கடந்த 18.05.2012 அன்று சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஒரு பேட்டியை ஏற்பாடு செய்திருந்தது. பிரசிடென்ஸி மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் கேள்வி கேட்டனர். சீர்கெட்டு வரும் மேற்கு வங்க நிலை குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத மம்தா பானர்ஜி, இந்த மாணவர்களெல்லாம் சி.பி.ஐ(எம்) ஆட்கள், மாவோயிஸ்டுகள், நீங்களெல்லாம் காட்டுக்கே செல்லுங்கள் என்று வெடித்து பேட்டியையும் பாதியிலேயே முடித்துக் கொண்டார். கேள்வி கேட்டவர்களை புகைப்படம் எடுத்து நடவடிக்கை எடுங்கள் என்று காவல்துறைக்கும் உத்தரவிட்டார்.
சகிப்புத்தன்மையற்ற நிலைதான் பாசிஸத்தின் முதல் கட்டம். மேற்கு வங்கம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு சோற்றுப்பதம் இது.
மம்தா பானர்ஜி கொந்தளிக்கும் வகையில் கேள்வி கேட்ட அந்த மாணவி டானியா பரத்வாஜ், மம்தா பானர்ஜிக்கு ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார். மாற்றம் என்ற முழக்கத்தை நம்பிய மேற்கு வங்க மக்களுக்கு கிடைத்த பரிசு என்ன என்பதை இக்கடிதம் உணர்த்துகின்றது.
அக்கடிதம் இங்கே கீழே.
அன்புள்ள “ எளிமையான ஆண்மகனே “
ஒரு சாதாரண வினா எழுப்பியதனால் தாங்கள் ஒரு சிக்கலான அவதாரம் மேற்கொண்டீர்கள். ஒரு காரசாரமான விவாதம் இருக்கும் என்று எதிர்பார்த்தே நாங்கள் நகர அரங்கில் நடைபெற்ற சிஎன்என் ஐ.பி.என் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு நாங்கள் அனைவரும் சென்றிருந்தோம். ஆனால் அது சமாளிக்க முடியாத அளவிற்கு சூடாகி விட்டது.
மேற்கு வங்கத்தின் மிக முக்கியமான நபரான தாங்கள் என்னையும் மற்ற அனைத்து பார்வையாளர்களையும் “ மாவோயிஸ்டுகள், சி.பி.எம் ஊழியர்கள் என முத்திரை குத்தினீர்கள். இந்த கௌரவத்தைப் பெற அப்படி நாங்கள் என்னதான் செய்து விட்டோம். உங்களை நாங்கள் கேள்வி கேட்டோம். அதிகாரத்தை கையில் வைத்துள்ள உங்கள் கட்சியின் அமைச்சர்கள் அதிலும் குறிப்பாக மதன் மித்ரா மற்றும் எம்.பி அரபுல் இஸ்லாம் ஆகியோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது இன்னும் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள்ளக்கூடாதா என்ற கேள்வியைத்தான் நான் கேட்டேன்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஒரு பெண்ணைப் பற்றி காவல்துறை விசாரணை தொடங்கும் முன்பே மதன் மித்ரா தனது சொந்த தீர்ப்பை உதிர்த்ததனால் ஏராளமானவர்களைப் போல நானும் மிகவும் எரிச்சலுற்றேன். நற்பெயர் களங்கப்படுத்தப்பட்ட அந்த பெண், சிறுபான்மை ஆங்கிலோ இந்திய இனத்தைச் சேர்ந்தவர். சற்றும் பொறுப்பற்ற அவரது இந்த நடத்தையை நாம் பொருட்படுத்த வேண்டாம் என்றாலும் அவர் நடவடிக்கை குறித்து அரசியல் ரீதியாக கேள்வி எழுப்பித்தான் ஆக வேண்டும்.
சில மாதங்கள் முன்புதான் இதே மனிதன் கிழக்கு மெட்ரோபாலிடன் பைபாஸ் சாலையில் வழக்கமான சோதனைக்காக, இவரது காரை நிறுத்தியதால் காவலர்களோடு தகாத முறையில் நடந்து கொண்டார். அரபுல் இஸ்லாம் பிரச்சினையைப் பற்றி சொல்வதென்றால், அது இன்னமும் தலைப்புச்செய்திகளில் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
பரிபர்த்தன் (மாற்றம் ) வேண்டும் என வாக்களித்த, என்னைச் சுற்றியுள்ள ஏராளமானவர்களின் மனதில் அலை மோதிக் கொண்டிருந்த கேள்வியைத்தான் நான் கேட்டேன். மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும், அவர்கள் பின்பற்றுகின்ற நம்முடைய தலைவர்களிடமிருந்து இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோமா? ஆனால் இறுதியில் நான் அறிந்து கொண்டது என்னவோ “ மேற்கு வங்கத்தில் கேள்வி கேட்பது என்பது மாவோயிஸ்டாக இருப்பதற்கு இணையானது” என்பதைத்தான்.
