Thursday, August 27, 2015

தேரும் வீடும் எரிக்கப்பட்ட ஊர் மக்களோடு



தேசம் சுதந்திர தினத்தை கொண்டாடி முடித்த நேரத்தில் மருத்துவர் ஐயாக்கள் வகையறாக்கள் சேஷ சமுத்திரம் கிராமத்து தலித் மக்களின் கடவுள் தேரையும் எட்டு குடிசைகளையும் எரித்து அந்த சுதந்திரத்தை கேலிக்கூத்தாக்கிய கொடுமையை மறந்திருக்க மாட்டீர்கள்.



தர்மபுரி பாணியில் ரேஷன் அட்டை உட்பட அனைத்தும் எரிக்கப்பட்டது. தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு ஏதாவது உதவி செய்யலமே என்று எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் ஆலோசனை அளித்தார். கோட்டச்சங்கப் பொறுப்பாளர்கள் விவாதித்து எங்கள் கோட்ட உறுப்பினர்களுக்கு நிதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம்.

ஓரிரு நாட்களிலேயே சுமார் இருபதாயிரம் ரூபாய் வரை வசூலானது. தோழர் சுவாமிநாதன் தமிழகத்தில் உள்ள மற்ற கோட்டங்களுக்கும் ஒரு தொகை அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்க சென்னை 1, சென்னை 2, கோவை, சேலம், மதுரை, தஞ்சை, நெல்லை கோட்டங்களும் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் உடனடியாக தலா ஐயாயிரம் ரூபாய் என அனுப்பி வைத்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படிப்பட்ட உதவி வழங்குவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஏழுமலை மற்றும் சங்கராபுரம் வட்டச் செயலாளர் தோழர் சசிகுமார் ஆகியோரோடு கலந்தாலோசித்தோம்.

ஸ்டவ், சமையல் பாத்திரங்கள், பாய், போர்வை, அரிசி, மளிகைப் பொருட்கள், வேட்டி, சேலை, துண்டு ஆகியவை சங்கராபுரத்திலேயே வாங்கப்பட்டது. சட்டை, பேண்ட் துணி வேலூரில் வாங்கிக் கொண்டோம். இதைத்தவிர எட்டு குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 3000 கொடுப்பது என்றும் முடிவு செய்து கொண்டோம்.

இந்தப் பணியில் சிரத்தை எடுத்துக் கொண்டு செயல்பட்ட எங்கள் கள்ளக்குறிச்சி கிளைத் தோழர்களான கிளைச் செயலாளர் தோழர் ராஜா, இளந்தோழர்கள் அருண் மற்றும் எஸ்.பாலாஜி ஆகியோருக்கு பாராட்டுக்களை பதிவு செய்வது மிகவும் அவசியம்.

திங்கட்கிழமை அன்று இந்த நிவாரண உதவி செய்யப்பட்டது. சேஷ சமுத்திரம் கிராமத்திற்கே செல்ல திட்டமிட்டோம். குதிரைகள் ஓடிய பின்பு லாயத்தை பூட்டி வைத்த கதையாக இப்போது அங்கே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களை சங்கராபுரத்திற்கே வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


ஒரு எளிய நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் வாங்கி வைத்திருந்த பொருட்களும் ரொக்கமும் அளிக்கப்பட்டது. 

உதவி செய்தோம் என்பதை விட மிகப் பெரிய கொடுமைக்கு உள்ளான மக்களுக்கு ஆதரவாக செயல்படவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை அளித்ததுதான் முக்கியமான ஒன்றாக கருதுகிறோம்.

ஒரு தகவலை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வேலூரிலிருந்து காலை புறப்பட்ட நாங்கள் ஒன்பதரை மணிக்கு முன்பாக சங்கராபுரம் சென்று விட்டோம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் வருவதற்கு கால தாமதம் ஆனது.

ஏனென்று கேட்டதற்கு ஒருவர் பதில் சொன்னார்.

“எங்கள் ஊரிலிருந்து நாங்கள் இங்கே நடந்துதான் வந்தோம். எங்கள் சைக்கிள்களை எல்லாம் எரித்து விட்டார்கள்

பாதிக்கப்பட்ட மக்களின் முகங்களை புகைப்படங்களில் பாருங்கள். இந்த ஏழை மக்களுக்கு இவ்வளவு பெரிய கொடுமையை இழைத்தவர்கள் உண்மையிலேயே மனிதர்கள்தானா?







4 comments:

  1. நல்ல காரியம் செய்தீர்கள். பாராட்டுகள்!

    ReplyDelete
  2. ஜாதி வெறியர்களினால் கொடுமைக்கு உள்ளான மக்களுக்கு உதவி செய்த நல்லவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. "உதவி செய்தோம் என்பதை விட மிகப் பெரிய கொடுமைக்கு உள்ளான மக்களுக்கு ஆதரவாக செயல்படவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை அளித்ததுதான் முக்கியமான ஒன்றாக கருதுகிறோம்."

    மிகுந்த பாராட்டுக்கள். இன்றைக்கு நலிந்தவர்களை நசுக்கும் நரிகள்தான், தாங்கள் நசுக்கப்பட்டதாகக் கூறி இட ஒதுக்கீடு பெறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், தலித்துகளுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். அதுவும் 3 தலைமுறைகளுக்கு. ஏதிலிகளை ஆதிக்கம் செய்பவர்கள், ஏதுமிலாதவர்களாக ஆவார்கள். இது நிச்சயம்.

    ReplyDelete