23.08.2015
அன்றைய வண்ணக்கதிர் இதழில் வெளியான எனது சிறுகதையை இங்கே
பகிர்ந்துள்ளேன்.
தோழர் வீரணன் மாஸ்டர்
வேலூர் சுரா
டண்ட்ண்டண்டண்டண் டண்டண் டண்ட்ண்டண்டண்டண் டண்டண்
டண்டணக்கர டணக்கரடண் டண்டணக்கர டணக்கரடண்
ஆட்டம் தொடங்கி விட்ட்து. சிவப்பு
நிற சட்டையும் வெள்ளை நிற பைஜாமாவும் அணிந்தபடி தப்பாட்ட்த்தை தொடங்கி விட்டார்கள்
தீப்பொறி கலைக்குழுவினர். நாற்காலியின் நுனியில் அமர்ந்தபடி அந்த ஆட்ட்த்தை
பார்த்துக் கொண்டிருந்த வீரணன் முகத்தில் பெருமிதம் தாண்டவமாடியது. நாற்காலியில்
சாய்ந்து அமர தோதுப்படாமல் எழுந்து வெளியே மேடைக்கு அருகில் வந்தார். வீரணனைப்
போலவே பெருமிதத்தோடு ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த உதயகுமார், வீரணன் கையைப்
பற்றி மீண்டும் நாற்காலியில் அமரச் செய்து
“மாஸ்டர், நான் சொல்றவரைக்கும்
நீங்க இங்கதான் உட்கார்ந்துகிட்டு இருக்கனும்” என்று செல்லமாக அதட்டி
விட்டுப் போனார்.
ஒரு பொதுக்கூட்ட மேடையில் முதல்
வரிசையில் அதுவும் நாற்காலியில் அமர்ந்திருப்பது வீரணனின் வாழ்க்கையில் முதல்
முறையாக நடந்திருக்கிறது. கண்கள் ஆட்டத்தைப் பார்த்திருக்க, காதுகள் தப்பின் ஒலி
தப்பில்லாமல் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தாலும் வீரண்னின் நினைவுகள்
மட்டும் ஆறு மாதத்திற்கு முந்தைய
ஒரு வெயில் நாளுக்குச் சென்றிருந்தது.
ஒரு பெரிய மனிதர் வீட்டு சாவிற்கு
வீரணனும் அவரது குழு ஆட்களும் தப்பு வாசித்துக் கொண்டிருந்தார்கள். காலை ஆறு
மணிக்கெல்லாம் ஆரம்பித்து ஓய்வே இல்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பசி
வயிற்றைக் கிள்ள தன் தம்பியையும் இன்னும் இரண்டு பேரையும் விட்டுவிட்டு இரண்டு
பேரை மட்டும் அழைத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள ஒரு சின்னக் கடைக்குப் போய் இரண்டு
இட்லியை வேகமாக பிய்த்துப் போட்டுக் கொண்டு டீயை சூடாக குடித்து விட்டு எழவு
வீட்டிற்கு வந்தால் அங்கே ஒரே கூச்சலாக இருந்த்து.
“சோம்பேறிப் பசங்களா, காசை வாங்கிட்டு
எங்கடா ஊர் சுத்த போயிட்டானுங்க”
என்று கழுத்தில் பெரிய செயினும்
கையில் பிரேஸ்லெட்டும் அணிந்து கொண்டிருந்த ஒருவர் திட்டிக் கொண்டிருந்தார். பரமசிவம் என்ற
பெயருடைய அந்த மனிதரை வீரணனுக்கு நன்றாகவே தெரியும். சாதாரண வேலையில் இருப்பவர்
ஆனாலும் பயங்கர பந்தா பேர்வழி என்பதும் தெரியும். கழுத்தில் கையில்
மாட்டியிருப்பதெல்லாம் கவரிங் நகையாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட வருவதுண்டு.
யாருக்காக இப்போ சீன் போடறானோ என்று மனதில் தோன்றினாலும் அதை அடக்கிக்கொண்டு
“இல்லை சாமி, காலையிலேருந்து
பச்சைத்தண்ணி கூட குடிக்கல. அதான் நாஷ்டா துண்ணுட்டு வர போனோங்க. பத்து நிமிஷத்தில
வந்துட்டோங்க. இந்த பசங்க இன்னும் எதுவும் சாப்பிடல. வாசிச்சுக்கிட்டதான
இருக்காங்க” பணிவோடு வீரணன் சொல்ல அதை பொருட்படுத்தாத அந்த மனிதர்
மீண்டும் கத்த ஆரம்பித்தார்.
