நேற்றைய இரவு துயரமான இரவாக முடிந்தது.
எங்கள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டத்தின் முன்னாள் தலைவர் தோழர் என்.ஏகாம்பரம் நேற்று இரவு இயற்கை எய்தினார். அவருடனான நினைவுகள் மனதில் அலை அலையாய் மோதிக் கொண்டிருந்தது.
அவரை நான் முதன் முதலில் அறிந்தது 12.06.1988 அன்று நடைபெற்ற வேலூர் கோட்டத்தின் அமைப்பு மாநாட்டில்தான்.
வேலூர் கோட்டத்தின் இணைச்செயலாளராக அந்த மாநாட்டில்தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகே அவருடனான பரிச்சயம் தொடங்கி பின்னாளில் வேலூர் கோட்ட அலுவலகத்திற்கு மாறுதலில் வந்த பிறகு அது நெருக்கமாக மாறியது.
எனக்கு திருமணம் நிச்சயமான சூழலில் அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த நெய்வேலிக்கு கும்பகோணம் கிளையில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மனைவிக்கு மாறுதல் கிடைக்காது என்ற நிலையில் என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்த எனக்கு "வேலூருக்கு இருவரும் வாருங்கள்" என்ற ஆலோசனையை அவர்தான் வழங்கினார்.
தோழர் ஏகாம்பரம், எல்.ஐ.சி நிறுவனம் உருவான பின்பு முதலில் பணி நியமனம் செய்யப்பட்ட உதவியாளர்களில் ஒருவர். பணியில் சேர்ந்த போதே சங்கத்திலும் சேர்ந்தவர். சங்கத்தின் உறுப்பினர்களை, தலைவர்களை நிர்வாகம் வேட்டையாடிக் கொண்டிருந்த நேரம் அது. எந்த அச்சமும் இல்லாமல் சங்கத்தில் இணைந்தது மட்டுமன்றி செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர்.
பணியில் சேர்ந்து பல வருடங்களுக்குப் பிறகுதான் பயிற்சி வகுப்பே நடத்தினார்கள் என்பார். அந்த பயிற்சி வகுப்பில் அவரோடு பங்கேற்றவர் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம். அப்போதே தென் மண்டல இணைச்செயலாளராக இருந்த தோழர் என்.எம்.எஸ், பயிற்சி வகுப்பின் தேநீர் இடைவேளையின் போதும் மதிய உணவு இடைவேளையின் போதும் மாநாட்டு அறிக்கையை எழுதிக் கொண்டிருப்பார், அவர் மிகப் பெரிய உயரத்துக்குச் செல்வார் என்று அப்போதே தெரிந்தது என தோழர் என்.எம்.எஸ் அவர்களைப் பற்றி தோழர் ஏகாம்பரம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்.
ஊழியர்கள் பலன் பற்றிய அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார். அவர் அலுவலகத்தில் செய்த பணியும் "ஓய்வுக்கால பலன்களை பட்டுவாடா செய்தல், பதவி உயர்வு பெறுவோருக்கான ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்தல்" ஊழியர்களுக்கு அதிகபட்ச பலன் கிடைப்பதையும் அவை உரிய காலத்தில் கிடைப்பதையும் உறுதி செய்தவர்.
ஊழியர்களுக்கான பணியிட மாறுதல்களின் போது அதிகபட்ச மாறுதல்கள் கிடைப்பதற்கான சூட்சுமங்கள் அறிந்தவர். அவர் உருவாக்கிய ராஜபாட்டை இன்றும் பல தோழர்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கிறது.
பணி ஓய்வு என்பது அவரது சங்க உணர்வுகளுக்குக் கிடையாது. நுகர்வோர் குறியீட்டு எண் என்ன என்பதை ஒவ்வொரு மாதமும் கண்டறிந்து ஒவ்வொரு மூன்று மாதமும் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு வரும் என்பதை கணக்கிட்டு தகவல் சொல்வார். அவர் எனக்கு இறுதியாக வாட்ஸப்பில் அனுப்பிய செய்தி கூட அகவிலைப்படி உயர்வு பற்றித்தான்.
அந்த ஆர்வம்தான் கடந்தாண்டு "அகவிலைப்படி- தோற்றமும் முன்னேற்றங்களும், ஒர் வரலாற்றுப் பார்வை" என்ற நூலை அவரது 86 வது வயதில் எழுத வைத்தது. அந்த நூல் வெறும் அகவிலைப்படியோடு நிற்கவில்லை. ஆட்சியாளர்களின் கொள்கைகள் உழைக்கும் மக்களை எப்படித்தாக்கும் என்பதை விளக்கும் நூலாகவும் இருந்தது. திண்டிவனத்தில் நடைபெற்ற கோட்டச்சங்க மாநாட்டில் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா வெளியிட்டார்.
அவர் நிஜமாகவே "எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்"தான். கர்னாடக இசையில் ஆர்வம் உள்ளவர்கள். ராகங்களின் அழகை விளக்கக் கூடியவர். ஆபேரி ராகத்தின் அழகை "நகுமோ" கீர்த்தனையில்தான் உணர முடியும் என்பார். பல கர்னாடக இசை காணொளிகளை அனுப்பி அந்த ராகங்களின் சிறப்பையும் சேர்த்து சொல்வார்.
மார்க்சியத்தின் மீதும் மதச்சார்பின்மை கொள்கையின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டவர். மத உணர்வுகளை அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்பவர்களை அம்பலப்படுத்த தயங்காதவர். இன்றைய ஆட்சியாளர்கள் பற்றி அவர்களை ஆதரிக்கும் உறவினர்களுக்கு இவர் அனுப்பிய சில செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். கொள்கைக்காக யாரிடமும் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் கறாராக இருப்பவர் என்பதை அந்த செய்திகளே சொல்லும்.
