Sunday, August 5, 2018

காந்திக்கு காவி - அநியாயம், அக்கிரமம்


காந்தி சிலைக்கு காவி வண்ணம்!
உ.பி. பாஜக-வினர் மீண்டும் சேட்டை 



லக்னோ, ஆக. 3 -

உத்தரப்பிரதேசத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்குக் காவி வண்ணம் பூசி, அங்குள்ள பாஜக-வினர் மீண்டும் தனது சேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி ஏற்பட்டது முதல், அரசு நிகழ்ச்சிகள், அரசுக் கட்டடங்கள், பேருந்துகள், பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பை மற்றும் சான்றிதழ்கள் என அனைத்திலும் காவி வண்ணம் அடிக்கப்பட்டு வருகிறது.

எல்லாவற்றிற்கும் உச்சமாக, டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கும் கூட பாஜக-வினர் காவியை அடித்தனர். இதனால் ஆவேசமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியினர், உடனடியாக களத்தில் இறங்கி, காவியை அகற்றி, எப்போதும் இருக்கும் நீல வண்ணத்திற்கு மாற்றினர். அதன்பின்னர், சிலைகளுக்கு காவி பூசும், பாஜக-வினரின் சேட்டை சற்று குறைந்திருந்தது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இருந்த காந்தி சிலைக்கு காவி வண்ணத்தைப் பூசி பாஜக-வினர் மீண்டும் வம்பை ஆரம்பித்துள்ளனர். முன்பிருந்த சிலையில், மூக்குக் கண்ணாடி, கைத்தடி ஆகிய இரண்டும் கறுப்பு நிறத்திலும், ஆடைகள் வெள்ளை நிறத்திலும் இருந்த நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி இரவு பாஜக-வினர் காவி வண்ணத்தைப் பூசியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மாவட்ட கூடுதல் மாஜிஸ்டிரேட் பச்சு சிங் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment