Tuesday, May 1, 2012

எச்சரிக்கையாய் இருந்திட வேண்டிய நேரம்




நிதித்துறை சீர்திருத்தங்களை அமுலாக்கிட வேண்டும் என மத்தியரசு துடித்துக் கொண்டிருப்பது நாம் அறிந்ததே. சர்வதேச பொருளாதார நெருக்கடி, பல நிதி நிறுவனங்களை அனலில் விழுந்த மெழுகாய், காணாமல் போக வைத்தது. தொழிலாளர்களின் சேமிப்புக்கள் காற்றில் மறைந்து போனது. அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியது.

இந்தியா அது போன்றதொரு மோசமான நிலைக்குப் போகாமல் பாதுகாத்தது இந்திய பொதுத்துறை வங்கிகளும், எல்.ஐ.சி, ஜி.ஐ.சி போன்ற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களும்தான். பென்ஷன் நிதி பங்குச்சந்தைக்குள் புகாததால் பாதுகாக்கப்பட்டது. தங்களின் கொள்கைகள்தான் இந்தியாவை பாதுகாத்தது என்று மன்மோகன்சிங், சோனியா காந்தி, கலைஞர் என எல்லோருமே கூச்சமே இல்லாமல் தங்களுக்கே புகழ்மாலை சூடிக் கொண்டனர்.

ஆனால் நிதித்துறை சீர்திருத்தங்களை எப்படியாவது அமுலாக்குவது என்று மத்தியரசு துடித்துக் கொண்டிருப்பது நாம் நன்றாக அறிந்த செய்திதான். ஆனால் தற்போதைய அபாயம் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி மூலம் வந்துள்ளது.

நாங்கள் சொல்லும் திருத்தங்களை மத்தியரசு ஏற்றால் நிதித்துறை சீர்திருத்தங்களை அமுலாக்க வழி வகுக்கும் வங்கி, பென்ஷன் ஆணைய, இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைப்போம் என பாஜக கூறியுள்ளது. இந்த மசோதாக்களை நிறைவேற்ற அனுமதிக்க முடியாது என்ற நிலையிலிருந்து திருத்தங்கள் போதும் என்ற நிலைக்கு பாஜக இறங்கி வந்திருப்பது ஏதோ ஒரு பேரத்தின் துவக்கமாகத்தான் தெரிகின்றது.

காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக் கொள்கையை அப்படியே கடைபிடிக்கும் பாஜக வும் தேசத்தைப் பற்றியோ, மக்களைப் பற்றி கவலைப் படுபவர்கள் அல்ல. ஆனால் இந்திய உழைப்பாளி மக்கள் அப்படி இருந்து விட முடியாது. அமெரிக்க, ஐரோப்பிய தொழிலாளர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இருக்கும் சொற்ப உரிமைகளை பாதுகாக்க இந்திய உழைப்பாளி மக்கள் விழிப்புணர்வோடும் எச்சரிக்கையோடும் இருக்க வேண்டிய நேரம் இது.

ஆட்சியில் தற்போது உள்ளவர்களும் முன்பு இருந்தவர்களும் மக்களுக்கு எதிராக கரம் கோர்க்கும் போது, ஒட்டு மொத்த உழைப்பாளிகளும் ஒன்றாக அணி திரள வேண்டிய நேரமும் இதுதான்.மே தினம் கொண்டாடும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி இது.

No comments:

Post a Comment