வயது வித்தியாசம் இல்லாமல் பழகக் கூடியவர். அனைவரிடமும் தோழமை உணர்வை வெளிப்படுத்துபவர்.
பல சந்தர்ப்பங்களில் நான் அவருடைய ஆலோசனையை கேட்டுப் பெற்றுள்ளேன். பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டுமென எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் முன்மொழிந்த போது அந்த பொறுப்பை ஏற்று நம்மால் செயல்பட முடியுமா என்று மலைப்பு ஏற்பட்ட போது அவரிடம் ஆலோசித்தேன். நம்பிக்கையும் தைரியமும் உற்சாகமும் கொடுத்தார்.
பணி ஓய்வு பெற்று 27 ஆண்டுகள் ஆன பின்பும் சங்கத்தின் தகவல்களை கேட்டு தெரிந்து கொள்வார், எல்.ஐ.சி நிறுவனத்தின் சுற்றறிக்கைகளை அனுப்பச் சொல்லி தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பார்.
அவர் என்னை செல்லமாக கடிந்து கொண்ட ஒரு நிகழ்வும் உண்டு.
1990ல் தென் மண்டல மாநாடு ஹைதராபாத் நகரில் நடக்கிறது. நான்கு நாட்கள் தென் மண்டல மாநாடு நடந்தது. ஐந்தாவது நாள் தென் மத்திய மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் அமைப்பு மாநாடு. மாநாட்டு அறிக்கையில் ஒரு வார்த்தை சொல்ல வந்த முக்கியக் கருத்தை எவ்வாறு சிதைக்கிறது என்று எங்கள் கோட்ட பிரதிநிதிகள் விவாதிக்கையில் சுட்டிக்காட்டினார். அவர் சொன்ன கருத்தை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்கையில் தோழர் ஜகதீசன் சுட்டிக் காண்பிக்க அதனை அறிக்கை மீதான விவாதத்திற்கு தொகுப்புரை வழங்குகையில் அந்த வார்த்தையை மாற்றுவதாக அன்றைய தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.ராஜப்பா குறிப்பிட்டார்.
தென் மண்டல மாநாடு முடிந்த நாளன்று ஏதாவது தெலுங்குப் படம் பார்ப்போம் என்று கிளம்பினோம். அவரையும் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றோம். எதுவும் தெரியாமல் ஒரு திரை அரங்கில் நுழைந்தோம். கடைசியில் அந்த படம் மிக மோசமான முறையில் சொதப்பலாக எடுக்கப் பட்டிருந்த 16 வது வயதினிலே படத்தின் ரீமேக், "என் தூக்கத்தை கெடுத்து இப்படி ஒரு படத்துக்கு போய் கூட்டிட்டு போனீங்களே" எறு கேட்டதுதான் அந்த நிகழ்வு.
கதவடைப்புப் போராட்டத்தின் ஐம்பதாவது ஆண்டை முன்னிட்டு ஒரு சிறு பிரசுரத்தை வெளியிட்டோம். அந்த நூலிற்கு ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்புமாறு கேட்டுக் கொண்டோம். மகிழ்வோடு இசைந்து உடனடியாக அனுப்பி வைத்தார். அச்சிடும் பணியின் இறுதிக்கட்டத்தில் தொலைபேசி செய்து வேலூர் கிளையின் அனுபவத்தைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுத விரும்புகிறேன். உங்களால் அதனை இணைக்க முடியுமா என்று கேட்க அது எங்களுக்கான நல்வாய்ப்பு என்று சொல்ல மறுநாளே அருமையான ஆங்கிலத்தில் அனுப்பி வைத்தார். அவரின் சங்க உணர்வுக்கு அது ஒரு சான்று.
கடந்த ஜூலை இறுதியில் 70 பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்ட ஒரு நோட்டை கொடுத்தனுப்பியிருந்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முக்கியப் போராட்டங்கள் பற்றி எழுதியிருந்தார். அதனை ஒரு நூலாக்கும் பணிகள் துவங்கும் முன்பே அவர் மறைந்து விட்டார். அந்த பணியை முடித்து உரிய காலத்தில் வெளியிட வேண்டும்.
இறுதி மூச்சு வரை சங்கத்தின் மீது கொண்ட பற்று மாறாமல் தான் அறிந்தவற்றை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று உழைத்தவர் தோழர் ஏகாம்பரம். அவர் வாழ்வே மற்றவருக்கான உதாரணம்.
நீங்கள் உயர்த்திப்பிடித்த தீபத்தை தொடர்ந்து பாதுகாப்போம் என்று உறுதியேற்று செயல்படுவதே அவருக்கான சிறந்த அஞ்சலி.
செவ்வணக்கம் தோழர் ஏகாம்பரம்
சில முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் கீழே . . .
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைரவிழாவை முன்னிட்டு வேலூர் கோட்டம் வெளியிட்ட நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு பேசிய போது எடுக்கப்பட்ட படங்கள்.
வேலூர் கோட்ட வெள்ளி விழா ஆண்டு மாநாட்டின் போது வெளியிடப்பட்ட வேலூர் கோட்ட 25 ஆண்டுகள் வரலாறு நூலின் முதல் பிரதியை பெற்ற போது.
அவர் எழுதிய "அகவிலைப்படி, தோற்றமும் முன்னேற்றங்களும், ஓர் வரலாற்றுப் பார்வை" நூலை, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா வெளியிட்ட போது . . .

No comments:
Post a Comment