Monday, August 10, 2015

பாவம், திருவள்ளுவருக்குத் தெரியவில்லை




தன்னெஞ்சறிவது பொய்யற்க- பொய்த்த பின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

இது திருவள்ளுவர் எழுதிய குறள். மனதறிந்து ஒருவன் பொய் சொன்னால் அவன் சொன்ன பொய் அவனது மனதையே சுட்டு எரித்து விடும் என்பது அதற்கு அர்த்தம்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக மனிதர்களுக்கு மனசாட்சி இருந்த காலத்தில் அவர் எழுதிய குறள் இது.

மனசாட்சியா அது வெறும் மண்ணாங்கட்டி என்று சுய நலமும் சந்தர்ப்பவாதமும் மட்டுமே உள்ள மனிதர்களை அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பார்க்கவில்லை போலும்.

பொய் சொல்வதையே பிழைப்பாகக் கொண்டுள்ளவர்கள் அதிகம் வாழும் நாடாக இந்தியா மாறி விட்டது. தாங்கள் சொல்வது பொய் என்று நன்றாகத் தெரிந்தும் தங்கள் சுய லாபத்திற்காக கொஞ்சமும் கூசாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு மோசமாக பொய் சொல்கிறோமே, அதனால் தன்னை மற்றவர்கள் கொஞ்சம் கூட மதிக்க மாட்டார்களே என்று கூட கவலைப்படாமல் இருப்பவர்கள் அவர்கள். அவர்கள் பொய்களால் ஆன உலகத்தில் வாழ்வதால் நேர்மையாக இருப்பவர்களைப் பார்க்கும் போது அவர்களுக்கு எரிச்சல் வேறு வருகிறது. அவர்களை இழிவு படுத்தக் கூட கொஞ்சமும் தயங்குவதில்லை.  

இந்த மாதிரியான மோசடிப் பேர்வழிகளைப் பார்த்தால் திருவள்ளுவர் இன்று என்ன குறள் எழுதுவார்? 

ஒரு விளக்கம் : இந்த பதிவிற்கான காரணம் என்ன? கீழே உள்ள செய்திதான்.

ஒரு செய்தி : பாஜகவின் ஓராண்டு ஆட்சியில் ஊழல் என்பதே கிடையாது. வளர்ச்சி அபரிதமாக பெருகிக் கொண்டிருப்பதால் மக்கள் எல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள் – வெங்கையா நாயுடு.

ஒரு கேள்வி வெங்கய்யா நாயுடுவிற்கு : நாட்டில் மக்கள் எல்லாம் ஏற்கனவே மகிழ்ச்சியாக இருந்தால் உங்க தலீவரு அமித் ஷா நல்ல நாள் வர இருபத்தி அஞ்சு வருஷம் வாய்தா கேட்கறாரு?

உங்களுக்கும் ஒரு கேள்வி
இப்படிப்பட்ட மோசமான ஆசாமிகளை என்ன செய்தால் தகும்? 

1 comment: