மனது உண்மையிலேயே மகிழ்ச்சியில் திளைக்கிறது. எங்களது
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 22 வது பொது மாநாடு
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 22 வது பொது மாநாடு
நவம்பரில் புது டெல்லியில் நடைபெற்றது. மாநாடு பல முக்கிய
முடிவுகளை எடுத்தது. அதில் ஒன்று எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை
பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சிறப்பம்சங்களையும் வலிமையையும் விளக்கும் பிரசுரங்களை மக்கள் மத்தியில் எடுத்துச்சென்று பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிலேயே
காப்பீடு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்வதுதான்.
1990 ல் எப்போது அமெரிக்கா, இந்தியா தனது சேவைத்துறைகளை
திறந்து விடாவிட்டால் , தனது நாட்டு சட்டமான சூப்பர் 301 ன் படி
இந்தியா மீது தடைகள் விதிப்போம் என்று மிரட்டத் தொடங்கியதோ
அது முதலே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொடர்ந்து
உறுதியாக ஏராளமான போராட்டங்களையும் பிரச்சார இயக்கங்களையும் நடத்தி வருகின்றது. இன்சூரன்ஸ் துறையில்
தனியாரை அனுமதிக்க வேண்டும் என்று 1994 ல் மத்தியரசு நியமித்த
மல்ஹோத்ரா குழு அறிக்கை பரிந்துரைத்ததோ அதிலிருந்து எத்தனையோ வேலை நிறுத்தங்கள், தெரு முனைக் கூட்டங்கள்,
சைக்கிள், வேன், ஆட்டோ பிரச்சாரங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள்,
பேரணிகள், மனிதசங்கிலிகள், கையெழுத்து இயக்கங்கள் என்று எத்தனையோ இயக்கங்கள் இத்தேசம் முழுதும் இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு இயக்கத்தின்போதும் பிரசுரங்களை வெளியிட்டு மக்களிடம் கொண்டு செல்வது என்பது ஒரு முக்கிய
அம்சம்.
எங்களது வேலூர் கோட்டத்தில் மட்டும் எத்தனை பிரசுரங்கள்
வெளியிட்டிருப்போம் என்று ஒரு முறை கணக்கிட்டுப்பார்த்தால்
அது எத்தனையோ லட்சங்களை தாண்டியது. பிரசுரங்கள் பல விதம்.
மத்தியஅரசின் கொள்கைகளை சாடியிருப்போம், தனியார் காப்பீட்டு
நிறுவனங்கள் முன்பு எப்படி மோசமாக செயல்பட்டன என்பதை
மக்களுக்கு நினைவு படுத்துவோம், தனியார் நிதி நிறுவனங்கள்
அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி ஏமாற்றியதை அம்பலப்படுத்தி
எச்சரிப்போம், எல்.ஐ.சி யின் செயல்திறன் பற்றி விளக்குவோம்.
எல்.ஐ.சி யின் நிதி எவ்வாறு தேசத்திற்கும் மக்களுக்கும் பயன்படுகிறது
என்ற விவரங்களைச் சொல்வோம். தனியார் கம்பெனிகள் வந்தாலும்
அது பாலிசிதாரர்களுக்கு சேர வேண்டிய பணத்தை தருவதில் செய்யும்
பிரச்சினைகளை அம்பலப்படுத்துவோம். உலக அளவில் ஏற்பட்டுள்ள
பொருளாதார நெருக்கடி என்று பல விஷயங்களும் இப்பிரசுரங்களில்
இருக்கும். அந்தந்த சூழலின் வெப்பத்தைப் பொறுத்து உள்ளடக்கமும்
அதன் கலவையும் மாறும்.
இம்முறை நாங்கள் வெளியிட்ட பிரசுரம் என்பது முற்றிலுமாக
எல்.ஐ.சி யின் சிறப்பம்சங்களை மட்டுமே முன்வைத்தது. அற்புதமான
தமிழில் கவனத்தை கவரும் வார்த்தைகளுடனான ஒரு பிரசுரத்தை
எங்களின் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு தயாரிக்க
அதை எங்கள் வேலூர் கோட்டத்தில் ஒரு லட்சம் பிரதிகள் அச்சிட்டோம். தனியார் கம்பெனிகளின் செயல்பாடு, மற்றும் அரசின்
அடிபணிதல் பற்றி ஒரு வாசகமாவது இணைத்துக் கொள்ளலாமா என
எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதனிடம்
கேட்ட போது. வேண்டாம் தோழர் இப்பிரசுரம் நம் நிறுவனத்தின் நல்ல
அம்சங்கள் பற்றி மட்டுமே சொல்லட்டும் என்று கூறி விட்டார்.
நேற்றும் இன்றும் அப்பிரசுரம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. எந்த ஒரு நோட்டீஸ் அதிகமாக கீழே போடப்படாமல்
மக்களால் அவர்களது பைகளில் வைக்கப்படுகின்றதோ, அது அவர்களை
ஈர்த்துள்ளது என்பதன் அடையாளம். நேற்று அதனை உணர முடிந்தது.
இன்று காலை ஒரு மூத்த தோழர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் அளித்த பிரசுரத்தை வாங்கிக் கொண்ட இரு
பெரியவர்கள் ' பொதுவாக ஒரு தொழிற்சங்கம் தனது நிர்வாகத்தை
திட்டும், நிறுவனம் பற்றி கவலையே கொள்ளாது. ஆனால் உங்கள்
நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உங்கள் சங்கம் மக்களிடம் செல்வது
பாராட்டுக்குரியது. அனைவருக்குமான முன்னுதாரணம்" என்று
சொல்லி ஒரு சங்கம்னா இப்படித்தான் இருக்கணும் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டு போனார்கள், எனக்கு மிகவும்
பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது என்றார் அவர்.
அவருக்கு மட்டுமல்ல எனக்கும்தான். இதே அனுபவத்தை பல
தோழர்களும் பல கிளைகளிலிருந்தும் பகிர்ந்து கொண்ட போது
உண்மையிலேயே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்து சந்தானம்
போல "சங்கமடா" என்று உரக்க முழக்கமிட வேண்டும் என்றே
தோன்றியது.
பகிர்வுக்கு நன்றீ... வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.