களில் என்று பரவலான செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரம் அவர் காங்கிரஸ் கட்சிக்கும் மத்திய அரசிற்கும் மிகவும் முக்கியமானவர் என்றும் அவர் மீது பாச மழை மொழியப்படுகின்றது.

பிரணாப் முகர்ஜி நல்லவரா, கெட்டவரா, அவர் ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா, இல்லையா  என்ற அலசல்கள் இப்பதிவின் நோக்கம் அல்ல. அவருக்கு ஆதரவான கட்டுரையும் இது அல்ல. ஏனென்றால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான விசுவாசியாகவே தான் உள்ளதை நிரூபிக்க இந்திய நிதித்துறையை சர்வதேச நிதி மூலதனம் கொள்ளையடித்துச் செல்ல வழிவகுக்கும் மசோதாக்களை நிறைவேற்ற துடிப்பவர் இவர். அந்த அலசலுக்கான நேரம் இன்னும் கனியவில்லை.

பிரணாப் முகர்ஜி இழந்த வாய்ப்புக்கள் பற்றி நினைவு கொள்வதுதான் இப்பதிவின் நோக்கம்.

நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரைப் போல இவருக்கும் நிரந்தர இரண்டாம் இடம்தான் என்பது பரிதாபகரமான ஒன்று.

இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராக இரண்டாம் இடத்தில் இருந்தார். இந்திரா காந்தி இறந்த போது காண்பித்த அவசரம் அவருக்கு இன்றளவும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது ராஜீவ் காந்தி கல்கத்தாவில் இருந்தார். பிரணாப் முகர்ஜியும் அங்கேதான் இருந்தார். ராஜீவ் காந்தி தன் தாயின் மரணத்திற்காக துடித்து டெல்லி புறப்பட்ட வேளையில் பிரணாப் முகர்ஜியும் டெல்லி புறப்பட்டார். அப்போது தன் பக்கத்தில் இருந்தவர்களிடம் பிரணாப் “ டெல்லி சென்றதும் ஜனாதிபதி தன்னை காபந்து பிரதமராக பதவியேற்கச் சொல்வார்” எனச் சொல்ல அது ராஜீவ் காந்தியின் காதுகளை எட்டியது. அவர் எரிச்சலுற்றார்.

நேரு குடும்ப விசுவாசிகள் அதிலும் முக்கிய விசுவாசியான ஜனாதிபதி கியானி ஜெயில்சிங், காபந்து பிரதமர் பதவிக்கு வாய்ப்பே அளிக்காமல் ராஜீவ் காந்தியை நேரடியாக பிரதமராக்கினார்கள். தன் தாய் இறந்தவுடன் பதவிக்கு ஆசைப்பட்டவர் என்ற காரணத்தால் ராஜீவ் காந்தி பிரணாப் முகர்ஜியை ஒதுக்கியே வைத்தார். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அவமானமும் படுத்தினார்.

தனிக்கட்சி ஆரம்பித்த பிரணாப் முகர்ஜி, அக்கட்சி போணியாகாததால் மீண்டும் தாய்க் காங்கிரஸிலேயே ஐக்கியமானார். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் கூட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி வைத்து டெல்லிக்கு டாட்டா சொல்லிப் புறப்பட தயாராக இருந்த நரசிம்மராவிற்கே பிரதமர் வாய்ப்பு கிடைத்தது. கணவனால் இழிவுபடுத்தப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு மனைவி சோனியாவும் வாய்ப்பளிக்கவில்லை.

பிரதமர் பதவியை  சோனியா காந்தி ஏற்காமல் சொக்கத்தங்கம் பட்டம் பெற்றபோதும் கூட வாய்ப்பு மன்மோகன் சிங்கிற்கே போனதே தவிர பிரணாப்பை பிரதமராகப் பார்க்க சோனியா காந்தி இப்போதும் தயாராக இல்லை.

இச்சூழலில்தான் ஜனாதிபதியாக பிரணாப் என அடிபடுகின்றது. இந்த வாய்ப்பை அவர் நழுவவிட்டால் நேரு குடும்பத்தை பழிவாங்கும் வாய்ப்பையும் அவர் நழுவ விடுகின்றார் என்று பொருள். ஜனாதிபதிக்கு பெரிய அதிகாரங்கள் இல்லையென்றாலும் சில மரியாதைகள் உண்டு.

இது நாள் வரை அவர் யாருக்கெல்லாம் மரியாதை செலுத்தி வந்தார்களோ அவர்களெல்லாம் இப்போது பிரணாப்பிற்கு மரியாதை செலுத்தியே ஆக வேண்டும்.

மிக முக்கியமாக ராகுல் காந்தி பிரதமராவதை தடுக்கும் வாய்ப்பும் பிரணாப்பிற்கு கிடைக்கும். இதை உணர்ந்ததாலோ என்னவோ அவர் கட்சிக்கு வேண்டும், அரசுக்கு வேண்டும் என பாசமழை பொழிகின்றன்ர்.

இதனை அவர் மனதில் கொண்டு வாய்ப்பு கிடைத்தால் அதை நழுவ விடாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசிலிருந்து தப்பித்துச் சென்றிட வேண்டும். இல்லையென்றால் ராகுல் காந்தி காலத்திலும் இரண்டாம் இடம்தான்.

இந்தியாவின் இரண்டாமவர்கள் என்ற பட்டியலில் அத்வானி, நாவலர், பேராசிரியர் ஆகியோரோடு இவருக்கும் இடம் கிடைத்து விடும்.

No comments:

Post a Comment