Saturday, August 22, 2015

தானாய் கனியட்டும், தடியை தூரப் போடு

 http://www.thehindu.com/multimedia/dynamic/01187/24isbs_EVM_GHB5FF7_1187684e.jpg
உள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று குஜராத் மாநில அரசு கொண்டு வந்த அரசாணையை அகமதாபாத் உயர் நீதி மன்றம் தடை செய்துள்ளது.

மேம்போக்காக பார்க்கும் போது ஜனநாயகத்தை தழைக்க வைக்க வந்த சட்ட்ம் என்று தோன்றும். 

ஆனால் அடிப்படையில் ஜனநாயகத்திற்கு எதிரான சட்டம் இது. வாக்குப் பதிவு கிட்டத்தட்ட 65 % இருக்கும் நாட்டில் இது போன்ற  சட்டம் இருந்தால் நல்லதுதானே. மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஒழுங்காக செய்தால் மோசமானவர்கள் ஏன் ஆட்சிக்கு வரப் போகிறார்கள் என்ற கேள்வி கூட எழலாம்.

ஆனால் ஜனநாயகத்தை ஒரு சர்வாதிகாரச் சட்டம் மூலம் அமலாக்க முடியுமா?

தேர்தலில் வாக்களிப்பதற்கான கடமை மக்களுக்கு உள்ளது போல அதை புறக்கணிப்பதற்கான உரிமையும் கூட உள்ளது. மோசமான வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ள போது "எரிகின்ற எந்த கொள்ளியும் நல்ல கொள்ளி இல்லை" என்ற முடிவெடுக்கும் சாய்ஸ் மக்களுக்கு வேண்டுமல்லவா?

தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று சொன்னாலாவது தங்களின் துயரம் மீது ஊடக வெளிச்சமோ, இல்லை அரசியல் அதிகார வர்க்கத்தின் கவனம் படாதா என்று ஏங்குகிற மக்களின் அற்ப சந்தோஷத்தை பறிக்கலாமா?

தேர்தல் நாளன்று அதை விடுமுறையாகக் கருதி வீட்டிலே வீணாக பொழுதைக் கழிப்பவர்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறார்கள். சட்டம் இயற்றி அவர்களை வாக்குச் சாவடிக்கு கொண்டு வந்து விட முடியுமா? தாங்கள் இழைப்பது தவறு என்ற உணர்வை அவர்களுக்கு உருவாக்காமல் வெறுமனே வம்படியாக அவர்களை வாக்களிக்கச் செய்வது அவர்களுக்கு ஜனநாயக நடைமுறையின் மீதான நம்பிக்கையைத்தான் குறைத்து விடும்.

அதே போல அன்றைய தினம் வேலைக்குப் போனால்தான் அடுப்பெரியும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு  என்ன ஏற்பாடு?

அதே போல் அரசு ஆணையிட்டும் விடுமுறை விடாமல் அலுவலகத்தை நடத்திய ஐ.டி கம்பெனிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது செய்தியாக வெளிவந்தது. ஆனால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? அது பற்றி ஏதாவது செய்தி வந்ததா?

விழிப்புணர்வை உருவாக்கி  மட்டுமே மக்களை வாக்களிக்கச் செய்வதுதான் ஜனநாயகம் தழைக்க உதவுமே தவிர சட்டம் போட்டு கட்டாயப் படுத்துவது அல்ல.

இன்று  வாக்களிப்பதை கட்டாயப்படுத்துபவர்கள், அடுத்து எங்களுக்கு மட்டும்தான் வாக்களிக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துவார்கள். திரிணாமுல் காங்கிரஸ் அதைத்தான் செய்கிறது என்பது ஒரு யதார்த்தம்.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது  காய் தானாகவே இயற்கையாக கனியாவது போன்றது. தடி கொண்டோ, கிராபைட் கல் கொண்டோ கனியாக்க முயற்சிப்பது ஆரோக்கியமானதல்ல, மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும்.

 

2 comments:

  1. நல்லதொரு அலசல்.
    ஆஸ்திரேலியா நாட்டிலும் இப்படி சட்டம் உள்ளது. அரசுக்கு வரிகட்டுவது, படிக்க வேண்டியவயதில் கட்டாய கல்வி கற்க பள்ளி செல்வது போல், தேர்தலில் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்பதும் குடிமக்களின் கடமை என்று அரசு சொல்கிறது. தேர்தலை இவங்க சனிக்கிழமைகளில் வைக்கிறார்கள்.

    ReplyDelete
  2. பாஜக அரசு மத்தியில் இன்னும் 10 ஆண்டுகள் நீடித்தால் தலிபானிய அரசாக .மாறி விடும். வெள்ளிக் கிழமை கோவிலுக்கு செல்வது கட்டாயம் என்று கூட சட்டம் போடுவார்கள்.

    ReplyDelete