Sunday, May 13, 2012

அம்பேத்கர் பற்றிய கார்ட்டூன் – வக்கிர மனதின் வெளிப்பாடே, அம்பலப்பட்டுள்ள வேறு சில உண்மைகள்




இந்திய அரசியல் சாசனம் தயாரிக்கப்படுவதற்கு கால தாமதம் ஆவதை விமர்சனம் செய்கின்றது போல 1949 ல் வெளியான ஒரு கார்ட்டூனை இப்போதைய பாடப் புத்தகத்தில் இணைத்து ஒரு சர்ச்சையை உருவாக்கினார்கள்.

நாடாளுமன்றத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, சி.பி.எம், சி.பி.ஐ மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவை பிரச்சினை எழுப்பிய பின்பு கபில் சிபல் அப்பகுதியை அப்புத்தகத்திலிருந்து நீக்குவதாக ஒப்புக் கொண்டார்.

பிரச்சினை இத்துடன் ஓயவில்லை.

இந்த கார்ட்டூனை பாடப் புத்தகத்தில் இணைத்த கல்வியாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சுஹாஸ் பாஷில்கர் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் மத்தியரசு நடவடிக்கையைக் கண்டித்து என்.சி.இ.ஆர்.டி அமைப்பிலிருந்து விலகி விட்டனர்.

அதிலே சுஹாஸ் பாஷில்கர் நேற்று குடியரசுக் கட்சியினரால் தாக்கப்படுகின்றார். பிரச்சினை வந்த போதும் சரி, இப்போதும் சரி பாஷில்கர், அந்த கார்ட்டூனை புத்தகத்தில் இணைத்தது சரி என்றே வாதிடுகின்றார்.

அப்படியென்றால் இந்த மனிதனின் நோக்கம் என்ன?

அரசியல் சாசனம் தயாராக தாமதமானது என்றே கூட வைத்துக் கொள்வோம். அதை பாடத்திட்டத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

இந்திய அரசியலில் எத்தனையோ கமிஷன்கள்  அமைக்கப்பட்டு அவை நீண்ட காலமாக அறிக்கை தராமலே இருந்திருக்கின்றன. அளிக்கப்பட்ட அறிக்கைகள் அரசால் வெளியிடப் படாமலே இருந்திருக்கின்றன.  


பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் அறிக்கை எத்தனை காலம் தூசு படிந்தே கிடந்தது?

இந்திரா காந்தி கொலை தொடர்பான தாக்கர் கமிஷன் அறிக்கையை மத்தியரசு வெளியிடவே இல்லையே?

இந்திரா காந்தி கொலைக்குப் பின்பாக சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க பத்து விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டும் ஒரு நபர் கூட குற்றவாளி என்று சட்டத்தின் முன் நிறுத்தப்படவே இல்லையே?

இப்படி ஏராளமாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் இது போன்ற தாமதம் பற்றி எதுவும் சொல்லாமல் டாக்டர் அம்பேத்கர் பற்றிய கார்ட்டூனை மட்டும் பதினோராவது பாடப் புத்தகத்தில் போட வேண்டிய அவசியம் என்ன?

அவர் பற்றி மோசமான பிம்பம் உருவாக்க வேண்டும் என்பதைத் தவிர இந்த இருவருக்கு வேறு எண்ணம் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது. அவர்களுக்குள் ஒளிந்து கிடக்கும் வர்ணாசிரம வெறி தங்கள் செயலை நியாயப்படுத்த வைக்கிறது.

இவர்கள் தீண்டாமை வன் கொடுமைச்சட்டத்தின் படி கைது செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள்.

இன்னொரு அபாயகரமான உண்மையும் இப்பிரச்சினையில் வெளி வந்துள்ளது.

தலித் அமைப்புக்கள், இடதுசாரிக் கட்சிகள் தவிர வேறு யாருமே இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்திலும் சரி பொது வெளியிலும் சரி வாய் திறக்கவேயில்லை.

காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக, முலாயம், லாலு வகையறாக்கள் என யாருமே நாடாளுமன்றத்தில் பேசவேயில்லை. இதையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2 comments:

  1. சரியான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. ....////////இந்திய அரசியலில் எத்தனையோ கமிஷன்கள் அமைக்கப்பட்டு அவை நீண்ட காலமாக அறிக்கை தராமலே இருந்திருக்கின்றன. அளிக்கப்பட்ட அறிக்கைகள் அரசால் வெளியிடப் படாமலே இருந்திருக்கின்றன...//////

    இந்த மாதிரி கமிஷன்கள் அமைக்க சொல்லி சட்டத்துல ஓட்ட போட்டது யாரு?????

    நமக்கு இப்போம் உள்ள அரசியல் சாசனம் தேவை இல்லை...

    ReplyDelete