Thursday, October 23, 2025

காக்க வைத்த எம்.ஜி.ஆர்

 


கரூர் நெரிசல் மரணங்கள்   எழுத வைத்த இன்னொரு ஒரு அனுபவப் பதிவு.

எட்டாவது வரை காரைக்குடியில் படித்துக் கொண்டிருந்த  நான் ஒன்பதாவது  முதல் பனிரெண்டாவது வரை தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சர் சிவசாமி ஐயர் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். எட்டாம் வகுப்பில்  பார்டரில் பாஸ் செய்ததால் என் அக்கா ஆசிரியராக வேலை பார்த்த பள்ளியில் அவரது கண்காணிப்பில் படித்தாலாவது தேறுவேன் என்ற நம்பிக்கையில் அங்கே வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டேன் என்பதுதான் அக்மார்க் உண்மை. 

1978 ல் திருக்காட்டுப்பள்ளி வாசம் தொடங்கியது. ஒன்பதாவது முழுப் பரிட்சை முடிந்து விடுமுறைக்கு காரைக்குடி (என் பெற்றோர் அப்போது அங்கேதான் இருந்தார்கள் ) சென்று பத்தாவது வகுப்பு பள்ளி திறக்கும் நாளில் திருக்காட்டுப்பள்ளி வந்தால் ஊரே பரபரப்பாக இருந்தது. 

ஆம்.

திருக்காட்டுப்பள்ளி, இடைத்தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.

ஆம்.

1979 ஜூன் மாதம், தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரம் (பின்னாளில் உதிர்ந்த ரோமம் என்று புகழ் பெற்றவர்) தமிழக அமைச்சரானதால் ராஜினாமா செய்ய இடைத்தேர்தல் வந்தது.

1977 பொதுத்தேர்தலில் உ.பி மாநிலம் ரேபரேலி தொகுதியில் தோற்றுப் போன திருமதி இந்திரா காந்தி மீண்டும் மக்களவைக்குச் செல்ல தஞ்சை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். அவர் போட்டியிடப் போகிறார் என்றுதான் பத்திரிக்கைக்கள் எழுதின. அவர் போட்டியிட்டால் அவரை எதிர்த்து கலைஞர் போட்டியிடுவார் என்றும் எழுதினர். ஆனால் இவை இரண்டுமே நடக்கவில்லை. இந்திரா போட்டியிட அதிமுக ஆதரவு தரக்கூடாது என்று அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் மிரட்டியதால்தான் எம்.ஜி.ஆர் பின் வாங்கினார் என்றும் பத்திரிக்கைகள் எழுதின. ஆனால் எம்.ஜி.ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்தார். 

காங்கிரஸ் சார்பில் சிங்கார வடிவேலு என்பவரும் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கமும் (இந்நாள் கல்வி அமைச்சர் அன்பில் மஹேஷ் பொய்யாமொழியின் தாத்தா) போட்டியிட்டனர்.

நான் விடுமுறை முடிந்து திருக்காட்டுப்பள்ளி வரும் முன்பே அந்த சிறு ஊருக்கு மூன்று முக்கியத் தலைவர்கள் வந்து போயிருந்தனர். 

அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அன்றைய முன்னாள் முதல்வர் கலைஞர் ஆகியோருடைய கூட்டங்கள் காவிரியில் ( நதியில் தண்ணீர் இல்லை) நடந்திருந்தது. 

அதற்குப் பிறகு நடந்த கூட்டம் நடிகர் திலகம் சிவாஜி கணெசனின் கூட்டம். அந்த கூட்டம் தினசரி மார்க்கெட்டை ஒட்டிய ஒரு திடலில் நடந்தது. தஞ்சாவூர் தொகுதிக்கு திமுக சம்பந்தமே இல்லாத  திருச்சிக்காரரை நிறுத்தியுள்ளது என்று  அவர் குற்றம் சுமத்தினார். ஒரு வேளை இந்திரா அம்மையார் நின்றிருந்தால் ????

தேர்தல் நாளுக்கு  ஒரு நான்கு நாட்கள் முன்பாக எம்.ஜி.ஆர் திருக்காட்டுப்பள்ளி வரப் போவதாக  காரில் மைக் கட்டி கிராமம் கிராமமாக அறிவித்துக் கொண்டிருந்தார்கள். இரவு எட்டு மணிக்கு அவர் வருவார் என்று சொல்லப்பட்டது. 

எந்த மைதானத்திலோ, காவிரியிலோ எம்.ஜி.ஆர் பேசவில்லை. மூன்று சாலைகள் சந்திக்கும் ஒரு முனையில் அவர் ஜீப்பில் நின்றபடியே பேசுவார் என்று சொல்லப்பட்டது. ஆறு மணிக்கெல்லாம் அந்த இடம் நிரம்பி வழிந்தது. பக்கத்தில் இருந்த ஒரு பள்ளி நண்பனின் கடையில் பாதுகாப்பாக இடம் பிடித்திருந்தேன்.

நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. தலைவர் வந்து கொண்டே இருக்கிறார் என்று அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் வருவதாகத் தெரியவில்லை. பதினோரு மணி வாக்கில் அறிவிப்பு வந்தது. வரும் வழியில் ஒவ்வொரு இடத்திலும் தலைவரை மக்கள் சூழ்ந்து கொண்டு பேசச் சொல்வதால் தாமதமாகிறது. அதனால் வேறு வழியில்லாமல் இன்றைய கூட்டம் ரத்து செய்யப்படுகிறது, நாளை எட்டு மணிக்கு இதே இடத்தில் மீண்டும் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். மக்களும் அமைதியாகக் கலைந்தனர். 

மறு நாளும் ஆறு ,மணிக்கெல்லாம் மக்கள் குவிந்து விட்டனர். ஆனால் இந்த முறை எட்டரை மணிக்கெல்லாம் எம்.ஜி.ஆர் வந்து விட்டார். அவர் பேசியதை எல்லாம் எங்கே மக்கள் கேட்டார்கள்! ஒரே ஆரவாரம்தான், பார்த்தாலே பரவசமடைந்த மக்கள் அவரிடம் காண்பித்த பிரியமே தேர்தல் திசை வழியை சொன்னது.

முதல் நாள் வராமல் காக்க வைத்தமைக்கு அவர் வருத்தம் தெரிவித்தார் என்பது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. "தலைவா, தலைவா" என்று அப்போது மக்கள் எழுப்பிய ஆரவாரமே அவர் வருத்தமெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று மக்கள் சொல்லாமல் சொன்னார்கள் என்பதன் அர்த்தம். 

41 பேர் இறந்ததற்கு தான் தாமதமாக வந்ததுதான் முக்கியக் காரணம் என்பதை இன்னமும் ஒப்புக் கொள்ளாமல் சதிக் கோட்பாடு எழுதும் விஜய் தன்னை எம்.ஜி.ஆர் என்று நினைத்துக் கொள்வதெல்லாம் ரொம்பவே ஓவர்.  

பிகு: அந்த தஞ்சாவூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சிங்காரவடிவேலுதான் வெற்றி பெற்றார். வாக்கு வித்தியாசம் ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்தது. 


No comments:

Post a Comment