தமிழ்நாடு காவல்துறையின் பணி இன்று சாராயக் கடைகள் பாதுகாப்புப் பணியாக
மாறிப் போயிருக்கிறது. சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து, குற்றப் பிரிவு,
ஆயுதக்காவல் பிரிவு இன்னும் லொட்டு லொசுக்கு என்று எத்தனை பிரிவு இருந்தாலும் அவை
அனைத்திற்கும் ஒரே ஒரு வேலை மட்டும்தான் தரப்பட்டது. டாஸ்மாக் கடைகளுக்கு
பாதுகாப்பு தருவது, குடிகாரர்கள் எந்த இடையூறும் இல்லாமல் குடித்து மகிழ்வதற்கு
பாதுகாப்பு தருவது, யாராவது டாஸ்மாக்கை மூடு என்று சொன்னால் அடித்து உதைப்பது,
கைது செய்து உள்ளே தூக்கிப் போடுவது. – இதுதான் இன்று காவல்துறையின் ஒரே வேலையாக
இருக்கிறது.
இடதுசாரிக் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கடந்த
செவ்வாயன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தனர். அன்று
காலை இரண்டு மணிக்கு தமிழ்நாடு போலீஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர்
மாவட்டச் செயலாளரும் சி.ஐ.டி.யு அமைப்பின் வேலூர் மாவட்டத் தலைவருமான தோழர்
எம்.பி.ராமச்சந்திரன் அவர்களை கைது செய்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில்
கைது செய்யப்பட்ட அவரை இன்று நீதிமன்றத்திற்கு காவல்துறை கைவிலங்கு மாட்டி அழைத்து
வந்தது.
கைவிலங்கு மாட்ட அவர் என்ன கொலைக்குற்றவாளியா என்று கேட்ட கட்சித் தோழர்கள்
மீதும் காவல்துறை பாய்ந்து பிறாண்டியிருக்கிறது. முன்பு ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைப்
பிரச்சினைக்காக போராடிய சி.ஐ.டி,யு மாநிலத் தலைவர் தோழர் அ.சவுந்திரராஜன் உள்ளிட்ட
தொழிற்சங்கத் தலைவர்களை இப்படி கைவிலங்கு மாட்டி காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்குக்
கூட்டிச் சென்றார்கள். அப்போது நடந்தது திமுக ஆட்சி.
இப்போது அதிமுக ஆட்சியிலும் அதே அராஜகம்தான் நடக்கிறது. ஆட்சியாளர்களுக்கு
எதிராக யாரும் எதுவும் வாய் திறக்கக்கூடாது என்ற காட்டாட்சியின் வெளிப்பாடுதான்
இது. ஒரு அரசியல் கட்சித் தலைவரை கைவிலங்கு போட்டு இழிவு படுத்தி மிரட்டினால்
மற்றவர்கள் அஞ்சி நடுங்குவார்கள் என்ற தப்புக்கணக்கு இது.
மாறாக இந்த அராஜகம் தோழர்கள் மத்தியில் ஆத்திரத்தையும் வேகத்தையும் அதிகப்படுத்தியிருக்கிறது. உங்கள் அடக்குமுறைக்கு எதிராக எங்களின் போராட்டம் தீவிரமாகும். தாங்கள் நினைத்ததுதான் சட்டம் என்று மக்களை வாட்டி வதைத்த சர்வாதிகாரிகள் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குத்தான் சென்றுள்ளார்கள். அம்மையாருக்கும் அங்கே ஒரு இடம் காத்திருக்கிறது.
இந்த அட்டூழியத்தைக் கண்டித்து நாளை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. நல் உள்ளம் கொண்டோரே, ஜனநாயகத்தை நேசிப்போரே, வாருங்கள், உங்களின் எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்யுங்கள்.
ReplyDeleteகாவல்துறை , தேர்தல் ஆணையம் போல தனித்து இயங்கினால் இத்தகையப் போக்கு மாறலாம். அல்லது முழுவதும் குடியரசு தலைவர் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். முப்படைகளுடன் சேர்த்து நான்காவது படையாக காவல் துறையை இனைக்கலாம்.