Sunday, February 27, 2011

அடி வாங்கிய பின்பாவது உணர்வார்களா?

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி விட்டு தமிழக
முதல்வரைப் பார்க்கச்சென்ற  தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்கத்தின் 
தோழர்கள் மீது காவல்துறை  கொடுந்தாக்குதல்  நடத்தியிருக்கிறது. 
இந்தப் படங்களைப் பாருங்கள் 




இந்தத் தாக்குதலைத்தான்  தமிழக அரசு மென்மையான தடியடி நடத்தி
போராட்டக்காரர்களைக் கலைத்ததாகக் கூறியது. அநேகமாக அனைத்து 
முதலாளித்துவ ஊடகங்களும்  அரசு சொன்ன அதே  வார்த்தையைத்தான் 
தங்கள்  செய்திகளில் பயன்படுத்தியது. ஆங்கிலப் பத்திரிகைகள் Mild Lathi charge  என்று  எழுதின.  இந்த மென்மையான தாக்குதலிலேயே  மண்டை 
உடைந்தது, உதடுகளும் காதுகளும் கிழிந்தது, முதுகெங்கும்  வரிகள். 

மென்மையான தாக்குதலே  இப்படி என்றால் இவர்கள் பலமாக 
தாக்கினால் உயிரே  போயிருக்கும் போல.  ரஜனிகாந்தின் பாட்சா 
படத்தில் " உடல், புத்தி எல்லாவற்றிலும் சண்டை வெறி ஊறிப்போன 
ஒருவனால்தான் இப்படி அடிக்க முடியும் " 

அது போல நம் காவல்துறையின் நாடி நரம்பெல்லாம் மிருக வெறி 
ஊறிப்போயுள்ளதால்தான்   இப்படி ஒரு கொடூரத் தாக்குதலை 
நிகழ்த்தியுள்ளனர். கலைஞரின் இரும்புக்கரம்  இந்த ஐந்தாண்டுகளில் 
இது போன்ற ஏராளமான  தாக்குதலை நடத்தியுள்ளது. 

ஆட்சியில் பங்கு, அதிகமான சீட்டுக்களைக் கேட்கும் காங்கிரஸ் 
கட்சியிடம் காண்பிக்க முடியாத வீரத்தை, கையாலாகாததனத்தை 
இப்படி போராடுபவர்களிடம் காண்பிக்கிறார், இந்த சூராதி சூரர். 

தடியடி பெற்றது ஒரு சங்கத்தின் தோழர்கள்  என்றாலும்  ஒட்டு மொத்த
அரசு ஊழியர்கள் மீது விழுந்த அடியாகவே கருத வேண்டும். பிட்டுக்கு 
மண் சுமந்த கதையில் வருவது போல சிவா பெருமானின் முதுகில் 
விழுந்த அடியின் வலியை  அனைவருமே உணர்ந்தது போல  தங்கள் மீது விழுந்த அடியாக  ஒவ்வொரு  அரசு ஊழியரும்  உணர வேண்டும். 
பகை முடிக்கும் பணி  இந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும்  வந்துள்ளது என்பதை  மறக்கக் கூடாது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இடைக்கால நிவாரணம் 
அளித்து  அரசு ஊழியர்களை நன்றாகவே  கலைஞர்  ஏமாற்றினார். 
இன்னும் கொடுப்பார், எதுவும் கொடுப்பார், போதாது போதாது என்றால்
தன்னைக் கொடுப்பார், தன உயிரும் தான் கொடுப்பார்  என்று நம்பி
பட்டன் தேயும் வரை அழுத்தி  காங்கிரஸ் கூட்டணிக்கு கூடுதல் 
இடம் பெற்றுக் கொடுத்ததில்  அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 
முக்கிய பங்கு உண்டு. 

நாடாளுமன்றத் தேர்தலில்  நுண் பார்வையாளராக ( Micro Observer) 
வாக்கு எண்ணிக்கைக்கு சென்றிருந்தேன்.  நான் இருந்தது ஒரு 
சட்டமன்றத் தொகுதிக்கான  வாக்குகள் எண்ணப்பட்ட அறைக்கு. 
ஒரே ஒரு சுற்றித் தவிர மீதமுள்ள  அனைத்து  சுற்றுகளிலுமே 
திமுக கூட்டணி முன்னிலையில் இருந்தது. வாக்கு எண்ணிக்கை 
நிலவரம் தெரிகின்ற போதெல்லாம் வாக்கு எண்ணும் பணியில் 
இருந்த ஊழியர்களே  திமுக வெற்றியை மகிழ்ச்சியோடு  
கொண்டாடினார்கள்.  ஏன்  இந்த உற்சாகம் என்று கேட்டதற்கு 
தேர்தலுக்குப் பிறகு  ஆறாவது ஊதியக்குழுவின்  அனைத்து  
பலன்களும் தங்களுக்கும்  கிடைக்கும்  என காரணம்  சொன்னார்கள். 

ஆனால் கிடைத்தது  வெறும் ஏமாற்றம் மட்டுமே. இப்போது கூடுதல் 
ஊக்கத்தொகையாக  அடியும் உதையும்.  ஒரு கையெழுத்தில் ஒரு 
லட்சம் ஊழியர்களை வீட்டிற்கு  அனுப்பிய ஜெயலலிதாவை  மீண்டும் 
ஆதரிப்பதா  என்ற நியாயமான  கேள்வி அரசு ஊழியர்கள் மத்தியில் 
உள்ளது.  ஜெயலலிதா அரசை  ஐந்தாண்டுகள் முன்பு வீட்டிற்கு அனுப்பிய 
பெருமை  அரசு ஊழியர்களுக்கு உண்டு,

இப்போதும் அதே பணியை செய்து திமுக அரசை வீழ்த்தினால்  இனி வரும்  எந்த  அரசும்  உழைப்பாளி மக்கள் மீது  கை வைக்க யோசிக்கும். 
மீண்டும் கலைஞரையே   ஆதரித்தால்  அடியும் உதையும் அன்றாட 
நிகழ்வாகி விடும். 

அனைத்து  அரசு ஊழியர்களும் இந்த உண்மையை உணர்ந்திட வேண்டும்.
 

 

1 comment:

  1. பார்க்க கொடுமையாக இருக்கிறது. நமது நாட்டில் ஜனநாயக ஆட்சி தான் நடக்கிறதா? ராணுவ ஆட்சி நடக்கிறதா?
    வேதனை.

    ReplyDelete