நாளை எல்.ஐ.சி நிறுவனம் தனது வைர விழா ஆண்டில்
அடியெடுத்து வைக்கிறது.
மக்களின் பணத்தை கொள்ளையடித்து வந்த
இருநூற்றி நாற்பத்தி ஐந்து தனியார் முதலாளிகளின் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைத்து
உதயமானது எல்.ஐ.சி. 01.09.56 அன்று தோன்றிய எல்.ஐ.சி யின் வெற்றிப் பயணம்
ஐம்பத்தி ஒன்பது ஆண்டுகளாக அரபிக்குதிரையின் பாய்ச்சலில் சென்று கொண்டு
இருக்கிறது.
பண்டித
ஜவஹர்லால் நேருவும் அவருடைய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக்கும் எல்.ஐ.சி
நிறுவனத்தின் துவக்கத்தின் போது எல்.ஐ.சி யின் இலட்சியங்களாக கூறியவை.
1)
ஆயுள் காப்பீட்டை பரவலாக்கிட வேண்டும்.
2)
கிராமப்புறங்கள் வரை இன்சூரன்ஸ் சேவையை எடுத்துச்
செல்ல வேண்டும்.
3)
மக்கள் பணம் மக்களுக்கே சென்றிட வேண்டும்.
4)
பாலிசிதார்ர்கள் முதலீடு செய்யும் பணம் பாதுகாக்கப்பட
வேண்டும்.
வெறும்
ஐந்து கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கப்பட்ட எல்.ஐ.சியின் நிலை இன்று எப்படி
உள்ளது? மேலே சொன்ன லட்சியங்களை அடைவதில் வெற்றி கண்டுள்ளதா?
இன்று
எல்.ஐ.சி யால் சேவை செய்யப்படும் பாலிசிகளின் எண்ணிக்கை என்பது இருபத்தி ஒன்பது
கோடியை கடந்து விட்ட்து. பல நாடுகளின் மக்கட்தொகை என்பதே எல்.ஐ.சி யில் உள்ள பாலிசிகளின்
எண்ணிக்கையை விட மிகவும் குறைவு. மேலே
சொன்ன இருபத்தி ஒன்பது கோடி என்பது தனி நபர் காப்பீடு மட்டுமே. குழுக்காப்பீட்டுத்
திட்டங்கள் மூலமாக இன்னும் ஒரு பத்து கோடி பேர் காப்பீடு பெறுகின்றனர். எனவே ஆயுள்
காப்பீட்டை பரவலாக்க வேண்டும் என்ற முதல் லட்சியத்தில் எல்.ஐ.சி மகத்தான வெற்றி
பெற்றுள்ளது.
இந்திய
மக்கட்தொகை நூற்றி முப்பது கோடி அல்லவா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இந்திய
மக்கட்தொகையில் மூன்று வேளை உணவுக்கு வழியில்லாமல் வறுமைக் கோட்டிற்கு கீழே
உள்ளவர்கள் அறுபது சதவிகித்த்திற்கு மேலே உள்ளனர் என்ற மத்திய அரசின் புள்ளி
விபரத்தை கொஞ்சம் நினைவுக்குக் கொண்டு வந்தால் இந்த கேள்விக்கான பதில் தானாகவே
கிடைக்கும்.
இன்று
எல்.ஐ.சி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்கள், ஆயிரம் துணை
அலுவலகங்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட மினி அலுவலகங்கள் என்று சின்ன ஊர்கள் வரை வேர்
பரப்பியுள்ளது. பெரும்பாலான தனியார் கம்பெனிகள் வேலூர் போன்ற மாநகராட்சிகளில் கூட
தங்களின் கிளை அலுவலகங்களை துவக்கவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது. கிராமப்புற
மக்களுக்கு ஆயுள் காப்பீடு என்பது எல்.ஐ.சி யால் மட்டுமே கிடைக்கிறது.
மக்கள்
பணம் மக்களுக்கே என்பதை விளக்க ஒரே ஒரு புள்ளி விபரமும் ஒரே ஒரு தகவலும் போதும்
என்று நினைக்கிறேன்.
31.03.2015
அன்றைய நிலவரத்தின்படி அரசுத்திட்டங்களில், கட்டமைப்புத் திட்டங்களில், சமூக நலத்
திட்டங்களில் எல்.ஐ.சி முதலீடு செய்துள்ளது பனிரெண்டு லட்சத்து எண்பத்தி
ஆறாயிரத்து எழுநூற்றி எழுபது கோடி ரூபாய். இந்திய ரயில்வே துறையின்
மேம்பாட்டிற்காக எல்.ஐ.சி ஆண்டுக்கு முப்பதாயிரம் கோடி ரூபாய் என ஐந்தாண்டுகளில்
ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுக்க ஒப்புக் கொண்டு ஒரு ஒப்பந்தமும்
போடப்பட்டுள்ளது.