“நல்லா வாசிக்கிறானுங்க. தப்புக்கு
வலிக்கும்னு தடவிக் கொடுக்கிறானுங்க”
வீரணன் குழுவிலிருந்த குப்புராஜுக்கு
கோபம் வந்து விட்ட்து.
“சாமி, நீ ஒரு நிமிஷம் அடிச்சுப் பாரு.
அப்ப தெரியும் உனக்கு”
ஒரு கெட்ட வார்த்தையை பிரயோகித்து விட்டு
“நான் ஏண்டா மாட்டுத் தோலுல செஞ்ச இந்த கருமத்தையெல்லாம் என் கையால தொடனும்.
வாங்கின துட்டுக்கு அடிக்க துப்பில்ல. என்னை வாசிக்கச் சொல்றயா”
என்று அடிக்கவே வந்து விட்டார்.
அதற்குள்ளாக வீட்டுக்குள்ளே இருந்து சிலர் வந்து அந்த மனிதரை அழைத்துக் கொண்டு
போய் விட்டார்கள். அதற்குப் பின்பு அங்கு இருக்கவே யாருக்கும் பிடிக்கவில்லை. கை
நீட்டி அட்வான்ஸ் வாங்கி விட்டு பாதியில் செல்லக் கூடாது என்பதற்காக தொடர்ந்து
வாசித்துக் கொண்டிருந்தார்கள். மயானம் செல்லும் வழியில் கூட அந்த மனிதர்
“என்ன்ங்கடா ஆடறீங்க, சரக்கு மட்டும்
போட்டுக்கிறீங்க, ஆட்ட்த்துல ஒரு வேகத்தையே காணோமே” என்று வம்புக்கு வர அவரை இழுத்துக் கொண்டு
போனவர்தான் உதயகுமார். அவரும் கூட பரமசிவம் போல ஒரு அலுவலக ஊழியர்தான். ஆனால்
வேறு கம்பெனி. மயானத்தில் சடங்குகள் தொடங்கியிருக்க மீதிப் பணத்தை வாங்கிக் கொண்டு
செல்வதற்காக அவர்கள் சுடுகாட்டுக்கு வெளியே இருந்த ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து
கொண்டார்கள்.
வீரணன் ஒரு பீடியை பற்ற வைத்துக் கொண்டு
இரண்டு இழுப்பு இழப்பதற்குள் உதயகுமார் அவர்களை நோக்கி வந்தார். பற்ற வைத்த பீடியை
மண்ணில் போட்டு அணைத்து விட்டு வீரணன் அவசரமாக எழுந்து நின்றார்.
“எதுக்குங்க பீடியை வேஸ்ட் செஞ்சீங்க” என்று
புன்னகையோடு கேட்டுக் கொண்டே “உங்களால எனக்கு ஒரு காரியம் ஆகனும்” என்று
ஆரம்பித்தார். அடுத்து அவர் பேசியதை வீரணனால் நம்பவே முடியவில்லை.
“நாங்க ஒரு பெரிய அரசாங்க கம்பெனியில
வேலை செய்யறவங்க. தொழிற்சங்கப் பொறுப்புல இருக்கிறவன் நான். எங்க சங்கத்துல ஒரு
கலைக்குழு இருக்கு. பாட்டு, நாடகம் இதெல்லாம் ஏற்கனவே நட்த்திக்கிட்டு இருக்கோம்.
புதுசா தப்பாட்டக்குழு ஒன்னு ஆரம்பிக்கிற யோசனை இருக்கு. இன்னிக்கு முழுக்க உங்களை
உன்னிப்பா கவனிச்சேன். உங்க அடியும் சரி, ஆட்டமும் சரி அற்புதமா இருந்த்து. எங்க
தோழர்களுக்கு பயிற்சி தர உங்களால முடியும்னு எனக்கு தோணுது. மறுக்காம நீங்க
ஒத்துக்கனும்”
என்று சொல்ல வீரணனுக்கு திகைப்பாக
இருந்த்து.
“சாமி, நாங்க சாவு மேளம் அடிக்கிறவங்க.
எங்களைப் போய்” என்று இழுத்தார்.