நான் ஒரு பெண்ணியவாதி அல்ல, எளிமையான ஆண் மகன் என்று தாங்கள் மேடையில் பெருமிதத்துடன் பிரகடனம் செய்து கொண்டீர்கள்.
தங்களின் இந்த பிரகடனம் எங்களுக்கு வியப்பளிக்கவில்லை. அதிலும் குறிப்பாக கட்வா மற்றும் பார்க் வீதி சம்பவங்களுக்குப் பிறகு நிச்சயம் வியப்பளிக்கவில்லை. ஜனநாயகம் குறித்தும் தாங்கள் பேசினீர்கள். என்னுடைய கேள்விக்கு முன்பு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களில் தாங்கள், ‘ மக்கள்’ ஜனநாயகம், வங்கம் ஆகிய வார்த்தைகளை அள்ளித் தெளித்திருந்தீர்கள்.
அரசியல் விஞ்ஞான மாணவியான நான் படித்தவரை உண்மையான ஜனநாயகத்தின் மிக முக்கியமான அடிப்படை அம்சம் என்பது கருத்து சொல்லும் சுதந்திரம் ஆகும். ஒரு தனி மனிதன் தான் சொல்ல விரும்புகிற கருத்துக்களை யாருடைய அதிகாரத்திற்கும் அஞ்சாமல் தெரிவிக்கும் உரிமையாகும். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள முக்கியப் பிரமுகர்கள் பற்றிய கேலிச்சித்திரங்களை பார்த்து சிரிப்பது கூட அதில் அடங்கும்.
ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஜனநாயக அம்சம் தொடர்ச்சியாக பறி போய்க்கொண்டிருக்கிறது என்பது மிகவும் வருத்தமானது. நீங்கள் என்னை என்று அழைத்ததாலேயே நான் மாவோயிஸ்ட் ஆகப் போவதில்லை. அனைத்து அம்சங்களிலும் உண்மை இல்லையென்றால் இந்த மாநிலத்தில் ஜனநாயகம் நிலவுகின்றதாக சொல்ல முடியாது. அவசர கதியில் நீங்கள் செய்தது என் மீது வெளிச்சம் பரவ வழி வகுத்து விட்டது. கோபத்துடன் வெளியேறியதால் நீங்கள் இயல்பாகவே நாசகர சக்தி என்ற இடத்தை எடுத்துக் கொண்டு விட்டீர்கள்.
என்னுடைய கேள்விக்கு நீங்கள் எளிமையாக பதில் சொல்லியிருந்தாலோ அல்லது கருத்து கூற விரும்பவில்லை எனச் சொல்லி அடுத்த கேள்விக்கு சென்றிருந்தாலோ நிலைமையில் சிக்கல் ஏற்பட்டிருக்காது. நீங்கள் முக்கியமாக்க விரும்பியதால் இக்கேள்வி முக்கியத்துவம் பெற்று விட்டது.
அறிவு வெளியேற்றம் ( Brain Drain ) பற்றி நீங்கள் பலமுறை பேசியுள்ளீர்கள். லண்டன் பல்கலைக் கழகக் கல்லூரி, ஆப்பிரிக்க, ஓரியண்டல் கல்லூரி ஆகியவற்றில் வளர்ச்சி மற்றும் நிர்வாகம் பற்றி படிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. நானும் கூட வெளிநாட்டிற்கு புறப்பட்டு விடுவேன். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி இப்போது உங்களுக்குப் புரியும்.
நீங்கள் நிகழ்ச்சியில் தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நியாயமான முறையிலேயே நீங்கள் “ வித்தியாசமான முதல்வராக “ இருந்திருப்பீர்கள். உங்களுடைய முதலமைச்சர் என்ற பொறுப்பின் தன்மைகளுக்கேற்பவாவது நீங்கள் நாங்கள் சொல்வதை எல்லாம் செவிமடுத்திருக்க வேண்டும்.
பொதுவாக எல்லா மனிதர்களும் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள், ஆனால் ஒரு மனிதனின் குணாதிசயத்தை சோதனை செய்ய வேண்டுமென்றால் அவனிடம் அதிகாரத்தை வழங்கு என்று ஆப்ரஹாம் லிங்கன் கூறியுள்ளார்.
அன்புடன்.
ஒரு எளிமையான பெண்மணி
டானியா பரத்வாஜ்