ஆளும் கட்சிக் குண்டர்களால் கடந்தாண்டு அண்ணல் அம்பேத்கர்
பிறந்த நாளில் குடியாத்தத்தில் 36 அருந்ததியர், ஆதி திராவிடர்,
இஸ்லாமியர் குடும்பங்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. திரைப்படக்
காட்சிகள் போல ஆடுகளை அறுத்து அதன் ரத்தத்தை வீதியெங்கும்
தெளித்து யாராவது ஏதாவது பேசினால் அவர்களுக்கும் இதே கதி
என்று மிரட்டி புல்டோசர் கொண்டு வீடுகளை இடித்தார்கள்.
காவல்துறை ஆளும் கட்சி குண்டர்களுக்கு எடுபிடியாய் நின்றது.
வெட்டப்பட்ட ஆடுகளைக் கொண்டு அங்கேயே செய்யப்பட்ட
பிரியாணி காவல் நிலையத்திற்கும் சென்றது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மார்க்சிஸ்ட் கட்சியும்
இப்பிரச்சினையை கையில் எடுத்தது. 12 ஆகஸ்ட் 2010 அன்று
குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
நடைபெற்றது. அப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று ஒப்பந்தம்
கையெழுத்தாகும் நேரம் எங்கிருந்தோ வந்த தொலைபேசி அழைப்பு
நிலைமையை மாற்றியது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்
தலைவர் தோழர் சம்பத், பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல்ராஜ்,
தோழர் ஜி.லதா, எம்.எல்.ஏ உள்ளிட்ட 59 தோழர்கள் கைது செய்யப்பட்டு
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்புதான்
ஒப்பந்தம் முறிந்ததற்கு காரணம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பகிரங்கமாகவே
பல முறை குற்றம் சாட்டினார். எது எதற்கோ நீண்ட பதில் தரும்
தமிழக முதல்வர் இப்பிரச்சினையில் மட்டும் இடித்த புளி போல
மவுனமாகவே இருந்தார்.
முதல்வர் எவ்வழியோ, மாவட்ட ஆட்சியரும் அவ்வழிதானே. பல
முறை சந்தித்த பின்பும் அவர் மிகப் பெரிய மவுன சாமியாராகவே
திகழ்ந்தார். அரசு தரப்பில் சலனமே இல்லை.
பிப்ரவரி மாதம் மூன்றாம் நாள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
முன்பு மறியல் நடத்துவது என தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு
செய்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் தோழர் சம்பத், பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல்ராஜ், தோழர் ஜி.லதா, எம்.எல்.ஏ,
தோழர் பாலபாரதி, எம்.எல்.ஏ ஆகியோர் தலைமையில் மறியல்
நடப்பதாக திட்டமிட்டு அதற்கான தயாரிப்புக்கள் துவங்கியது.
பல்வேறு அமைப்புக்களின் சார்பில் முதல்வருக்கு தந்திகள் அனுப்பப்
பட்டது. மறியலுக்கான தயாரிப்புக்கள் வேகம் எடுத்த போதுதான் அரசு
முழித்துக் கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடத்தில்
வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் அவசரம்
அவசரமாக எடுக்கப்பட்டது. அதிலும் ஆயிரம் குழப்பங்கள். அத்தனையும்
தாண்டி இன்று மாலை குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் ஜி.லதா, மார்க்சிஸ்ட்
கட்சியின் மாவட்டத் தலைவர்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்
மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்ற பட்டா வழங்கும்
நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
எந்த இடத்தில் பேச்சு வார்த்தை நாடகம் முறிந்து போராடியவர்கள்
கைது செய்யப்பட்டார்களோ, எந்த அலுவலகத்திற்குள் நுழையக்
கூடாது என்று காவல்துறை தடை செய்ததோ, அதே இடத்தில்,
அதே குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் , கைது செய்தவர்கள்
முன்னிலையிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்டாக்கள்
வழங்கப்பட்டது மிகவும் மன நிறைவைத் தந்தது.
கடந்த 30 ஜனவரி அன்று எங்கள் சங்கத்தின் மாநில மகளிர்
மாநாடு வேலூரில் நடைபெற்றது. அம்மாநாடு சிறப்பாக நடைபெற
கடுமையாக உழைத்திட்ட செயல் வீரர்களுக்கு இன்று நன்றி
அறிவிப்புக் கூட்டம் வைத்திருந்தோம். இந்த நிகழ்ச்சியில்
பங்கேற்பதற்காக அக்கூட்டத்தை ஒத்தி வைத்து விட்டு குடியாத்தம்
போயிருந்தோம். இந்த வெற்றிக்கு ஒரு அணிலளவு பங்கு நமக்கும்
இருந்ததே என்ற பெருமிதத்தோடு திரும்பி வந்தோம்.
உறுதியான போராட்டம் வெற்றியைத் தரும் என்பதற்கு
மற்றும் ஒரு சான்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்
உறுதிக்கும் ஒரு சான்று குடியாத்தம் போராட்டம்.
No comments:
Post a Comment