“பறைங்கறது இந்த மண்ணோட ஆதி கலை. அந்த
காலத்துல போர்ப்பறை ன்னே சொல்வாங்க. அதை ஒரு ஜாதிக்குனு ஒதுக்கி வைச்சு எழவு
வீட்டோட முடக்கிடக் கூடாதுனுதான் நிறைய பேர் இப்போ கஷ்டப்படறாங்க. பெண்கள் மட்டுமே
வாசிக்கிற குழுக்கள் கூட இருக்கு. உங்க கிட்ட திறமை இருக்கு. அதனாலதான் உங்களைக்
கூப்பிடறோம்” என்றார்.
அதன் பின்னும் மறுத்துப் பேச வீரணனுக்கு
மனம் வரவில்லை.
“சனிக்கிழமை சாயந்தரமும் ஞாயிற்றுக்கிழமை
காலையிலயும் வகுப்பு வச்சுக்கலாம். இந்த வாரமே ஆரம்பிக்கலாம். முதல் இரண்டு மூணு
நாளில எவ்வளவு பேர் தேறுவாங்கனு பாத்துக்கிட்டு அதுக்கப்பறமா தேவையான வாத்தியங்களை
வாங்கிக்கலாம்” என்று உதயகுமார் சொல்ல வீரணன் தலையசைத்தார்.
பேசிய பணம் மூவாயிரம் ரூபாயை கொடுக்க மனம் வராமல் பரமசிவம் ஐநூறு ரூபாயை குறைத்தது
கூட வீரணனுக்கு பெரிதாக தோன்றவில்லை. “அந்த பணம் அவன் பாக்கெட்டுக்கு போயிடும் அண்ணே”
என்ற குப்புராஜின் கோபக்குரலை அவர் பொருட்படுத்தவில்லை. நம்மை மரியாதையாக பேசவும் கூட
ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே அவர் மனம் முழுதும் நிறைந்திருந்தது.
அடுத்த சனிக்கிழமை மாலை சரியாக நான்கு
மணிக்கு உதயகுமார் கொடுத்த விலாசத்திற்கு தன் தம்பியையும் இன்னும் இரண்டு பேரையும்
அழைத்துக் கொண்டு வீரணன் சென்றார். அது அவர்களின் சங்க அலுவலகம். ஒரு ஹால், இரண்டு
அறைகள், அலுவலகத்திற்கு வெளியே தாராளமாக காலியிடம் என்று வசதியாகவே இருந்த்து.
அலுவலகத்தில் மாட்டப்பட்டிருந்த பல படங்களில் இருந்தவர்களில் அண்ணல்
அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் மட்டுமே வீரணனுக்குத் தெரிந்திருந்த்து. அவரது
வருகைக்காக பலர் காத்திருந்தார்கள். அவர்களிடம் வீரணனை அறிமுகம் செய்து வைத்த
உதயகுமார் அவர்களையும் ஒவ்வொருவராக வீரணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
முதலில் அவர்கள் கொஞ்ச நேரம் வாசித்து
விட்டு ஒவ்வொருவர் கையிலேயும் தப்பைக் கொடுத்து முயற்சிக்கச் சொன்னார். ஒரு
பதினைந்து பேர் நன்றாக வருவார்கள் என்று தோன்றியது. அடுத்த வாரமே முறைப்படியான
பயிற்சி தொடங்கியது. முதலில் வாசிக்க கற்றுக் கொடுத்தார். அதற்கு ஒரு இரண்டு
மாதங்கள் ஆனது. பிறகு வாசித்துக் கொண்டே ஆட்டம் என்று அடுத்த கட்ட்த்திற்கு
நகர்ந்தார்கள். இந்த கட்டம் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்த்து. ஆனாலும் அடுத்தடுத்த
பயிற்சியில் முன்னேறிக் கொண்டே வந்தார்கள்.
அந்த சங்க அலுவலக சூழலே வீரணனுக்கு
மிகவும் பிடித்திருந்த்து. ஒவ்வொருவரும் மற்றவர்களை சார் என்று கூட அழைக்காமல்
தோழர் என்று அழைப்பதே அவருக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்த்து. சில
சமயங்களில் அவர் முன்னே போய்விட்டால் ஏதாவது கூட்டம் நடந்து கொண்டிருக்கும்.
கோபமாக கேள்வி கேட்பார்கள். அதற்கு அமைதியாக பதில் வரும். சில சமயங்களில் பதிலும்
கூட கோபமாக வரும். ஆனால் அதெல்லாம் கூட்ட்த்திற்கு பிறகு காணாமல் போயிருக்கும்.
