Tuesday, February 22, 2011

நாளை நமது நாள்

நாளை இந்தியாவின் தலைநகரம்  குலுங்கப் போகிறது. இத்தேசத்தை 
உண்மையாய் நேசிக்கிற  உழைப்பாளி மக்கள் இந்தியாவின் அதிகார 
மையமாம் நாடாளுமன்றத்தை  நோக்கி பேரணியாக  செல்லவுள்ளனர். 
முதலாளித்துவ அரசியல் கட்சிகள்  தங்களின்  அரசியல் ஆதாயத்திற்காக நடத்துகின்ற வெற்று  முழக்கங்களோடான நடவடிக்கை அல்ல இந்தப் பேரணி. குவார்ட்டர் பாட்டிலும் கோழி பிரியாணியும் கொடுத்து அழைத்துவரப்படும் கூட்டமும் அல்ல. 

ஏன் இந்தப் பேரணி? 

யாரெல்லாம் பேரணியாய் செல்கின்றனர்? 
இத்தேசத்தின் தொழிற்சங்க இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து 
நடத்துகின்ற பேரணி இது. ஆலைகளில்  உழைக்கிற தொழிலாளி முதல் 
சாலைகளில் ரிகஷா இருக்கிற தொழிலாளி முதல் பீடி சுற்றும் 
தொழிலாளி, சமையலறை அடுப்புக்களில் வெந்து போகும் சத்துணவு,
அங்கன்வாடி ஊழியர்கள், மத்திய, மாநில, பொதுத்துறை ஊழியர்கள், 
ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு ஊழியர்களும்  பங்கேற்கின்ற 
பேரணி இது. 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துங்கள், ஆன்லைன் வர்த்தகத்தை 
தடை செய்யுங்கள், பொது விநியோக முறையை  பலப்படுத்துங்கள்! 
பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறையுங்கள். வரி விதிப்பு 
முறையை மாற்றியமைத்தால் அது சாத்தியமே.

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை  நிறுவனங்களில் புதிய பணி
நியமனத்திற்கு  போடப்பட்டுள்ள தடைகளை  அகற்றுங்கள். 


ஊக்கத்தொகை, தொழில் மானியம், ஊக்கச்சலுகை  என்று பல 
பெயர்களில்  அரசிடமிருந்து  உதவி பெறும்  எந்த ஒரு நிறுவனமும் 
ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது  என்று நிபந்தனை 
விதியுங்கள்.


வேலை உறுதிச்சட்டத்தை  இருநூறு நாட்களுக்கு விரிவு படுத்துங்கள் 


அணி சேராத தொழிலாளர்களுக்கு  சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.


விவசாயப் பொருட்களுக்கு  நியாயமான விலை கிடைப்பதை 
உத்தரவாதப்படுத்துங்கள்


சர்வதேச பொருளாதார நெருக்கடியில்  இந்தியா சின்னாபின்னமாகாமல் 
காத்து நின்ற பொதுத்துறை  வங்கிகள், எல்.ஐ.சி மற்றும்  பொதுத்துறை 
பொதுக்காப்பீட்டு  நிறுவனங்கள்  எதையும் சீர்குலைக்கும்  முயற்சிகளை 
கைவிடுங்கள். 

நடுத்தர ஊழியர்களுக்கான வருமான வரி வரம்பை மூன்று லட்சமாக 
உயர்த்திடுங்கள். 


சில்லறை வர்த்தகத்தில்  அந்நிய மூலதனத்தை அனுமதிக்காதீர்கள்

பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்காதீர்கள்

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடக்கிற பேரணி இது. 

இக்கோரிக்கைகளை  ஏற்றால்  மத்தியரசு வார்த்தைகளில் மட்டுமே 
உருகுகின்ற ' அம் ஆத்மி ' க்களின் சாமானிய மனிதர்களின் 
வாழ்நிலை  உயரும். அப்போது தேசமும் உண்மையிலேயே  
வளம் பெறும். 

மாற்றத்திற்கான கொள்கைகளை முன்வைத்து நடக்கிற 
இப்பேரணியில் கலந்து கொள்ளப் போகின்றவர்கள்  பல லட்சம்
என்றால், அதே உணர்வோடு தேசம் முழுவதும் பரவி உள்ளவர்கள்
சில கோடி. 

இந்த உணர்வு உழைப்பாளி மக்களை ஒன்று படுத்தும். 
நாளை டெல்லி சிவக்கும்,
எகிப்து போல எழுச்சி அளிக்கும்.
நிச்சயம் நாளை நமது நாள். 
உழைப்பாளி மக்களின் நாள்.    

No comments:

Post a Comment