31.03.2015
அன்று எல்.ஐ.சி யின் ஆயுள் நிதி பதினெட்டு லட்சத்து இருபத்தி நான்காயிரத்து
நூற்றித் தொன்னூற்றி நான்கு கோடி ரூபாய்.
சொத்து
மதிப்போ இருபது லட்சத்தி முப்பத்தி ஓராயிரத்து நூற்றி பதினாறு கோடி ரூபாய்.
பாலிசிதார்ர்களின்
பணம் பாதுகாப்பாக இருப்பது மட்டுமல்லாமல் பெருகிக் கொண்டும் இருக்கிறது. அதே நேரம்
அவர்களுக்கான பணமும் ஒழுங்காக பட்டுவாடா செய்யப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.
கடந்தாண்டு
பட்டுவாடா செய்யப்பட்ட இறப்புக் கேட்புரிமங்கள் 99.51 %
கடந்தாண்டு பட்டுவாடா செய்யப்பட்ட முதிர்ச்சிக் கேட்புரிமங்கள் 99.78 %
இந்த அரை சதவிகிதம் கூட பாலிசிதார்ர் தரப்பில் தரப்பட வேண்டிய ஆவணங்களை
கொடுக்காமல் இருப்பதால்தான் வருகிறது.
ஐந்து கோடி ரூபாய் முதலீடு செய்த அரசாங்கத்திற்கு கடந்தாண்டு மட்டும்
அளிக்கப்பட்ட லாப்ப் பகிர்வு தொகை 1,803 கோடி ரூபாய். இதைத்தவிர எல்.ஐ.சி
பல வகைகளில் செலுத்துகிற வரி பல ஆயிரம் கோடி ரூபாய்கள். அன்னிய நிதி நிறுவன
முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிற
போது பங்குச்சந்தை அதலபாதாளத்தில் வீழ்ந்து விடாமல் பாதுகாத்து நிற்கிற
ஆபத்பாந்தவனும் எல்.ஐ.சி தான்.
ஆனால் இந்த நிறுவனத்தை சீரழிக்க, அதன் பொதுத்துறை தன்மையை நீர்த்துப் போகச்
செய்ய தொடர்ந்து முயற்சிக்கிறார்கள்.
எண்பதுகளின் துவக்கத்தில் எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிக்கும் மசோதாவை
இந்திரா அம்மையார் கொண்டு வந்தார்.
நரசிம்மராவ் காலத்தில் மன்மோகன்சிங்கால் நியமிக்கப்பட்ட மல்கோத்ரா குழு
எல்.ஐ.சி யின் ஐம்பது சதவிகிதப் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்று
பரிந்துரைத்த்து.
வாஜ்பாய் காலத்தில் அவரது நிதித்துறை இணையமைச்சர் அன்ந்தராவ் விடோபா அட்சுல்
என்பவரே எல்.ஐ.சி “யு.டி.ஐ” போல ஆகும் என்ற
விஷப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
எல்.ஐ.சி யின் உள்கட்டமைப்பை நாசமாக்கும் பல பரிந்துரைகளை முதலில் “பூஸ்,
ஆலன், ஹாமில்டன்” என்ற குழுவும் பிறகும் “டிலாய்ட்,
ட்ட்ச், டொமாட்ஸூ” என்ற குழுவும் அளித்தார்கள்.
எல்.ஐ.சி யின் மூலதனத்தை நூறு கோடியாக அதிகரித்து அதனை கொல்லைப்புற வழியாக
தனியாருக்கு அளிக்க திட்டமிட்டார் மன்மோகனின் நிதியமைச்சர் சிவகங்கைச் சீமான்.
இப்போது அன்னியக் கம்பெனிகளுக்கு ரத்தினக் கம்பளத்தை இன்னும் அகலமாக
விரித்துள்ளார் மோடியின் நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி.
இந்த சதிகள் அனைத்திலிருந்தும் எல்.ஐ.சி யை பாதுகாத்து அதன் வெற்றிப்
பயணத்திற்கு காரணமாக எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்
போராட்டங்கள்தான் காரணம் என்பதை பெருமித்த்தோடு சொல்ல முடியும்.
நாளை எல்.ஐ.சி தனது வைர விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் போது அதை கொண்டாடும்
அதே வேளையில் அதனை தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது என்ற உணர்வோடு
கூறுகிறோம்.
இனிய எல்.ஐ.சி தின வாழ்த்துக்கள்
எல்.ஐ.சி எங்கள் நிறுவனம் மட்டுமல்ல. இத்தேசத்து மக்கள் ஒவ்வொருவருடைய
நிறுவனமும் கூட, உங்களுடைய நிறுவனமும் கூட.
வாருங்கள் அனைவரும் கரம் கோர்த்து எல்.ஐ.சி தினத்தைக் கொண்டாடுவோம். எல்.ஐ.சி
யை என்றென்றும் பாதுகாப்போம்.
மீண்டும் ஒரு முறை எல்.ஐ.சி தின வாழ்த்துக்கள்