சகஜமாக டீ குடித்து கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள். அவரை எல்லோரும் மாஸ்டர்
என்றே கூப்பிட்டார்கள். என்னையும் தோழர் என்று அழையுங்களேன் என்று சொல்ல ஆசையாக
இருந்தாலும் ஏதோ ஒரு வெட்கம் தடுத்து விடும்.
ஆறு மாத பயிற்சி முடிந்து இன்று அவர்கள்
முதல் முறையாக மேடை ஏறுகின்றனர். புதிதாக ஒரு வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டி
வாங்கிக் கொடுத்து முதல் வரிசையில் அமர்ந்து பார்க்க வேண்டும் என்று அன்புக்
கட்டளையிட்டு விட்டார்கள். ஆட்ட்த்தைப் பார்க்க பார்க்க வீரணனுக்கு பரவசமாக
இருந்த்து. அலுவலகம் செல்லும் ஊழியர்களா இவ்வளவு அருமையாக ஆடுகிறார்கள் என்று
பார்ப்பவர்களும் கூட அதிசயமாய் வியந்தார்கள். ஒரு கலையைக் கற்றுக்கொள்ள ஆர்வமும்
பயிற்சியும் இருந்தால் போதும் என்று முதல் நாள் பயிற்சி ஆரம்பிக்கும்போது
உதயகுமார் சொன்னது வீரணனுக்கு நினைவு வந்த்து.
இப்படி ஒரு மகிழ்ச்சியை வாழ்க்கையில்
இதுநாள் வரை அனுபவித்த்தே இல்லை என்ற பூரிப்பில் இருந்த வீரணன் தன் பக்கத்தில்
வந்து அமர்ந்த நபரைப் பார்த்து திடுக்கிட்டார். சாலையில் இரு சக்கர வாகனத்தில்
சென்று கொண்டிருந்த அந்த பந்தா பரமசிவம், நிகழ்ச்சியைப் பார்த்த்தும் வ்ண்டியை
நிறுத்தி விட்டு எங்கே நாற்காலி காலியாக இருக்கிறது என்று தேடி வீரணன் பக்கத்தில்
இருந்த நாற்காலியில் உட்கார்ந்து விட்டார். இங்கே இருந்த உதயகுமார் எங்கே தேடினால்
அவர் மேடைக்குப் பக்கத்தில் நின்று கொண்டு ஆடிக்கொண்டிருந்தவர்களை
உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.
“உன்னையெல்லாம் யாரு முதல் வரிசையில
உட்கார உட்டாங்க?” என்ற கேள்வியை பரமசிவம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே
ஆட்டம் முடிந்து போய் உதயகுமார் கைக்கு மைக் வந்திருந்த்து.
“இத்தனை நேரம் இந்த மேடையில்
ஆடிக்கொண்டிருந்தவர்கள் யாரும் தொழில்முறைக் கலைஞர்கள் அல்ல. எந்த ஒரு கலைப்
பாரம்பரியமும் இல்லாதவர்கள். காலை முதல் மாலை வரை குளிர்சாதன அறையில்
கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள். வியர்வை சிந்த அருமையாய் ஆடிய அவர்களுக்கு
உங்களின் கரவொலிதான் மிகப் பெரிய அங்கீகாரம். எங்கள் தோழர்கள் இவ்வளவு சிறப்பாக
இன்று தப்பாட்டம் ஆடினார்கள் என்றால் அத்ற்கு ஒரே ஒருவர்தான் காரணம். மிகச் சிறந்த
பறையிசைக் கலைஞர், எங்களின் ஆசிரியர் தோழர் வீரணன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்”
என்று சொல்ல அந்த ஒற்றைச் சொல்லே அவரது
மனதிற்குள் பெரு மழையாய் பொழிந்த்து. அவரது மாணவர்கள் அனைவரும் ஒரே ஒலியில்
தப்பிசைக்க மெல்லமாய் மேடையேறினார்,
எங்களின் அகில இந்தியத் தலைவர் தோழர்
வீரணனை கௌரவிப்பார் என்று உதயகுமார் சொல்ல உயரமாய் நெடுநெடுவென்றிருந்த அந்த வட
இந்தியர் வீரணனுக்கு சால்வை போட்டு ஒரு பரிசுப் பெட்டியையும் கொடுத்தார். மிகுந்த
உணர்ச்சிப் பெருக்கில் இருந்த வீரணனின் கண்கள் அனிச்சை செயலாய் பரமசிவத்தைத்
தேடியது. பரமசிவம் தலைகுனிந்தபடியே தன் வாகனத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்.
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDelete